மனம் என்பது ஆத்மாவில் ஒரு தோற்றமாக மட்டுமே இருக்கிறது. இது விழிப்பு நிலையில் காணப்படுகிறது. தூக்கத்தில் நாம் இன்னார் என்ற நினைவோ, வேறு எந்த நினைவோ, உலகமோ ஒன்றுமில்லை.
பார்ப்பது எது? தோன்றி மறையும் அகந்தைதான்.
அகந்தைக்கு அப்பால் நினைப்பற்ற என்றும் இருக்கும் ஆத்மாவாகிய அந்த மெய்யுணர்வே நாம்.
தூக்கத்தில் மனம் அப்போதைக்கு லயித்திருக்கிறதே தவிர அழியவில்லை. அதனால்தான் மீண்டும் கிளம்புகிறது. தியான சாதனையிலும் அதுபோலவே நிகழ்கிறது எனலாம்.
அழிந்த மனமோ மீண்டும் கிளம்பாது. தியானத்தில் ஏற்படும் சாந்தியில் மனதை இல்லாமல் செய்ய வேண்டும்.
நாம் சாதிக்க வேண்டியது மனநாசமே. ஆத்மாவாகிய தன்னைவிட வேறானதாக மனம் என்ற ஒன்று இல்லை என்று நேராக உணர்வதே மனோ நாசமாகும்.
ஈஸ்வரன் ஆத்மாவிலிருந்து வேறானவன் அல்ல. அவனே ஆத்மஸ்வரூபன்.
ஆத்மாவை விசாரித்து அறிந்து கொள்வது என்பது ‘ஆத்மா அல்லாதது (அநாத்மா) இது’ என்று விவேகத்தின் மூலம் ஆராய்ந்து ஒதுக்குவது தான். அப்போது ஸ்வயம் பிரகாசமான ஆத்மா தானாகவே பிரகாசிக்கும்.
ஞான ஜூவாலையில் மனம் எரிந்து ஒழிவதுதான் கற்பூர ஒளி காட்டுவதன் உட்பொருள். திருநீறு ஞானக்கினியில் எல்லாம் எரிந்த பிறகு மிஞ்சுகின்ற அகண்ட சத் ஸ்வரூபத்தைக் குறிக்கும்.
குங்குமம் ஸ்வரூப அனுபதிமயமாகிய சித்சக்தியைக் குறிப்பிடுகிறது. மேலும் பரா, அபரா என்று விபூதி இரண்டு வகைப்படும்.
அவற்றில் அகண்டாத்ம ஸ்வரூபமே பரா விபூதி ஆகும். அதை நினைவுபடுத்தும் அடையாளமாகிய திருநீறு அபரா விபூதி ஆகும்.
மனம் தேயத் தேய ஆத்ம ஸ்வரூபம் மென்மேலும் மறைப்பின்றி பிரகாசிக்கும். மனம் முற்றிலும் அகன்றால் எந்தத் தடையும் இல்லாமல் இயல்பாக ஆத்ம ஸ்வரூபம் விளங்கும்.
அங்கே பல ஜீவர்களில்லை. பிறப்பில்லை, இறப்பில்லை, எந்தத் துன்பமும் ஒருசிறிதும்கூட இல்லை.
அகம் என்னும் பெட்டிக்குள் ஆத்மா என்னும் விலை மதிக்க முடியாத பொருள் இருக்கிறது. அதற்குள் நீ செல்வாயானால் அதை நீ பெறுவாய்.
இஷ்ட தெய்வ உருவத்தில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். விரும்பும் போதெல்லாம் உள்ளிருக்கும் இஷ்டதெய்வதோடு தொடர்பு கொள்ள இஷ்டதெய்வத்தின் நாமத்தை ஜெபித்து வர வேண்டும். இறைவடிவத்தைத் தியானம் பண்ண வேண்டும்.
முதலில் தெய்வத்தின் வடிவம் அல்லது ரூபத்தின் மீது, பின்னர் அவருடைய தருணங்களைக் குறித்து இறுதியில் அவரது அகண்ட ஸ்வரூபத்தைக் குறித்து படிப்படியாகத் தியானத்தில் முன்னேற வேண்டும்.
ஈசனின் சாந்நித்தியத்தை உணரவும், பேரன்பையும், பேரானந்தத்தை உணரவும் உதவும் ஆன்மீகப் பாதையில் ஒவ்வொரு அங்குலத்தையும் நன்கு அறிந்தவர்களாக நிதானமாக ஆனால் உறுதியாக இருந்து லட்சியத்தை அடைவோம்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!