லேசாக இருட்டத் தொடங்கியது; தெரு விளக்குகள் எரியத் தொடங்கின.
எட்டிப் பார்த்தேன்; வாசலில் உள்ள கம்பத்தில் மட்டும் விளக்கு எரியவே இல்லை.
வாசலில் இரும்பு கேட் மூடி உள்ளே பல்பு எரிந்து கொண்டுதானிருந்தது.
இருந்தாலும் எனக்கு, என்னவோ தெரு விளக்கு எரிந்தால் தான் பயமில்லாமல் இருக்கும்.
எனக்கு இப்போது எண்பது வயதுதாகிறது. ஆடி ஓடி அடங்கி விட்டது வாழ்க்கை. இப்போது, எதோ உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வாழ வேண்டிய நாட்களில் ஓடிக் கொண்டிருந்தேன். இப்போதான் ‘வாழ வேண்டும்’ என்ற எண்ணமே தலைதூக்கி ஆடுகிறது; பார்த்ததற்கு எல்லாம் ஆசைப்படுகிறது மனது.
பணத்திற்கு, வசதிக்கு, ஒன்றும் குறைவில்லை என்றாலும், நினைப்பதை அடைய முடியாமல் வயது முட்டுக்கட்டை போடுகிறது.
மண்ணைத் தின்றாலும் மறுபடியும் பசிக்கும் காலத்தில் சாப்பிட நேரமில்லை.
சோர்வாக இருந்தாலும் பணத்தின் மீதான ஆசை என்னை தூங்க விடவில்லை; சற்றும் ஓய்வெடுக்க விடவில்லை; சொந்த பந்தத்தை பார்க்க விடவில்லை.
‘பசங்களை வளர்க்க வேண்டும்; அதுவும், அக்கம் பக்கம் உள்ளவர்களை காட்டிலும், சொந்த பந்தங்களை காட்டிலும், எல்லோராலும் பேசப்படவேண்டும் வகையில் சிறப்பாக.
இதுமட்டுமல்ல என் ஆசை; எனக்கென்று ஒரு மரியாதை, என் அளவுக்கு யாருமே இந்த ஊரில் இல்லை’ என்ற அளவுக்கு என்ற ரீதியில் தான் சென்றது என் மனக்குதிரை.
நினைத்தது போலவே எல்லோரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு உயர்ந்தேன்; என்ன செய்கிறேன் என்று அப்போதெல்லாம் தெரியவில்லை எனக்கு; ஓடிக் கொண்டே இருந்தேன்.
பணம் என்ற ஒன்றே என் பார்வையில் இருந்தது. பசி என்னை தூண்டிப் பார்க்கும்; அலட்சியப்படுத்தினேன்.
தூக்கம் விரட்டிக் கொண்டு வரும்; கண்களை துடைத்துக் கொண்டு ஓடினேன்.
பிள்ளைகள் பார்த்ததை எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்; கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்தேன்.
கஷ்டத்தை இஷ்டப்பட்டு தேடினாலும் தெரியாத அளவுக்கு வளர்த்தேன்.
கால ஓட்டத்தில் காசின் மீது பற்று கொண்ட என்னை போலவே, பிள்ளைகளும் வெளிநாட்டில் கை நிறைய இல்லாமல் பை நிறைய சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.
எல்லோருக்கும் திருமணம் ஆனது; வெளிநாடு சென்றார்கள்.
வருடம் ஒருமுறை வருவார்கள். நாள், கிழமை என்று இல்லாமல், எப்போது லீவு கிடைக்குமோ அப்போதுதான் வருவார்கள்.
இப்போது தான் மனம் லேசாக பண்டிகையை கொண்டாட நினைக்கிறது; ஆனால், வீட்டில் வெற்றிடங்களும் ஏக்கங்களும் மட்டுமே நிறைந்து இருக்கின்றன.
சாப்பிட வேண்டிய காலங்களில் சாப்பிட நேரமில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது நேரம் இருக்கிறது; சாப்பிட முடியவில்லை. காரணம் வியாதியுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
வேலை, வெட்டி எதுவுமே இல்லை; ஆனால் தூக்கம் தொலைதூரம் போய் விட்டது; அது என்னிடம் வருவதே இல்லை.
இன்றும், அன்று இருந்த அதே வசதி வாய்ப்புகள்; ஆனால், அனுபவிக்க அதே உடல் இல்லை. வயதிற்கேற்ப உடல் மாறியது; வசதிக்கேற்ப வாழ்க்கை மாறியது.
ஆனால் மனம் மட்டும் தலை கீழாக இருக்கிறது. செய்ய வேண்டிய காலங்களில் செய்ய விடவில்லை; அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிக்க விடவில்லை.
