காற்றின் திசையில் கண்கள் போயின்
கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்
மாற்றம் கொண்டு மனிதனே நீயும்
போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு
ஏட்டைப் புரட்டிப் படித்தால் மட்டும்
ஏற்றம் கண்டிட இயலாதெனவே
எங்கும் நல்லோர் கேண்மை கொண்டு
என்றும் நல்ல மனிதனாய் வாழ்ந்திடு
மேடையில் மட்டும் மனிதம் பேசி
மேலோர் வாக்கை நீயும் மிதித்தால்
மேலோன் கையால் என்றும் உனக்கு
மீளாத் துயரம் தானாய்த் தரப்படும்
மனிதப் பிறவியின் மதிப்பை உணர்ந்து
கனிவுடன் கருணை கண்ணியத்துடன்
கணக்காய் நீயும் வாழ்வாய் எனினே
காலன் கூடக் கையைக் கூப்பிக்
காலைப் பணிந்து கண்ணீர் வடிப்பான்
கருணை வடிவாம் காரிகை அவளையும்
கயமை உணர்வுடன் கண்டுநீ ரசித்தால்
காட்டுத் தீயாய்க் கடும்துயர் சூழ்ந்து
வாட்டும் பாவத்தால் வருந்தி அழிந்திடுவாய்
மண்ணில் வாழும் வாழ்க்கை சிறிது
மனிதா அதையும் மாண்பாய் உணர்ந்து
மாற்றம் மட்டுமே மாறிடா உலகினில்
மனிதராய் நாமும் வாழ்ந்து மரணிப்போம்