மனித உரிமைகள்

மனித உரிமைகள் மனிதனால் இயற்கையாகப் பெறப்பட்டவை ஆகும். சமூகத்தில் மனிதன் சுமூகமாக வாழத் தேவையான நிலை உரிமை என்று அழைக்கப்படுகிறது. இவை இல்லையென்றால் மனிதனால் நலமுடன் வாழ இயலாது.

உரிமைகள் என்பன சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் நடைமுறைப் படுத்தப்படுவதாகும். மனித உரிமைகள் மனிதர்களின் முழு ஆளுமைத் திறனை வெளிப்படுத்தி அவர்களை முழுவளர்ச்சி அடையச் செய்கிறது. சமூக பொருளாதார உரிமைகளும் மனித உரிமைகளே.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் மனித உரிமைகளை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகளின் சபையின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மனித உரிமைகளை பாதுகாப்பதும்அதனை மதிப்புறச் செய்வதும் ஆகும்.

ஐ.நா.சபையின் ஆலோசனைப்படி மனித உரிமைகளை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஒரு மசோதாவை உருவாக்கியது. இம்மசோதா, ஐ.நா.பொதுச்சபையில் 1948, டிசம்பர் 10ல் நிறைவேற்றப்பட்டது. இதுவே அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது.

இப்பிரகடனம் மக்களிடையே சமத்துவத்தை உறுதி செய்கிறது. இது 30 சரத்துகளைக் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் நாள் மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இப்பிரகடனம் மக்களிடையே சமத்துவத்தை உறுதி செய்கிறது.

மனித உரிமைப் பிரகடனமானது 1) அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள், 2)பொருளாதாரம், சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

 

அரசியல் மற்றும் வாழ்வியல் உரிமைகள்

இது நவீன ஜனநாயகத்தோடு நெருங்கிய தொடர்புடையது. வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகளாவன மக்களின் வாழ்வு, சுதந்திரம் மற்றும் அவர்களின் பாதுகாப்பு உரிமைகள், அடிமை முறை மற்றும் சித்திரவதையில் இருந்து விடுதலை, சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் கருதப்படுதல், சொத்துரிமை, அரசியலில் ஈடுபடும் உரிமைகள் மற்றும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை, அனைத்து குழந்தைகளுக்கும் சமூக பாதுகாப்பு அளிக்கும் உரிமை, தாய் சேய் நலனில் பிரத்தியோக கவனம் செலுத்தும் உரிமை போன்றவைகள் ஆகும்.

 

பொருளாதாரம், சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள்

ஐ.நா.சபை சமூக பொருளதார மற்றும் பண்பாட்டு உரிமைகளை வழங்கியுள்ளது. அவைகளாவன. வேலை செய்யும் உரிமை சமமான வேலைக்கு சமமான ஊதியம் பெறும் உரிமை தொழிற்சங்கத்தை உருவாக்கவும் அதில் சேரவும் உரிமை, கல்வியறிவு பெறும் உரிமை, பண்பாட்டு களத்தில் சுதந்திரமாக பங்கேற்கும் உரிமை போன்றவைகளாகும்.

 

மனித உரிமைகள் பாதுகாப்பு

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.சபையின் உறுப்பினர் நாடுகளுக்கும் ஏற்புடையதாகும். 1966ல் ஐ.நா.சபை மனித உரிமைகளை பாதுகாக்க இரு ஒப்பந்தங்களை உருவாக்கியது. அவைகள்: 1)அனைத்துலக பொருளாதார, சமூக மற்றும் பண்பாட்டு உரிமைகள் ஒப்பந்தம், 2) அனைத்துலக வாழ்வியல் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம்.

ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் இவ்வுரிமைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க கடமைப்பட்டுள்ளன. 1933ல் வியன்னாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் வெளியிடப்பட்ட வியன்னா பிரகடனத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும் மேன்மையடையச் செய்வதும் பன்னாட்டு சமூகத்தின் சட்டபூர்வமான நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியது.

