மரங்கள் அவை வரங்கள்

மரங்கள்

எங்கள் வீட்டிற்குமுன் ஒரு வேப்ப மரம் நிற்கிறது. அது ஓங்கி வளர்ந்து கொடிபோல் படர்ந்து இருக்கிறது; மாடியில் குடியிருக்கும் எனது வீட்டின் முற்றத்திலும் பரந்து விரிந்திருக்கிறது.

அதில் காகம் இருக்கும்; குயில் இருக்கும்; சிறுகுருவிகள் இருக்கும்; மயிலும் இருந்திருக்கிறது.

நாங்களும் அதன் நிழலில் இருப்போம். விருந்தினர் வந்தாலும், அதன் அடியில் அமர்ந்திருப்போம். எங்கள் குடும்ப விஷயங்கள் அனைத்தும் அவற்றுக்குத் தெரியும். எங்கள் குடும்ப உறுப்பினராக, பார்வையாளராக, நலம் விரும்பியாக அது இருந்தது.

சென்ற ஏப்ரல் மாதம் அதற்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை; எதிர்பாராமல் வேம்பின் இலைகள் எல்லாம் கருகத் தொடங்கின; மரம் சோர்வடைந்தது; நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். விவசாயத் துறையை நாடினேன்; ஆறுதல் கூறினார்கள்; தேயிலை வைரசின் பாதிப்பாம்; மழைக்காலம் வந்ததும் துளிர்விடும் என்றனர்.

வேப்பம் புண்ணாக்கைத் தான் பூச்சிக் கொல்லியாகப் பயன்படுத்தி வருகின்றனர். அது எப்படி வேப்ப மரத்தில் வைரஸ் என்றால், பூச்சிக்கொல்லி மீதே பூச்சியா? என்றும் எண்ணினேன்.

சிலநாள்களில் அதிர்ச்சியில் வாழ்ந்த எங்களுக்கு ஆறுதலாக மழையும் வந்தது; மரம் தளிர்த்தது. மரங்களைப் பற்றிய ஆர்வம் பிறந்தது; அறிந்ததை உங்களுக்குத் தருகிறேன்.

மரம் என் சகோதரி

மரங்கள் என்றதும் எனக்கு ஒரு காதல் காட்சிதான் நினைவுக்கு வருகிறது. அவனும் அவளும் யாரும் அறியாமல் ஒரு மரத்தடியில் மகிழ்ந்து அளவளாவி இருக்கின்றனர்.

கடற்கரை ஓரம்; ஈரமும் மணல் பரப்பும் பார்த்த அவளுக்குத் திடீரென ஒன்று நினைவிற்கு வந்தது; சட்டென எழுந்து அவனிடம் கூறினாள்.

இந்தப் புன்னை மரம் எனக்குத் தமக்கை முறையாகும். எப்படியென்றால், “சிறுவர்கள் விளையாடும் போது மறந்து போட்டுச் சென்ற புன்னை விதை முளைவிட்டு வளர்ந்தது; என் தாய் அதற்குத் தண்ணீருக்குப் பதில், நெய்யும் பாலும் விட்டு வளர்த்தாள்.

அது மட்டுமன்று, என்னிடத்தில் என் அம்மா, அம்மரம் உன் தமக்கை; உன்னைவிடச் சிறந்தவள்;’ என்று கூறி, வளர்த்தாள். ஆகவே, எனக்குத் தமக்கையான இப்புன்னை மர நிழலில் மகிழ்ந்து உரையாட நாணமாக இருக்கிறது.” என்றாள். இந்தக் காட்சி, சங்க இலக்கியமான நற்றிணையில் இருக்கிறது.

விளையாட்டு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முனை அகைய
நெய்பெய்து தீம்பால் பெய்துஇனிது வளர்ப்ப
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே
– நற்றிணை (172)

இதில் இரண்டு செய்திகள் இருக்கின்றன. ஓன்று, மரங்களை நம் முன்னோர் குடும்ப உறுப்பினர்களாகக் கருதி இருக்கிறார்கள்.

