ஞாயிற்றுக் கிழமை காலை வேளையில் கம்மங்கூழை வயிறு குளிரக் குடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சுந்தரத்தைக் காண சோமு வந்தார்.
அவர் வந்ததை சுந்தரம் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்.
சோமுவிற்கு என்னவோ போல் இருந்தது. இருப்பினும் மகனின் வேலை விசயம் என்பதால் பேச தயாரானார்.
“வணக்கம் சுந்தரம் சார்.”
“அடடா! அடடா! என்ன சுவை, நீரில்லாத ஓடையில் திடீரென்று நீர் வந்து குளிர்வது போல், வயிறு குளிர்கிறது.” என்று வணக்கம் சொன்ன சோமுவை கண்டு கொள்ளாது பேசினார் சுந்தரம்.
பின்னர் “வாங்க சோமு, என்ன விசயம்?” என்றார்.
“இல்ல சார், என் மகன் வேலை விசயமா உங்ககிட்ட சொல்லி இருந்தேன்.”
“ஆமாம், ஆமாம்; நாளைக்கு இன்டர்வியூ. காலையில் 10 மணிக்கு வரச் சொல்லுங்க. அப்புறம் அந்த பணம் வந்தாதான் அப்பாயின்ட்மெண்ட். அத சீக்கிரம் கொடுத்துருங்க.”
“நாளைக்கு இன்டர்வியூக்கு பையன் வரும்போது அவனிடம் கொடுத்து அனுப்புறேன் சார். ரொம்ப நன்றி” என சொல்லிவிட்டு புறப்பட்டார்.
மகனின் வேலை உறுதியானதை எண்ணி மகிழ்ந்து கூழ் குடிக்காமலே சோமுவின் மனமும் வயிறும் குளிர்ந்தது.
வீட்டிற்கு சென்ற சோமு, தன் மகனிடம் வேலை உறுதியானதைக் கூறினார்.
அதனைப் பெரிய விசயமாகக் கொள்ளாமல் “அப்படியா, சரிப்பா” என்றான் மகன்.
அடுத்த நாள் சோமு தன் மகனிடம் பணத்தைக் கொடுத்து இன்டர்வியூக்கு அனுப்பினார்.
சூப்பர் மார்க்கெட் வைத்து நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் சோமுவிற்கு அந்த பணம் பெரிதில்லை.
இன்டர்வியூக்குச் சென்ற ஆபிஸில் பத்து பேர் வரிசையாக இன்டர்வியூக்கு அமர்ந்திருந்தனர். அலுவலகத்தில் சுந்தரத்தைப் பார்த்து இன்டர்வியூ கார்டைக் கொடுத்தான் சோமுவின் மகன்.
டிப்டாப்பாக வந்த சோமுவின் மகன், கையில் ஃபைலை வைத்துக் கொண்டு சிந்தனை செய்து கொண்டிருந்த ஒருவரின் பக்கத்தில் அமர்ந்தான்.
சோமுவின் மகனிடம் அந்த நபர் மெதுவாக பேச தொடங்கினார்.
“சார் உங்களுக்கு இது எத்தனையாவது இன்டர்வியூ?”
“இல்ல சார், இதுதான் முதல் இன்டர்வியூ. ஏன் கேட்குறீங்க?”
“இல்ல சார், எனக்கு இது ஐந்தாவது இன்டர்வியூ. படிச்ச படிப்புல கோல்ட் மெடல் சார். ஆனா, வேலை கிடைக்க மாட்டேங்குது. எங்க போனாலும் மனசாட்சி இல்லாம பணம், சிபாரிசுன்னு ஏதாவது கேட்குறாங்க. திறமையை யாரும் பார்க்கிறதில்ல சார்.
என்னை மாதிரி ஏழைகள் எல்லாம் நல்லா படிச்சிருந்தாலும் வாய்ப்புகள் குறைவுதான் சார். இந்த வேலையாவது கிடைக்கனும்முன்னு ஆண்டவன வேண்டுறத தவிர வேற எதுவும் என்னால செய்ய முடியாது சார்.” என மடை திறந்த வெள்ளம் போல பேசி முடித்தார் அந்த ஏழை இளைஞர்.
சோமு வீட்டிற்கு வந்ததும் தன்னுடைய மகனைத் தேடினார். அவன் மாடியில் இருப்பதாக மனைவி கூறினார்.
மாடிப்படிக்கு முன்பு டேபிளில் சோமு கொடுத்தனுப்பிய பணம் அப்படியே இருந்தது. சோமு பதறிப் போய் மாடிக்குச் சென்றார்.
“என்னப்பா, பணத்த எடுத்துட்டு வந்திருக்க. ஆபிஸில சுந்தரம் இல்லையா?” என்றார்.
“அப்பா, பணம் கொடுத்து மற்ற திறமையுள்ள இளைஞர்களின் வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள என் மனம் இணங்கவில்லை. என் படிப்பிற்கு, என் திறமைக்கு என்ன வேலை கிடைக்குமோ அத நானே தேடிக்கிறேன்பா.”என்றான் சோமுவின் மகன்.
தன் மகன் கூறியதைக் கேட்ட சோமுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகனை கட்டி அணைத்துக் கொண்டார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது ஆனந்தமாக. தன் மகனை சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம் என மனதில் மகிழ்ந்தார்.
நம் மனதிற்கு வேறு சாட்சி தேவையில்லை.
மனசாட்சி உறுத்துகின்ற எந்த செயலையும் செய்யாமல் வாழ்வதே சிறந்த வாழ்வு.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!