மனைவி அமைவதெல்லாம்

அன்று –
நிவேதாவிற்கு முதலிரவு
ஆம்! அன்றுதான் தினேஷிற்கு மாலையிட்டு மனைவியானாள் நிவேதா.

தினேஷ் அரசு அலுவலகத்தில் ஓர் உயர் அதிகாரி. கைம்பெண்ணான சங்கரி அம்மாளின் மூத்த புதல்வன்.

அடுத்தவன் மகேஷ். ஒரு மாதத்திற்கு முன்பு தான் அரசு உத்யோகம் என்னும் பம்பர் பரிசு கிடைத்தது.கடைக்குட்டி கிருபா. கல்லூரியில் கல்வி பயில அடியெடுத்து வைத்திருக்கும் இளம்பெண்.

ஆயிரமாயிரம் எண்ணங்களுடன் அறையினுள் நுழைந்தாள் நிவேதா. ஆனந்தத்தை அனுபவிக்கும் நேரத்தில் அதிர்ச்சியில் ஆடிப்போனாள்.

ஆம்! தினேஷ் மதுப்புட்டியுடனும், சிகரெட் வளையங்களுடனும் தெரிந்தான்.

“ஏய்! இங்க வா” அன்பொழுக ஒலிக்க வேண்டிய அவன் குரல் அதிகாரத்துடன் ஒலித்தது.

நாணத்தால் பின்ன வேண்டிய அவள் கால்கள் நடுக்கத்துடன் பின்னி அவனை நோக்கி நடந்தன.

“இங்க பாரு! என்னைய பொறுத்த வரையில இது பொம்மை கல்யாணம். எனக்கு இதுல இஷ்டம் இல்ல. ஏற்கனவே நான் ஒரு பொண்ண விரும்பினேன். ஆனா எங்க காதல் கைகூடல. அம்மா கட்டாயத்தில் தான் உன்னைய கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சேன்.

உலகத்த பொறுத்தவரை நீயும் நானும் கணவன் மனைவி. ஆனால் என்னைய பொறுத்த வரை நீ யாரோ நான் யாரோ புரிஞ்சதா?”

பொடிப் பொடியாய் நொறுங்கி விட்டாள் நிவேதா. படுக்கையை தட்டிப்போட்டு அந்த அறையின் ஓர் ஓரத்தில் படுத்தாள். வாய்விட்டு கதற வேண்டும் போல் இருந்தது. எவ்வளவு நேரம் அழுதாளோ தெரியாது.

பேசாமல் அம்மா அப்பாவிடம் கூறி டைவர்ஸ் பண்ணிவிடலாமா என நினைத்த மறுகணமே தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.

ஒரே பிள்ளையைப் பெற்ற தன் பெற்றோர் சிறிது காலமாவது மகிழ்ச்சியாய் இருக்கட்டும் என எண்ணினாள். அடுத்தவர்களின் சந்தோசத்திற்காக தன் கஷ்டங்களை மறைத்து வாழ்வது தானே பெண்ணின் இயல்பு.

சிறிது காலம் பொறுத்துப் பார்ப்போம். முதலில் ஓர் வேலையை தேடியாக வேண்டும். புகுந்த வீட்டில் சகஜமாகப் பழகவேண்டும் என்று எண்ணங்கள் சுழல தூக்கத்தை தொலைத்தாள் நிவேதா.

காலையில் எழுந்து வந்த அவளிடம் “அண்ணி! சூப்பரா?” என்று கண்ணடித்த கிருபாவைப் பார்த்து போலியாய் முகத்தில் நாணத்தை படரவிட்டாள்.

“அத்தே! நீங்க தள்ளுங்க. நான் காபி கலக்குறேன்” சொன்னபடியே செயலில் இறங்கினாள்.

“எதுக்கும்மா இன்னைக்கே நீ வேலை செய்யணுமா? நான் காபி எடுத்திட்டு வரமாட்டனா என்ன? தினேஷிற்கு காலையிலேயே பெட் காபி குடிக்கணும்” என்று கூறியவளிடம் “ சரி அத்தே! நானே ரெடி பண்றேன்” என்றாள்.

