ஆறாம் அறிவில் இத்தனை
வேற்றுமையா?
முற்றுப்பெறாத நிலவும்
முறைவிடாத உரிமையும்
பெரும் வெளிச்சம் தராது
உடைந்த கண்ணாடிச் சிதறல்கள்
ஒருபோதும் முழுமையான
உருவம் தராது
காற்றிலா பலூன்கள்
கண நேரம் கூடமேலே
பறக்காது
கல்வியறிவு இல்லாத
சமுதாயம்
காய்ந்த சருகுகள்
போலவே
ஒரு போதும் துளிர்க்காது
கொட்டும் மழையில்
குடைப்பிடிப்போர் பலருண்டு
கோடை வெயிலில்
குடையின்றி நடப்போருண்டு
சரிந்து விழும் பாரத்தை
தன்மீது
சுமப்பவர்கள் எத்தனை பேர்
கால் தவறி விழுந்தாலும் சரி…
கால்ஒடிந்து கிடந்தாலும் சரி…
வேற்றுக்கிரகவாசி போல்
நினைத்தே நித்தம் நித்தம்
கடந்து செல்கிறோம்
‘மனித நேயம்’
காணாமல் போனதோ
இல்லை
கால் ஒடிந்து போனதோ
சாலை ஓரத்தில் தடுமாறி போனாலும்
வாழ்க்கையில்தடம் மாறிப் போனாலும்
உதவி செய்ய பலருண்டு
பாரினிலே
என்றெண்ணியே இவ்வுலகம்
இயங்குகிறது
சாக்கடை ஓரத்திலே
ஒருத்தி
சாகா வரத்துடனே கழிவுகளை
வெளியேற்ற
கண்டுக்காமல் போனவர்களும் உண்டு
கிழிந்த சட்டையும்
கலைந்த தலைமுடியும்
தானம் கேட்கும் கைகளும்
தவியாய் தவிக்கும் கண்களும்
மூச்சு மட்டும் வரும் வாய்ப் பேச்சும்
எத்தனை முறை நாம் கடந்து
இருப்போம்
உதவி செய்யாமால் போகலாம்
உதாசினம் ஏனோ?
மனிதா……
ஒருநாள் இவ்வுலகம்
கடவுளின் கைகளில்
ஏந்திய தருணம்
‘காஜா’ புயலின் கோரமுகம் அல்ல
ஆறாம் அறிவின்
முதிர்ச்சிக்கான தேர்வு
காற்றில் ஆடிய மரங்கள்
தெறித்து ஒடிந்த கிளைகள்
சிதறி ஓடிய இலைகள்
சரிந்து விழுந்த ஓடுகள்
தரையோடு படுத்த தந்திமரங்கள்
அலறியடித்த ஐந்தறிவு பிராணிகள்
காற்றின் அசுர வேகம்
கடவுளே பயந்த காற்றின் சத்தம்
சாலைகள் எல்லாம்
மரங்களின் இருப்பிடமாய்
பாதைகள் எல்லாம்
பல்லங்குழிஆடும் பள்ளங்களாய்
எத்தனை இழப்புகள்
எத்தனை சோகங்கள்
எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை ஏமாற்றுப் பேர்வழிகள்
அத்தனையும் புரிய
வைக்கப்பட்ட ஆறாம் அறிவின்
முதிர்ச்சிக்கான தேர்வு
தேர்ச்சிப் பெற்றவர்களை விட
தேறாமல் போனவர்கள் நிறைய….
தேடித்திரிந்தவர்கள் நிறைய….
ஆங்காங்கே ஓடிப்போய்
செய்த உதவிக் கரங்கள்
எல்லாம்
வெற்றுக் கைகள் அல்ல
அவை
வெற்றி விதைகள்
காய்ந்த தென்னையும்
வளைந்த தேக்கும்
சரிந்து போன கூரை வீடும்
புதிதாய் பூத்தது
மனித நேயம் வளர்த்தது
மானுடம் தழைக்க
மனிதம் வளர
சிலமனித காகிதப் பூக்கள்
நிறம் மாற வேண்டும்
நிஜங்கள் ஆக வேண்டும்
உள்ள உறுதியில்
மனித நேயம்
வளர வேண்டும்
ப.தமிழன் சின்னா
புதுக்கோட்டை