இதன்படி இந்திய அரசாங்கம் 1993ல் ஒரு சட்டம் இயற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை டெல்லியில் 1993ல் ஏற்படுத்தியது. மாநிலங்களிலும் மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது. இவ்வாணையத்தின் நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், மேம்பாடு அடையச் செய்வதும் ஆகும்.

 

 

தேசிய மனித உரிமைகள் ஆணையம்

1993ல் இயற்றப்பட்ட மனித உரிமைகள் சட்டத்தின்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்தியாவில் அக்டோபர் 12, 1993ல் ஏற்படுத்தப்பட்டது. இவ்வாணையம் ஒருதலைவரையும், நான்கு உறுப்பினர்களையும் கொண்டது. இதன் தலைவர் பொதுவாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார்.

ஆணையத்தின் ஒரு உறுப்பினர் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் மாநில உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாகவும், மீதமுள்ள இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல் அனுபவமிக்கவராக இருக்க வேண்டும். இவர்களை இந்திய குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.

 

அமைப்பு

ஆணையத்தின் தலைமையிடம் புது டில்லி ஆகும். குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரின் ஆணையின் பேரில் பணி நீக்கம் செய்யப்படலாம்.

ஆணையத்தின் தலைவர் இப்பதவியில் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரையிலோ பணியாற்றலாம். மற்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவி வகிக்கலாம். குடியரசுத் தலைவர் விரும்பினால் இவர்களை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்யலாம்.

 

ஆணையத்தின் பணிகள்

இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் ஆகும். மனித உரிமைகள் சம்பந்தமாக ஆய்வுகள் நடத்தி அது சம்பந்தமாக கல்வியறிவினை மக்களிடையே பரப்புவது இதன் முக்கிய பணியாகும்.ஊடகங்கள் மூலமாகவும், கருத்தரங்குகள் மூலமாகவும் மனித உரிமைப் பற்றிய விழிப்புணர்வை இவ்வாணையம் ஏற்படுத்துகிறது.

மனித உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் மனு செய்தாலோ அல்லது ஆணையம் தானாகவே முன்வந்தோ பாதிக்கப்பட்டவர்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.

மக்களின் வாழ்வியல் சுதந்திரத்தை பாதுகாக்கவும், மனித உரிமைகளுக்கு எதிராக கொண்டுவரப்படும் சட்டத்தினை ஆய்வு செய்யவும், காவல் துறையினரின் வன்முறை மற்றும் கற்பழிப்பு போன்றவற்றை அகற்றுவது சம்பந்தமாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் குறைகளை களைவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னுரிமை வழங்குகிறது.

 

அதிகாரங்கள்

இது வாழ்வியல் நீதிமன்றத்திற்குரிய அனைத்து அதிகாரங்களையும் பெற்றுள்ளது. அரசிற்கு ஆண்டு தோறும் தனது அறிக்கையை இவ்வாணையம் அனுப்புகிறது. அரசாங்கம் இவ்வறிக்கையினை பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தாக்கல் செய்து இதனடிப்படையில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன என்ற விபரத்தினை தெரிவிக்கும்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மக்களின் உரிமைகளைக் காக்க அரசியலமைப்பு காட்டிய நெறிமுறைகளின்படி செயல்பட்டு வருகிறது.

 

 

மாநில மனித உரிமைகள் ஆணையம்

தமிழ்நாட்டில் 1997 ஏப்ரல் 17ல் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்டது.

 

அமைப்பு

இதில் ஒரு தலைவரும், நான்கு உறுப்பினர்களும் இடம் பெற்றிருப்பர். இதன் தலைவர் – மாநில உயர்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஆவார். இதன் ஒரு உறுப்பினர் மாநில உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், மற்றொரு உறுப்பினர் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியாகவும், எஞ்சிய இரண்டு உறுப்பினர்கள் மனித உரிமைகள் சார்ந்த செயல‌னுபவம் மிக்கவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மாநில முதல்வர், மாநில உள்துறை அமைச்சர், சட்டமன்ற தலைவர், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஆகியோரை கொண்ட குழுவின் பரிந்துரையின் பேரில் மாநில ஆளுநர் நியமனம் செய்கிறார். ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயலர் செயல்படுகிறார். தமிழகத்தில் இவ்வாணையம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பில் பகுதி-II, பகுதி-IIIல் உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறப்படும் போது இவ்வாணையம் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கும்.

