“குரு, என்னடா பண்ற? பள்ளிக்கூடம் வரலியா?” பள்ளி செல்லும் வழியில் சாலையின் ஓரமாய் நின்றிருந்தவனிடம் மூர்த்தி கேட்டான்.
“நீ போடா. நான் வந்துடுறேன்.”
மூர்த்தி சென்றான். அடுத்த நாள் அதே நேரம் மூர்த்தி வந்தான்.
“டேய் குரு, என்னாச்சு உனக்கு? தினமும் எனக்கு முன்னாடியே பள்ளிக்கூடம் பொய்டுவ. ரெண்டு நாளா பொறுமையா வர. என்னடா சங்கதி?”
“அதெல்லாம் ஒன்னுமில்லடா. நீ போ”
மூர்த்தி என்னன்னு தெரிந்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான். சிறிது தூரம் சென்று ஒரு மரத்தின் பின்னே மறைவாய் நின்று பார்த்தான்.
சிறிது நேரத்தில் அங்கே ஒரு மாட்டு வண்டியில், நிறைய நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கிழவர் ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.
குரு இருந்த இடம் மேடான பகுதி. அந்தப் பகுதியைக் கடக்க முடியாமல் வண்டி தடுமாற, குரு ஓடிச் சென்று வண்டியைத் தள்ளி விட்டான்.
கிழவர் குருவின் உதவியால் மேட்டைத் தாண்டினார்.
“ரொம்ப நன்றிப்பா குரு” என்றார் கிழவர்.
இப்போதுதான் மூர்த்திக்கு விவரம் புரிந்தது. குருவின் மனப்பான்மையை நினைத்து மகிழ்ந்தான்.
பள்ளிக்குச் சென்று தமிழாசிரியர் தாமோதரன் அய்யாவிடம், குரு செய்த உதவி பற்றி கூறினான்.
வகுப்பிற்கு சென்ற தமிழாசான், குருவை எழுப்பி அவன் செய்த அருமையான செயலை அனைத்து மாணவர்களுக்கும் கூறி, அவனை கைத்தட்டி பாராட்டினார்.
மேலும் அவர் “மாணவர்களே, இருப்பது ஒரு வாழ்வு. அதனை நமக்காக மட்டும் வாழாமல் மற்றவருக்காகவும் வாழ வேண்டும்.
தினமும் அனைவரும் பிறர் துன்பத்தை துடைக்க, குருவை போல் காத்திருந்து உதவ வேண்டும்.
பிறருக்கு உதவ எப்போதும் தயாராக இருக்க வேண்டும். பிறர் துன்பத்தை துடைக்க உதவுவதே மனிதநேயமாகும்.” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அடுத்த நாள் மூர்த்தி இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினான்.
ஒரு மாணவன் மீன் கூடையை தூக்க சிரமப்பட்ட பாட்டிக்கு உதவினான்.
அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவன் ஒருவன் கண் தெரியாத இருவர் சாலையை கடக்க உதவினான். இதுபோல் மனிதநேயம் மலர்ந்தது குருவினால்.
அடுத்த நாள் பள்ளி வழிபாட்டு கூட்டத்தில் தலைமையாசிரியர் பேசும்போது மனிதநேய உள்ளம் கொண்ட அனைத்து மாணவர்களையும் பாராட்டிப் பேசினார்.
பள்ளியில் படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களும் மனிதநேயத்தை மனதில் வளர்த்து பிறருக்கு உதவ வேண்டும் என்றார்.
“மகத்தானது மனிதநேயம்
மகிழ்வானது மனிதநேயம்
உயர்வானது மனிதநேயம்
உணர்வானது மனிதநேயம்
உயிரானது மனிதநேயம்
உன்னதமானது மனிதநேயம்
உலகை ஆளும் மனிதநேயமே”
என்று தமிழாசிரியர் தாமோதரன் கூற மாணவர்கள் அனைவரும் திருப்பிக் கூறினர்.
வாழ்வோம் மனிதநேயத்தோடு
வளர்வோம் மனிதநேயத்துடன்.
இளைய சிறுகதை மன்னனே விரைவில் தமிழகம் உன் பெயர் சொல்லும் -மாவை