மனதின் பக்கங்களோ?

என் படுக்கையறை

என் இமைகளின்

மூடலுக்குப் பிறகு

பிணவறையாக உருமாற்றம் கொள்கிறது!

ஒவ்வொரு இரவும்

கனவுகளின் பெருவெளியில்

கை உடைந்த குருடனும்

வாய் பேசாத நொண்டியும்

விழிகள் மூடாத செவிடனும்

வயிறுப் பெருத்த குண்டனும்

உதடு வெடித்து

தேகம் மெலிந்த

பெருநோய்க்காரியின் விசும்பலும்

மாறி மாறி என்

எண்ணங்களின் ஓட்டத்தில்!

ஒப்பாரிக் குரலோடு

நரம்புகள் புடைக்க

நாற்றத்தின் நெடி

நாசிகளில் ஏறுகிறது!

மூச்சித் திணறலோடு

கருவிழிகள் பிதுங்க எழுகிறேன்!

யார் இவர்கள்?

ஏனிந்த ஜாலம்?

எல்லாமே என்

மனதின் பக்கங்களோ?

அப்படித்தானென்று

என்னைப் பார்த்து

ஏளனமாய் சிரிக்கிறது

பக்கத்தில் படுத்திருந்த

கரடி பொம்மை!

கவிஞர் விசித்திரக்கவி
கைபேசி: 9080231403

Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.