வீட்டில் கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் சங்கர்.
தன் காதலி விஜயாவின் அக்கா ஜெயாவுக்கு திருமணம் நடந்த பிறகு, மெல்ல, விஜயா மீதான காதலை பெற்றோரிடம் உடைக்க விரும்பினான் சங்கர்.
விஜயா, சாந்தம் என்றால் ஜெயா கோபசாலி; விஜயா வேலையில் கெட்டிக்காரி என்றால் ஜெயா சோம்பேறி! இருவருமே இரு துருவங்கள்.
ஒருநாள் வழக்கம்போல சதா தொல்லைப்படுத்திக் கொண்டிருந்த அம்மா, பல பெண்களின் போட்டோக்களை காட்டிக் கொண்டிருக்கும் போது அதனுள் விஜயாவின் போட்டோவையும் பார்த்து விட்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்து திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டான் சங்கர்.
விஜயாவுக்கும் போன் செய்தான். ஏனோ, துரதிர்ஷ்டவசமாக, அவள் போன் தொடர்பில் இல்லை!
வேலை விஷயமாக பல நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்ததாலும் திருமணம் வரை பேசாமல், பார்க்காமல் இருந்தால் திருமண நாளன்று ஒரு ‘த்ரில்’ இருக்குமே என்று விஜயாவை தொடர்பு கொள்வதை விட்டு விட்டான்.
“பெண் பார்க்க போவோம்” என்று பெற்றோர் அழைத்த போது, ‘தனக்கு இந்த பெண்ணை ஏற்கனவே தெரியும் என்றும், தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் பெண் இவள்தான்’ என்றும் சங்கர் குதூகலத்தோடு பெண்ணின் பெற்றோர் சம்பந்தப்பட்ட விபரங்கள், ஃபோன் நம்பர்கள் வீட்டு விலாசம் அனைத்தும் தர அது சங்கரின் அம்மாவிடமிருந்த விபரங்களோடு ஒத்துப் போனதால் இருவருக்கும் ஏக மகிழ்ச்சி!
‘பல நாடுகளுக்கு சென்று வரும் வேலைப்பளுவால் தன்னால் சம்பிரதாயமாக பெண் பார்க்க இயலாது’ என்று சங்கர் தெரிவித்து விட, பெற்றோரும் மும்முரமாக திருமணத்தை பேசி முடித்து ஏற்பாடுகள் ‘மளமள’வென்று நடந்து திருமண நாளும் நெருங்கியது.
பல லட்சம் டாலர் மதிப்பு மிக்க ஒரு வெளிநாட்டு வணிக ஒப்பந்தம் இழுத்துக் கொண்டே சென்றதால், அதில் மூழ்கி இருந்த சங்கர், செக்ரட்டரி ரம்யாவை அழைத்து, அனைத்து நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தொழில்முறை வாடிக்கையாளர்களுக்கும் திருமணப் பத்திரிகைகளை நேரிலும், வாட்சப்பிலும் கொடுக்க ஏற்பாடு செய்து விட்டான்.
எதிர்பாராத விதமாக துபாயில் அந்த மில்லியன் டாலர் வணிக ஒப்பந்தத்தைப் பெற ஒருநாள் கூடுதலாக தங்க நேர்ந்து, துபாயில் இருந்து இரவில் கிளம்ப வேண்டிய விமானம் லேட்டாக கிளம்பி திருமணம் நடக்குமா நடக்காதா என்று சென்னையில் அனைவரும் பரிதவித்துக் கொண்டிருந்தனர்.
சென்னை விமான நிலையத்திற்கு சற்று தாமதமாக காலையில் வந்தடைந்து, பயணக் களைப்பில் நேராக திருமண மண்டபம் சென்று அவசரம் அவசரமாக மாப்பிள்ளையாக புத்தாடை அணிந்து அலங்கரித்துக் கொண்டு, மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, தாலி கட்டும்போது, தன் ‘காதல் மனைவியின் கன்னத்து மச்சத்தை காணோமே!’ என்று நினைத்தான் சங்கர்.
‘அதீத மேக்கப்பால் அந்த மச்சம் மறைக்கப்பட்டிருக்கும்’ என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு தாலி கட்டிய பின் திரும்பிய சங்கருக்கு, சுனாமி அதிர்ச்சி காத்திருந்தது!
யாரை உயிருக்கு உயிராக காதலித்தானோ, அந்த விஜயா ஆக்சிடெண்டில் அடிபட்டு கோமாவில் சிக்கி தெய்வச் செயலால் உயிர் பிழைத்து உடல் முழுக்க பிளாஸ்டருடன் வீல் சேரில் மண்டபத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தாள் கன்னத்து மச்சத்துடன் அவள் அக்கா ஜெயாவின் வருங்கால கணவர் யாரென்று தெரியாமலேயே!
பிறகுதான் சங்கருக்கு ‘பொளேரெ’ன்று யாரோ மண்டையில் அடித்தாற்போல புரிந்தது. விஜயாவும் ஜெயாவும் ஒரே முகச்சாயல் கொண்ட இரட்டைக் குழந்தைகள் என்றும், முதலில் பிறந்ததால் ஜெயா விஜயாவுக்கு அக்கா என்றும்!
அதிர்ச்சி விலகாது, தான் அனைவர்க்கும் வாட்ஸ்ஆப்பில் வழங்கிய திருமணப் பத்திரிக்கையை பார்த்தான்.
எண் கணிதம் என்னும் நியூமராலஜிபடி வித்யாசாகர் மகள் ஜெயாவை வி.ஜயா என்று தமிழிலும் VI.Jaya என்று ஆங்கிலத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்ததை பார்த்து விட்டு, ‘காதல் மயக்கத்திலும், கல்யாண ஏக்கத்திலும் வேலை குழப்பத்திலும் பயணப் பந்தாட்டத்திலும் சரிவரப் படிக்கவில்லை’ என்று அறிந்து மேலும் அதிர்ச்சி!
“உனக்கு அதீத தன்னம்பிக்கை!( over-confidence) அதுவே உன் பலம்; பலவீனம்.” என்று அவன் பாஸ் அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது.
ஜெ.ஜெயகுமார்
சென்னை
கைபேசி: 9884251887