மனிதனை காக்கும் மெலனின்

வண்ணங்கள் ந‌ம் வாழ்வோடு ஒன்றர கலந்தவை. பச்சை நிற காய்கறிகள், இளஞ்செந்நிற கோதுமை,  ஆரஞ்சு நிற கேரட், சிவப்பு நிற மிளகாய், மஞ்சள் தூள் உள்ளிட்ட பல வண்ண உணவு பொருட்கள்  ந‌மது வாழ்விற்கு அத்தியாவசிமாக இருக்கின்றன.

நமது அன்றாட வாழ்வில் ப‌யன்படுத்தும் எண்ணற்ற பொருட்களும், உடை,  உறைவிடம்  உள்ளிட்ட அனைத்து தேவைகளும் ப‌ல வண்ணங்களை பெற்றுள்ளன.

சரி,  நம் வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதும், அத்தியாவசியமானதுமான பொருட்களின் வண்ணத்திற்கு காரணம்  என்ன? அவற்றில் இருக்கும் நிறமிதான்.

ஆம். பொருட்களுக்கு நிறத்தை கொடுப்பது அதில் இருக்கும் நிறமிகளே. இதற்கிடையில் ஒரு நிறமி நம்மை கடும்வெயிலிலிருந்து காக்க உதவுகிறது. அதுதான் மெலனின்! இதை பற்றி பார்போம்.

 

மெலனின் என்றால் என்ன?

’மெலனின்’ என்ற சொல்லானது ’மிலாஸ்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து பெறப்பட்டது. மிலாஸ் என்பதற்கு ’கருமை‘ என்று பொருள்.

மெலனின், கருப்பு நிறத்தை கொடுக்ககூடிய ஓர் இயற்கை நிறமியாதலால் (கரிம வேதிபொருள்), இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. பல காரணிகளை பொருத்து மனித தோலின் நிறம் அமைந்தாலும், அதில் முதன்மை காரணியாக இருப்பது மெலனின்தான்.

இது மனித தோலில் இருக்கும் அளவை பொருத்து, அவரின் நிறம் நிர்ணயிக்கப்படுகிறது. மெலனின்நிறமி அதிகமாக உள்ளவர்கள் க‌ருமை நிறமாக இருப்பார்கள். ஒருவரின் உடலில் இருக்கும் மெலனின் அளவானது அவரது மரபு பண்பை அடிப்படையாக கொண்டது.

 

மெலனின் உற்பத்தி

மெலனின் நிறமியானது உடலில் இருக்கும் மெலனோசைட்டு செல்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது இச்செல்களில், டைரோசின் எனும் அமினோ அமிலம் ஆக்சிகரணம் (ஆக்சிஜன் க‌ரிம பொருளோடு சேர்தல்) அடைந்து பின்னர் ப‌லபடியாக்கல் (எண்ணற்ற தொகுதிகள் சேர்ந்து நீண்ட மூலக்கூறினை உருவாக்குதல்) வினைக்கு உட்பட்டு மெலனின் உற்பத்தியாகிறது.

மெலனின்
மெலனின்

 

மெலனின்வகை

மெலனினை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர் விஞ்ஞானிகள். அவை முறையே, இயூமெலனின், ஃபியோமெலனின் ம‌ற்றும் நியூரோமெலனின் ஆகும்.

இதில், இயூமெலனினானது, செந்நிற இயூமெலனின் ம‌ற்றும் க‌ருமை நிற இயூமெலனின் என்று இரு வகையாகப் பிரிக்கப்படுகிறது. தோலின் நிறத்திற்கு காரணம் இயூமெலனின்.

’சிஸ்டைன்‘ எனும் அமினோ அமிலத்தை அடிப்படை பொருளாக கொண்ட ஃபியோமெலனின், தலைமுடியின் செம்பட்டை நிறத்திற்கு காரணமாக இருக்கிறது.

நியூரோமெலனின் மூளையில் இருக்க கூடியது.

 

மெலனின்அளவு

பொதுவாக பூமியின் நிலப்பரப்பை பொறுத்து மனிதர்களின் (தோலின்) நிறம் அமைகிறது. குறிப்பாக புற ஊதா கதிரின் தாக்கம் அதிகமுள்ள‌ பகுதிகளில் (பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருக்கும் ப‌குதிகள்) வாழும் ம‌க்கள் க‌ருமை நிற தோலினை பெற்றிருக்கின்றனர். அதாவது,  இவர்களது தோலில் அதிக அளவு மெலனின் இருக்கிறது.

பூமியின் துருவப்பகுதிக்கு அருகாமை பகுதிகளில் வாழும் ம‌க்கள் குறைந்த அளவு மெலனினை பெற்றிருப்பதால், இவர்களது தோல் வெள்ளை நிறமாக இருக்கிறது.

