யாரும் இல்லை
நான் மட்டும் தனியே
வெளியே செல்லும் எண்ணமில்லை
தனிமைக்கு
துணை வேண்டும்
தெரியவில்லை வழி எதுவும்
அமைதியான மதிய வேளை
கரிய மேகங்களின் ஓலமிடும் சத்தம்
வெளிச்சத்தை துரத்தும் இருள்
மறைந்தது சூரியன்
என் அறை பூண்டது இருள்
போராளிகளின் அடிதடி சத்தம் கேட்டது
காரணம் தெரியவில்லை
எட்டிப் பார்த்தேன் வெளியே
மழை!
கண்களின் சந்தோஷம்
மனதிற்கு எட்டியது
எண்ணங்களின் துள்ளல்
வார்த்தைகளைத் தூண்டியது
அவைகளின் துணைகளைத் தேட
துணைகளா எவை அவை?
உதிக்கும் சூரியனுக்கு
அதன் வெளிச்சம் துணையா
வாழும் பூமிக்கு
அதன் உயிர்கள் துணையா
பாடும் குருவிக்கு
அதன் ராகம் துணையா
வளரும் கொடிக்கு
அதன் கம்பம் துணையா
ஆடும் தேவதை மயிலுக்கு
அழகிய தோகை துணையா
பாயும் முயலுக்கு
அதன் வேகம் துணையா
சீறும் பாம்புக்கு
அதன் பயம் துணையா
பறக்கும் கழுகிற்கு
அதன் கூர்மை துணையா
துரத்தும் புலிக்கு
அதன் கம்பீரம் துணையா
காட்டின் அரசிற்கு
அதன் கர்ஜனை துணையா
வென் பனியாளன் போலார் கரடிக்கு
அதன் பனிகள் துணையா
மாயாஜாலக்காரன் குள்ளநரியனுக்கு
அவன் தந்திரம் துணையா
பட்டாடைக்காரி பட்டாம் பூச்சிக்கு
வண்ணங்கள் துணையா
நறுமண நாயகியாம் பூவிற்கு
புன்னகை மலர்தல் துணையா
மேலத் தலைவனாம் பேரிடி அவனுக்கு
சத்தங்கள் துணையா
உலகத்திற்கே ஓர் படுக்கை
பார்புகழ் போற்றும் பெயர் படுக்கை
வானத்து தேவதையாம்
அவளுக்கு நட்சத்திரங்கள் துணையா
சின்ன சின்ன கல் கொண்டு
பெரிய பெரிய குகை கொண்டான்
மலையன் அவனுக்கு
அடர்வனங்கள் தான் துணையா
அடர்த்தியாய் ஆடை போர்தினாள்
பசுமையாய் வண்ணம் கொண்டாள்
உயிர்களின் வாழ்விடமானாள்
மனிதர்களின் உறவுமானாள் இயற்கையவள்
கொடுப்பதுதான் அவளின் துணையா
சின்ன சின்ன பாதம் கொண்டு
பெரிய பெரிய வேலை கொண்டு
சிற்றெரும்பாய் ஊர் சுற்றுவான்
சுறுசுறுப்பு தான் இவன் துணையா
வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டு
தட்ட தட்ட தாங்கி கொண்டு
எதுவும் சொல்லாமல் இருப்பாள்
ஆணித்தரமாக மரமானவள்
பொறுமைதான் இவள் துணையா
தள்ள தள்ள வழுக்கிக் கொண்டு
ஊரெல்லாம் சுற்றிக் கொண்டு
மேடுபள்ளம் தாண்டிக் கொண்டு
வாழ இடம் அமைத்துக் கொள்ள
தண்ணீராய் வடிவெடுத்தாள்
துணிச்சல்தான் இவள் துணையா
படாத கஷ்டங்கள் பட்டு பிறவிகளில்
ஆணாய் பிறந்து சோகம் வெளிக்காட்டாமல்
இருப்பதால் தைரியம்தான்
அவன் துணையா
பார்வையில் ஈர்க்கப்படுவாள்
அன்பால் அரவணைப்பாள் அதனால்தான்
தன்னைக் காக்க மனதை துணையாய் கொண்டாளோ
அந்த மன தைரியம்தான் இவள் துணையா
பிறக்கும் போது ஓர் இனம்
வாழும் போது தான் விரும்பிய இனமாக
மாறியதால் தன்னை எதிர்ப்போரை
தாங்கத்தான் தன் வலிகளையே
துணையாகக் கொண்டாளோ
அதனால் தான் மதிப்பளிக்கத்
தன்முன் திருவைத் துணை கொண்டாளோ
அந்த திரு தான் அவளது துணையா
ஒவ்வொருவருக்கும் ஓர் துணை
விலங்குகளோ மனிதர்களோ
அவர்களுக்கு எதில் துவங்குகிறது இந்த துணை
யாரிடம் துவங்குகிறது என்றால்
பதில்
அவரவர் மனதிடமே உள்ளது
ஏனெனில் அனைவருக்கும் எப்பொழுதும்
அவரவர் மனமே துணை!
கு.சிவசங்கரி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!