மற்றொன்று தன் குழந்தைகளைப் போன்று தாய்மார்கள் மரங்களுக்கு நெய்யும், பாலுமிட்டு இனிது வளர்த்திருக்கிறார்கள் என்பது.

அவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கையை நடத்தியிருக்கிறார்கள். இயற்கையைப் போற்றி அதனொடு பின்னிப் பிணைந்திருந்த பாரம்பரியம் நம்முடையது என்பதற்கு இதை விட ஆதாரம் வேறு வேண்டுமா?

சாமிக்கு ஒரு மரம்

நம் முன்னோர்கள் மரங்களையே வழிபட்டு இருக்கிறார்கள்; தெய்வங்களோடு மரங்களையும் இணைத்து வழிபட்டனர்.

விநாயகருக்கு அரச மரம்

அம்மனுக்கு வேப்ப மரம்

சிவனுக்கு வில்வ மரம்

குற்றால நாதருக்கு குறும்பலாமரம்

தட்சிணா மூர்த்திக்கு ஆலமரம்

 

அரசர்களுக்கும் அடையாளப் பூக்கள் இடம் பெற்றிருந்தன

சேரனுக்குப் பனம் பூ

சோழனுக்கு அத்திப் பூ

பாண்டியனுக்கு வேப்பம் பூ

தெய்வீக மர வழிபாடு

இத்தகு தெய்வீக மர வழிபாடு இன்றும் இருக்கிறது. மானாமதுரை அருகே “வேதியநேந்தல் விலக்கு” என்ற இடத்தில் ஒரு மரம் சுமார் ஒர் ஏக்கர் பரப்பில் அடையாறு ஆல மரம் போன்று, பரந்து விரிந்து வளர்ந்திருக்கிறது. இந்த மரத்திற்கு வேர்ப் பகுதி கிடையாது.

கிளையில் உள்ள முதல் காம்பின் நுனிப் பகுதியில் 3 இலையும், அடுத்த காம்பின் நுனிப் பகுதியில் 4 இலையும், அடுத்த இலையில் 5 இலையும் அடுத்து 6 பின் 7 என வரிசையாக முளைத்திருக்கின்றன. கூடுதலாக இலைகளோ, காம்போ இல்லாதது விந்தை.

இன்னொரு வியப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அம்மரம் பூக்கள் மட்டுமே பூக்கின்றன; காய்கள் காய்ப்பதில்லையாம். வறட்சிக் காலங்களிலும் இம்மரம் பசுமையாக இருக்கிறது.

அதனால், சுற்றுப்புறக் கிராம மக்கள் இம்மரத்தினைத் தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். அவர்களின் நோய்களுக்கு இம்மரத்து இலைதான் மருந்து; தாவரவியல் மாணவர்களுக்கு இம்மரம் நல்ல விருந்து.

பட்டுக் காய்ச்சி மரம்

இன்னொரு மரத்தைப் பற்றியும் சொல்லி விடுகிறேன். சேலத்தின் அருகில் அணை மேடு என்று ஒரு கிராமம். அங்கு ஸ்ரீ சாரதாம்பாள் கோயில் உள்ளது. இங்குள்ள அத்தி மரத்தின் கீழ், காமதேனுவைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.

அத்தி மரத்தின் கிளைகளில் பட்டுத் துணியைக் கட்டிக் காமதேனுவை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதனால் கோயிலின் வாசலில் ஒரு முழம் பட்டுத் துணியை விற்பவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும். மரத்தைப் பார்த்தால் “பட்டுக் காய்ச்சி மரம்” என்று கூறத் தோன்றும்.