மாநில ஆணைத்தின் உறுப்பினர்கள் 70 வயது வரையோ அல்லது 5 ஆண்டுகளோ பணியாற்றலாம். ஆணையத்தின் உறுப்பினர்கள் முறை தவறி செயல்பட்டால் மாநில ஆளுநர் அவர்களை பணி நீக்கம் செய்யலாம்.

 

பணிகள்

ஆணையம் ஆண்டுதோறும் அரசாங்கத்திற்கு தனது அறிக்கையை அனுப்புகிறது. இவ்வறிக்கையில் தாம் செய்து முடித்த பணிகள் பற்றியும், அரசாங்கம் மனித உரிமைகளை காக்க எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கும். மாநில அசராங்கம் சட்டமன்றத்தில் இவ்வறிக்கையினை தாக்கல் செய்யும்.

 

மாவட்ட மனித உரிமைகள் நீதிமன்றங்கள்

மனித உரிமைகளை காக்க மாவட்ட அளவில் நீதிமன்றங்களை மாநில அரசாங்கம் உருவாக்கி உள்ளது. மாவட்ட அளவில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை இந்நீதிமன்றம் விசாரணை செய்யும்.

இந்நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர் அல்லது அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுகிறார். இந்நீதிமன்றங்கள் விரைவாக மனித உரிமைகள் மீறல்களை விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்கிறது.

 

பெண் உரிமைகள்

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை நீக்கி, பெண்களின் தரத்தை உயர்த்த மாநில மத்திய அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றியுள்ளன. 1856ல் இந்து விதவை மறுமண சட்டம் சட்டபூர்வமாக்கப்பட்டது.

1955ல் இந்து திருமணச் சட்டத்தின்படி பெண்களின் திருமண வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1956ல் இந்து வாரிசு சட்டத்தின்படி தாய் தந்தையரின் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது.

1961ஆம் ஆண்டு வரதட்சணை தடைச் சட்டத்தின்படி வரதட்சணை வேண்டி பெண்களை கொடுமைப்படுத்துவது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என கருத வழிசெய்தது. 1967 இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் செய்து சுயமரியாதை திருமணங்கள் சட்டபூர்வ திருமணங்களாக அங்கீகரிக்கப்பட்டது.

1997ல் தமிழக அரசு பெண்களை கேலி செய்வதைத் தடுக்கச் சட்டம் இயற்றியுள்ளது. 1999ல் தமிழக அரசு பெண்களை அநாகரிகமாக சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடைசெய்துள்ளது.

1948ல் தொழிற்சங்கச் சட்டம், 1951ல் தோட்ட தொழிலாளர் சட்டம் 1952ல் சுரங்கச் சட்டம் ஆகியவைகள் ஆண், பெண் வேறுபாடின்றி சம ஊதியம் வழங்க வகை செய்தது. 1961ல் பெண்களின் உடல் நலம் காக்க பேறுகால பயன்சட்டம் இயற்றப்பட்டு பேறுகாலத்தில் பெண்களுக்கு முறையான ஊதியம் வழங்க வகை செய்யப்பட்டது.

 

குழந்தைகள் உரிமைகள்

குழந்தைகள் ஆரோக்கியமாகவும், சுதந்திரமாகவும் வாழவும், குழந்தைகள் அனைவருக்கும் 14வது வயது வரை கட்டாய இலவசக் கல்வி வழங்கவும், குழந்தை தொழிலாளர்களைத் தடை செய்யவும் சட்டங்கள் இயற்றி குழந்தைகளின் உரிமைகள் காக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒளிமயமான உலகினை உருவாக்க மனிதனோடு பிறந்த அவனது உரிமைகள் காக்கப்பட வேண்டும். மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டு மனித உரிமையைக் காத்து நாளைய ஒளிமயமான உலகத்தினை உருவாக்க வேண்டும்.

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.