காபி எடுத்துக் கொண்டு தங்கள் அறையை நோக்கி நடந்தாள்.

சங்கரி அம்மாள் நினைத்துக் கொண்டாள் “ பரவாயில்லை! பையன் நல்ல பிள்ளையா காதலிய மறந்திட்டான். நிவேதா சந்தோசமா இருக்காளே” நினைத்துக் கொண்டாள்.

அங்கு-

“அத்தை தான் காபி எடுத்துட்டு போகச் சொன்னாங்க” நடுங்கினாள்.

“ம்! வச்சிட்டுப்போ!” அன்றலர்ந்த தாமரையாய் நின்ற மனைவியை ஏறிட்டு நோக்காமல் உறுமினான் தினேஷ்.

“நான் ஒன்னு கேட்பேன். கோவிச்சுக்க மாட்டீங்களே!” வார்த்தைகள் குழறின.

“என்ன?” கர்ஜித்தான்.

“இ…இல்ல வ…. வந்து உங்க காதலிக்கு கல்யாணமாயிடுச்சா?”

“கல்யாணமாயி போயிட்டா! இப்போ அதுக்கென்ன? காலையிலேயே வந்து கழுத்தறுக்கிற? போ! போய் தொலை” எரிந்து விழுந்தான்.

அவமானத்தில் முகம் சிவந்து வெளியேறினாள் நிவேதா.

“அண்ணி! இந்த லெசன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு; நீங்களும் என்னோட சப்ஜெக்ட் தானே அண்ணி! பிளீஸ்! எனக்கு கொஞ்சம் சொல்லித் தர்றீங்களா?” கேட்ட கிருபாவிற்கு சந்தேகங்களைப் போக்கி விளக்கங்களைக் கொடுத்தாள்.

“அண்ணி! உங்களோட இந்த சேலை அழகா இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் இதை நான் கட்டிட்டு போகட்டுமா?”

“எடுத்துக்கோயேன்”

அன்பாகப் பழகினாள் கிருபாவிடம். தன் மாமியாரை ஒரு வேலையும் செய்ய விடாமல் மகாராணி போல் உட்கார வைத்தாள்.

“அத்தே! இந்தாங்க இந்த மாத்திரையை இப்போ சாப்பிடணும்” ஞாபகப்படுத்தினாள். சங்கரி மகிழ்ந்தாள்.

“மகேஷ்! நீங்க போய் ஆபிஸ்க்கு கிளம்புங்க. உங்க அண்ணன் டிரஸ்ஸோட உங்க டிரஸ்ஸயும் அயர்ன் பண்ணி வச்சிடுறேன்.”

“தேங்ஸ் அண்ணி!”

மகேஷிடமும் பரிவுடன் பழகினாள்.

அக்குடும்பத்தில் ஒருத்தியாக அவள் மாறிவிட்டாலும் தினேஷின் பாரா முகம் அவள் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

ஞாயிற்றுக் கிழமை.

சாவகாசமாய் எழுந்து அவரவர் வேலையை முடித்துவிட்டு டைனிங் ஹாலில் கூடினர். விடுமுறை தினங்களில் ஒன்றாக அனைவரும் அமர்ந்து உண்ணுவது அந்த வீட்டின் வழக்கம்.

நிவேதா பரிமாறினாள்.

“ஏம்மா! நீயும் தினேஷோட உட்கார்ந்து சாப்பிடும்மா” சங்கரி வாஞ்சையுடன் கூறினாள்.

“பால் அடுப்பில இருக்கு அத்தே! நீங்க சாப்பிடுங்க. நான் அப்புறமா சாப்பிடுறேன்”

ஒவ்வொரு ஞாயிறும் இப்படி ஏதேனும் காரணங்கள் கூறி தினேஷுடன் அமர்ந்து சாப்பிடுவதை தட்டிக் கழித்தாள்.