மேலும், மெலனின், ஒருநபரின் உடல் முழுவதும் ஒரே அளவாக இருப்பதில்லை. உதாரணமாக ஒருவரின் உள்ளங்கையில் இருக்கும் மெலனீனின் அளவு, உடலின் ம‌ற்ற பாகங்களை காட்டிலும் மிகக்குறைவு. எனவே தான், ஒப்பீட்டளவில் உள்ளங்கை வெள்ளையாக இருக்கிறது.

 

மெலனின்இயற்கை தகவமைப்பு

சூரிய ஒளியின் தாக்கம் தொடர்ந்து (நீண்ட காலமாக) அதிகமாக இருக்கும் பொழுது, ஒருவரது தோலின் இயற்கையான நிறம் க‌ருமையாக மாறுகிறது.

இயற்கை தேர்வு கொள்கையின் அடிப்படையில் ம‌னித உடலின் நிறம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இது, சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிரின் தாக்கத்தில் இருந்து நம்மை தற்காத்து கொள்ளவதற்காக நம்உடல் தானாக எடுத்த நடவடிக்கையாகும்.

சரி, ஓசோன் ப‌டலமானது புற ஊதா கதிரை வடிகட்டி விடுகிறதே? புற ஊதா கதிரின் விளைவு என்ன? அதன் தாக்குதல் க‌டுமையானதா? என கேள்விகள் எழுகிறது. இதற்கான விடையை பார்போம்.

வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் ப‌டலம், அதிக அளவு ஆற்றல் உடைய புற ஊதா கதிர் – சி மற்றும் பி-யை உறிஞ்சிக் கொள்கிறது.

சி- மற்றும் பி-வகைபுற ஊதா கதிரை க் காட்டிலும் குறைந்த ஆற்றல் உடைய ஏ –வகை புற ஊதா கதிரே பூமியை வந்தடைகிறது. இக்கதிரானது தோலின் அடிப்பகுதி வரையிலும் ஊடுருவி செல்லக்கூடியது.

தொடர்ந்து ஏ –வகை க‌திரின் தாக்கம் இருக்குமாயின் ம‌னித செல்களுக்குள் ஊடுருவி, மரபு பொருளான டி.என்.ஏ. சிதைக்கப்படலாம். இதனால், தோல் புற்றுநோய் உண்டாவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காகவே மனித உடல் இயற்கையாகவே, மெலனீனை அதிகமாக உற்பத்தி செய்து நம்மை காக்கிறது.

 

புற ஊதாகதிரின்தாக்கத்தை தடுக்கும்மெலனின்

புற ஊதா கதிரை (இயூ)மெலனின் எப்படி தடுக்கிறது? இதற்கான விடையை கண்டுபிடிச்சிருக்காங்க விஞ்ஞானிகள்.

அவர்களின் கூற்றுப்படி, ஏறத்தாழ நூறு சதவிகித புற ஊதா கதிரையும் இயூமெலனின் வெப்ப ஆற்றலாக மாற்றி விடுகிறது. இதற்கான வேதி வினை மிகமிக வேகமாக நிகழுவதையும் க‌ண்டுபிடிச்சிருக்காங்க.

அதாவது, புற ஊதா கதிர், தோல் ப‌குதியை அடைவதன் மூலமாக அங்கு இருக்கும் இயூமெலனின் நிறமியை தாக்குகிறது. அக்கண‌மே, புரோட்டன் அல்லது ஹைட்ரஜன் அயனி, நிறமியிலிருந்து வெளியேற்றப்படுகிறது. இவ்வயனி, மற்ற திசுக்களுடன் மோதி வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.

சுருங்க சொன்னால், புற ஊதா கதிர் இயூமெலனின் மூலமாக ஹைட்ரஜன் அயனியாக மாறி பின்னர் வெப்பமாக மாறுகிறது. இவ்வெப்ப ஆற்றல், புற ஊதா கதிர் போல் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படுவதில்லை.

மெலனின் நிறமியானது மனிதனுக்கு நிறத்தைக் கொடுப்பதோடு, அவனை ஆபத்தான கதிர்களிடமிருந்து காத்து வருவதை அறியும் பொழுது மகிழ்ச்சி உண்டாகிறது.

மேலும் இயற்கையின் நுட்பமான வேதியியல் ந‌மக்கு பிரம்மிப்பையும் ஏற்படுத்துகிறது.

– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் க‌னிம வேதியியல் துறை
கன்செப்ஷன் ப‌ல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com

One Reply to “மனிதனை காக்கும் மெலனின்”

  1. சிறப்பு சிறப்பு
    மெலனின் நிறமி என்ற அளவில் மட்டுமே தெரிந்திருந்தோம். அது அதைக் கடந்து சூரியக் கதிரின் பல்வேறு தாக்குதல்களிலிருந்து நம்மை காக்கிறது என்பதை ஆய்வாளரின் கட்டுரை வாயிலாக அறிந்து மகிழ்ந்தோம். தொடர்க.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.