எனக்கென்னமோ மனம் என்று ஓன்று இல்லவே இல்லை. இருந்திருந்தால் செய்ய வேண்டிய காலத்தில் செய்ய வைத்திருக்கும். இப்போது நினைத்து என்ன செய்ய?
நினைவுகளில் மூழ்கிருந்த நேரத்தில் யாரோ வாசலில் நின்றது தெரிந்தது.
பாஸ்கர்!
சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு மெல்ல வீட்டு கேட்டை திறந்தார் பாஸ்கர்.
இப்போதெல்லாம் எனக்கு சற்று ஆறுதல் தரும் நபர் இவர்தான்.
எனக்கு உதவிக்காக எனது பிள்ளைகள் ஏற்பாடு. இரவில் மட்டும் துணைக்காக வந்து என்னுடன் தங்குவார்.
வாழ்வில் விட்டுப்போன வார்த்தைகள், பேச மறந்த வார்த்தைகள் இவையெல்லாம் இவரிடம் தான் கூறுவேன்.
காசுக்காக கேட்டுக் கொண்டே இருப்பார்; பதில் பேசமாட்டார். நானும் ஆவலாக கேட்பதாக நினைத்து பேசிக் கொண்டே இருப்பேன்.
எனக்கு இரவில் பார்வை அந்த அளவுக்கு தெரியாவிட்டாலும், ஓரளவு தெரியும். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருப்பேன்.
குறிப்பிட்ட நேரம் முடிந்தும் எந்த அசைவும் இல்லையென்றால், அவர் முகத்தை பார்ப்பேன்.
அப்போதுதான் தெரியும் அவர் தூங்கி விட்டார் என்று. மெல்ல எழுந்து நானும் படுக்கைக்கு சென்று விடுவேன்.
இன்று எனக்கு சற்று அலுப்பாக இருந்தது. ‘எதுவும் பேசாமல் தூங்க போகலாம்’ என்று இருந்தேன்.
அப்போது தான் தொலைபேசி சத்தம் கேட்டு எடுத்து பார்த்தேன். மகனிடமிருந்து.
நலம் விசாரித்தான்; நானும் விசாரித்தேன். வேறு ஒன்றும் பேச நேரமில்லாதவனைப் போல் பேச்சை நிறுத்தும் தொனியிலிருந்தது அவன் பேச்சு.
நான் தொடங்கினேன். “என்னோட, நண்பர்கள் சில பேருக்கு, போன வாரத்தில் தான் சதாபிஷேகம் மிக சிறப்பாக நடந்தது.
நானும் போய் இருந்தேன். பிள்ளைகள் எல்லோரும் சொந்த பந்தங்களுடன் சிரிப்பு சந்தோசம் ஆட்டம் பாட்டம். எப்படியெல்லாம் இருந்திச்சி தெரியுமா?”
நான் நடந்ததை எல்லாம் ஓன்று விடாமல் பேசிக் கொண்டே இருந்தேன். அங்கிருந்து பதிலே இல்லை.
நான் கேட்டேன் “என்னப்பா காதில விழுதா?”
“ம்.. ம்.. அப்பா, எனக்கும், அதை போலவே செய்து பார்க்கணும் ஆசைதான். என்ன செய்ய? இப்போ தான் ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு.
லீவு போடாம வேலை பார்த்தாகணும் ஒரு வருசத்துக்கு; நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.!
எல்லா ஏற்பாடும் இங்கிருந்தே செஞ்சிடுவேன். ‘ஜாம் ஜாம்’னு பண்ணிடுவோம். என்ன சொல்றீங்க?” கேட்டுக் கொண்டிருந்தான்.
இப்போ எனக்கு பேச வரவில்லை.
முதலில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வந்தவன், அப்புறம் ஒரு வருடத்திற்கு, ஒருமுறை வந்தவன், மெல்ல மெல்ல நான் இருப்பதை நினைவுபடுத்தினால் வரத் தொடங்கியவன், இன்று கடமைக்குக் கூட வர முடியாத நிலைக்கு வந்து விட்டான்.
துக்கம் தொண்டையை அடைத்தது; ஆனாலும், கண்ணீர் எல்லாம் வரவில்லை.
ஏனென்றால், என்னிடம் கண்ணீர் கையிருப்பில்லை; தீர்ந்து பல நாட்களாகி விட்டது.
தொலைபேசியை துண்டித்து விட்டேன். இப்போது பாஸ்கரை திரும்பி பார்த்தேன்.
இன்று என்னவோ அவர் தூங்கவே இல்லை என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்; சிறு புன்னகையுடன் படுக்கைக்கு சென்றேன்.
மறுநாள் என்ன நடந்தது என்று பாஸ்கருக்கு மட்டும் தான் தெரியும்.
பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை