மனைவி சொல் மிக்க மந்திரமில்லை

அன்று காலையில் எழுந்ததும் வழக்கம்போல் செல்போனை சார்ஜ் செய்வதற்கு சார்ஜரில் போட்டேன்.

செல்போன் சார்ஜ் ஏறவில்லை. திடுக்கிட்டேன். 20 சதவீதம் மட்டும் சார்ஜ் இருப்பதாக செல்போன் காட்டியது.

நேற்று செல்போனில் ரயில்வேயின் ஆப்பினை பதிவிறக்கம் செய்து அதிலிருந்துதான் இன்று இரவு சென்னை செல்ல டிக்கட் தக்கலில் பதிவு செய்தேன்.

நாளை சென்னையிலிருந்து திரும்பி வருவதற்கு இன்று காலை தக்கலில் டிக்கட் போட வேண்டும். சென்னை செல்ல ரயில் பயணமே வசதி. சுகமும்கூட தான்.

பஸ் பயணத்தை நினைத்தால் உடல்வலியால் மறுநாள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்னைப் பயமுறுத்தியது. அதற்காகவாவது செல்லுக்கு முதலில் சார்ஜ் செய்ய வேண்டும்.

அன்றைய அலுவலகப் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாக என் நினைவிற்கு வர செல்போன் இல்லாமல் இன்றைய வாழ்க்கை இல்லை என்பது எனக்கு தெளிவானது.

எனவே இன்று என்னுடைய முதல் வேலை செல்போன் சர்வீஸ் செய்யக் கொடுத்து என்னுடைய மொபைலை சரி செய்வது என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.

“ஏங்க, நேரமாகுது. என்ன செய்றீங்க? சீக்கிரம் கிளம்புங்க.” என்னுடைய மனைவியின் குரல் நான் விரைவாக செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

மனைவியிடம் செல்போனின் பிரச்சினையைப் பற்றிச் சொன்னதும், உடனே சாம்சங் சர்வீஸ் சென்டரில் செல்போனைக் கொடுத்து சரி செய்யச் சொன்னாள்.

நானும் ‘சரி’ எனத் தலையை ஆட்டியபடி இயந்திரக் கதியில் செயல்பட ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் அலுவலகத்திற்குத் தயாரானேன்.

காலை உணவினை உண்டுவிட்டு அலுவலகம் சென்றேன். மொபைல் போன் சர்வீஸ் சென்டர் 10 மணிக்கு மேல்தான் திறக்கும்.

லேப்டேப்பினை ஆன் செய்து இமெயிலில் உள்ளவற்றை படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து மணியைப் பார்த்தேன். 9.45 ஆகியிருந்தது.

தக்கலில் டிக்கெட் போட வேண்டியது ஞாபகத்திற்கு வர, அலுவலக லேண்ட் லைனில் இருந்து மனைவியின் செல்போனைத் தொடர்பு கொண்டேன்.

மனைவியிடம் தக்கலில் டிக்கெட் போடும் செய்முறையை 10 நிமிடங்கள் விளக்கிவிட்டு தொலைபேசியை வைக்கும் சமயம் என் மனைவி சாம்சங் சர்வீஸ் சென்டரில் மட்டுமே மொபைலை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று மீண்டும் சொன்னாள்.

‘சரி’ என்று அவளிடம் சொல்லிவிட்டு போனை வைக்கும்போது எனது மேஜையில் கிடந்த மொபைல் போன் சர்வீஸ் செய்யும் கடையின் விசிட்டிங் கார்ட் கண்ணில் பட்டது.

நண்பர் ஒருவர் தனக்கு தெரிந்த நபர் ஒருவர் மொபைல் போன் சர்வீஸ் கடை வைத்துள்ளதாகக் கூறி விசிட்டிங் கார்ட் ஏற்கனவே கொடுத்திருந்தார்.

சாம்சங் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்ய சமயங்களில் இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்வார்கள். மேலும் உள்ளுர் கடைக்காரரை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் என்னுள் மேலோங்கியது.

உடனே இருமுறை கூறிய மனைவியின் சொல்லையும் மீறி விசிட்டிங் கார்டை எடுத்துக் கொண்டு செல்போன் கடையை நோக்கி விரைந்தேன்.

செல்போன் சர்வீஸ் கடைக்காரர் என்னை முகம் மலர்ந்து வரவேற்றார். அவரின் வரவேற்பில் மகிழ்ந்து போன நான் செல்போனில் சார்ஜ் ஏறாத பிரச்சினை பற்றிக் கூறினேன்.

மொபைலை பிரித்துப் பார்த்துவிட்டு ஒருமணி நேரத்தில் சரி செய்து தருவதாகக் கூறினார்.

நானும் வேலை முடிந்ததும் என்னை அழைக்குமாறு அலுவலக லேண்ட் லைன் தொலைபேசி நம்பரைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

ஒருமணி நேரம் கழித்து லேண்ட் லைன் தொலைபேசி அழைக்கவே எடுத்தபோது எதிர்முனையில் என் மனைவி சென்னையிலிருந்து திரும்பிவர தக்கலில் டிக்கெட் போட்டத் தகவலைத் தெரிவித்தாள்.

அவளுக்கு ஒரு சபாஷ் சொல்லிவிட்டு தொலைபேசியை வைக்கப்போகும்போது ‘செல்போனை சர்வீஸ் செய்ய சாம்சங் சர்வீஸ் சென்டரில் கொடுத்துவிட்டீர்களா?’ என்ற மனைவியின் கேள்விக்கு, ‘கொடுத்து விட்டேன்’ என்று வெறுமனே பதிலளித்து தொலைபேசியை வைத்துவிட்டேன்.

அடுத்த அரைமணி நேரத்தில் செல்போன் சர்வீஸ் கடைக்காரர் தொலைபேசியில் அழைத்து மொபைல் போன் சரி செய்து விட்டதால் மொபைல்போன் சார்ஜ் ஆவதாகத் தெரிவித்தார்.

நானும் மகிழ்ச்சியுடன் அக்கடைக்கு விரைந்தேன்.

செல்போன் சர்வீஸ் கடைக்காரர் என்னிடம் “சார் உங்க மொபைலின் சார்ஜ் பின் போடும் இடத்தில் அழுக்கு அடைந்ததால்தான் மொபைலுக்கு சார்ஜ் ஏறவில்லை. அழுக்கினை நீக்கி விட்டதால் இப்பொழுது சார்ஜ் ஏறுகிறது. அதோடு உங்க சார்ஜர் பின்னுள்ளும் அழுக்கு அடைந்திருக்கும். அதனைப் பயன்படுத்தினால் சார்ஜ் ஏறாது. அதனால் இந்த சார்ஜர் வயரை வாங்கி பயன்படுத்துங்க.” என்று கூறினார்.

நானும் “சரி. சர்வீஸ் செய்ய எவ்வளவு ஆனது?” என்று கேட்டேன்.

“மொபைல் கிளீன் பண்ண நூற்றி ஐம்பது, சார்ஜர் வயர் முந்நூற்று ஐம்பது. மொத்தம் ஐநூறு.” என்றார்.

நானும் ஐநூறு ரூபாய் ஒன்றைக் கொடுத்துவிட்டு மொபைலையும், சார்ஜர் வயரையும் வாங்கிக் கொண்டு கிளம்பினேன்.

ஆபிஸில் வந்து மொபல் சார்ஜர் வயரை மாற்றிவிட்டு சார்ஜ் போட்டேன். அரைமணி நேரத்தில் பேட்டரி 100 சதவீதம் எனக் காட்டியது.

மொபைல் போன் சார்ஜ் ஏறியதால் என்னுடைய கவனம் முழுவதும் அலுவலக வேலையின் மீது திரும்பியது.

அலவலக வேலையின் ஊடேயே வழக்கம் போல் வரும் மொபைல் போன் கால்கள், அலுவலக வாட்ஸ் ஆப் செய்திகள் என என்னுடைய அலுவலக நேரம் சிறப்பாகவே கழிந்தது.

சார்ஜரோடு சென்னைக்கும் சென்று அலுவலக வேலையைச் சிறப்பாக முடித்து விட்டு வந்து விட்டேன்.

மறுநாள் காலையில் வீட்டிலிருந்த மனைவியின் சார்ஜரில் என்னுடைய செல்போனை நுழைத்து சார்ஜ் செய்தேன். மொபைலில் சார்ஜ் ஏறவில்லை.

‘என்னவாயிற்று. நேற்றுத்தானே கடையில் கொடுத்து சரி செய்தோம்’ என்று எண்ணிபடி சார்ஜர் வயரினைக் கழற்றி ஒருமுனையை லேப்டாப்பிலும், மற்றொரு முனையை செல்போனிலும் இணைத்தேன். அப்போதும் சார்ஜ் ஏறவில்லை.

செல்போன் சர்வீஸ் கடையிலிருந்து வாங்கிய சார்ஜர் வயரினை அலுவலகத்திலேயே வைத்துவிட்டு வந்திருந்தேன்.

‘அலுவலகம் சென்று சார்ஜ் போடுவோம்’ என்று எண்ணி கிளம்பி அலுவலகத்திற்கு சென்றேன். முதல் வேலையாக சார்ஜரில் போனைப் போட்டதும் சார்ஜ் ஏறியது.

எனக்கு குழப்பம் வரவே நேரே சாம்சங் சர்வீஸ் சென்டருக்குச் சென்றேன். நடந்தவற்றை விளக்கினேன்.

சர்வீஸ் மேன் 10 நிமிடங்கள் என்னை காத்திருக்கச் சொல்லி மொபைல் மற்றும் சார்ஜர் வயருடன் உள்ளே சென்றார்.

ஐந்து நிமிடங்களில் திரும்பி வந்து “உங்களின் போனில் சார்ஜர் போர்ட்டின் அளவினை மாற்றியுள்ளனர். அதனால்தான் சாம்சங் சார்ஜரில் உங்களுக்கு சார்ஜ் ஏறவில்லை.” என்றார்.

“சரி நீங்கள் சார்ஜர் போர்டினை மீண்டும் சரி செய்து தாருங்கள்” என்றேன்.

“இன்றைக்கு சாயுங்காலம் ஐந்து மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார்.

அதற்கு சம்மதம் சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

‘என்னவள் இரண்டு தடவை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாளே ‘சாம்சங் சர்வீஸ் சென்டரில் கொடுங்கள்’ என்று. நான்தான் கேட்கவில்லை.’

‘மனைவி சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதே என் நினைவிற்கு வருகிறது. உங்களுக்கும் தானே?

வ.முனீஸ்வரன்