“அண்ணா! அண்ணி ரொம்ப நல்ல டைப். அவங்க டிரஸ் எல்லாம் எனக்கு கொடுக்கிறாங்க. எனக்கு சப்ஜெக்ட்ல வர்ற சந்தேகங்கள சொல்லிக் கொடுக்கிறாங்க. நீ கொடுத்து வச்சவன் தான் அண்ணா” கிருபாவின் குரலில் சந்தோசம் சதிராடியது.

“ஆமாண்ணா! எனக்கும் எல்லா ஹெல்ப்பும் அண்ணி செய்வாங்க. உன் ட்ரஸ்ஸோட என் ட்ரஸ்ஸயும் அயர்ன் பண்ணி வச்சிடுவாங்கண்ணா நீயே பார்த்துக்க அண்ணா” கிருபாவின் புகழ்ச்சியை வழி மொழிந்தான் மகேஷ்.

“நீ புண்ணியம் செஞ்சவண்டா! நிவேதா என்னைய ஒரு வேலை செய்ய விடுறதில்லை; என் உடம்பு ஆரோக்கியத்திலயும் அவளுக்கு அக்கரை ஜாஸ்தி. இப்படி ஒரு மருமக இந்த காலத்துல கிடைக்கணுமே” தன் பங்கிற்கு சங்கரி அம்மாளும் சந்தோசப்பட்டார்.

அனைவரின் கூற்றும் நிவேதாவை மகிழ்ச்சியடையச் செய்யவில்லை.

மனதிற்குள்ளேயே அழ வைத்தன. எப்படி நடந்து என்ன செய்ய? அவனை மாற்ற முடியவில்லையே!

சாப்பிட்டு முடித்தான் தினேஷ். “எனக்கு லேசா தலைவலிக்குது. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்குறேன்” தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

நிவேதா பதறியபடி ஒரு கப் காபியுடன் மாத்திரையும் எடுத்துக் கொண்டு அறையினுள் தயங்கி தயங்கி நுழைந்தாள்.

“எ…என்னங்க! இந்த மாத்திரைய போட்டு காபி குடிங்க. தலை வலி சரியாயிடும்”

“நிவேதா! இங்க வா” முதன் முதலாக தினேஷின் குரலில் அன்பு இழையோடியதையும் தன்னை பெயர் கூறி அழைத்ததையும் உணர்ந்த நிவேதா ஆச்சர்யத்துடன் அவனை நோக்கி அருகில் சென்றாள்.

“நிவேதா! என்னய மன்னிச்சிடும்மா! ப்ளீஸ்” அவள் இரு கரங்களையும் பற்றிக் கொண்டான்.

“ஐயய்யோ! என்னங்க இது ? ஏதேதோ பேசிட்டு”

“இல்லம்மா! இவ்வளவு நாளும் எவ்வளவு முட்டாளா இருந்திருக்கிறேன்? கல்யாணம் முடிச்சி சந்தோசமா இருக்கிற என் மாஜி காதலிய நினைச்சிட்டே உன்னைய எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்? உன் மனச பத்தி கொஞ்சம் கூட நான் கவலைப்படாம இருந்திட்டேனே!

ஆனா அதையும் தாங்கிட்டு எப்படிம்மா இந்த வீட்டில் எல்லார் மேலயும் அன்பை பொழியுற? எனக்கு தலைவலின்னா உடனே மாத்திரையோட வந்து நிக்குற? அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாரும் உன்னைய புகழ்ந்ததுலதான் என்னோட தப்பு எனக்கு தெரிஞ்சது.

அந்த குற்ற உணர்ச்சி தான் இந்த தலைவலி. என்னைய மன்னிச்சிடுவாயா? ப்ளீஸ்! மன்னிச்சால் தான் உண்மையிலேயே நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி” கூறிய அவன் கண்களில் நீர் சுரந்தது.

“ என்னங்க! இதுக்கு போயி…” பதறியபடி வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.
பரிவுடன் அவன் கண்களை தன் மென் கரங்களால் துடைத்தாள்.அவர்களிடையே தென்றல் நுழையவும் தயங்கி நின்றது.

-மு.அருண்