திருவோடு  மரம்

திருவோடு மரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? சிவகங்கை அருகில் முத்துப் பட்டி என்று ஒரு கிராமம். அங்குள்ள முருகன் கோவிலின் பின்புறம் உள்ள 200 வயது பழமையான மரத்தின் இலை, தட்டையாக இருக்கும்; காய்கள் சுரைக்காய் வடிவில் பருத்துக் காணப்படும்.

அதன் இலைகள் மருந்திற்கும் காய்கள் திருவோட்டிற்கும் பயன்படுகின்றன. அம்மரத்தைக் கிராமத்தினர் தெய்வமாக வணங்கி வருகின்றனர். அதன் காய்கள் ஒவ்வொன்றும் சுமார் 3 கிலோ எடை இருக்கும்.

கேரளா, ஆந்திராப் பக்தர்கள் திருவிழாக் காலங்களில்; இம்மரத்திற்குச் சிறப்புப் பூஜை செய்து, இலைகளைச் சேகரித்துச் செல்கின்றனர்.

வெளிநாட்டு மரங்கள்

நமது உள்ளுர் மரங்கள் போன்று வெளிநாட்டு மரங்கள் பற்றியும், இங்குச் சொல்லுவது சிறப்பு என்று கருதுகிறேன்.

ஆப்பிரிக்காவில் பாபோப் என்ற விந்தை மரம் உள்ளது. அதனைத் தாய்மரம் (Mother Tree) என அழைக்கிறார்கள். அஃது ஓர் ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே இலைகளோடும், பூக்களோடும் கனிகளோடும் இருக்கும். மற்ற ஒன்பது மாதங்களிலும் ஓர் இலைகூட இன்றி மொட்டையாய் வாழும்.

3000 ஆண்டுகள் வாழும் தன்மை உடையது. தோரா என்ற கடவுள் சொர்க்கத்திலிருந்து அதனைப் பிடுங்கி எறிந்தார் என்ற கதையும் உண்டு. அம்மரம் அளவில் மிகப் பெரியதென்பதால், சிறு பூச்சிகள் முதல் பெரிய விலங்குகள் வரை ஆயிரக்கணக்கான உயிரினங்களுக்கு அடைக்கலமாக விளங்குகிறது.

வறட்சியான காலங்களில் அம்மரவேரில் உள்ள நீரை மக்கள் குடிநீராகப் பயன்படுத்துகின்றனர். பொறுமை மற்றும் தாய்மை உணர்வின் அடையாளமான அம்மரத்தை ஆப்பிரிக்கர்கள் தாய்மரம் எனப் பாவிக்கின்றனர்.

கலிபோர்னியாவில் ஒரு வகை மரம் உள்ளது. அது பத்தடி உயரம் வளரும்; பெருங்காற்றடித்தால், இதற்குக் கோபம் வந்து விடுகிறது; பேயாட்டம் ஆடி இலைகளை அடித்துக் கொண்டு, அடங்கி விடுமாம். அவைமட்டுமல்ல! உடனே, விரும்பத்தகாத ஒரு வித நெடியைப் பரப்பும். அதைக் கோபக்கார மரம் என்று அழைக்கிறார்கள்.

தென் அமெரிக்காவின் சில காடுகளில் ஒரு வகை மரம் உள்ளது. அம்மரத்தில் துளை போட்டால், பால் வருகிறது. இரப்பர் மரம் மாதிரி, இஃது ஒரு வகை பால் மரம். ஆனால், குடிப்பதற்கு இப்பால் பசும்பால் போல் இருப்பதுடன், உடலுக்குப் பலமும் தருகிறது. இங்குள்ள மக்களுக்கு இந்தப் பால் ஒரு முதன்மை உணவாகும்.

நம்மூர் நந்தவனங்கள்

நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த நந்தவனங்கள் ஊருக்கு வெளியே இருந்தன. அதில் பொதுக் கிணறு, குளிப்பதற்குத் துலாவசதி குளிக்கும் நீர் கொண்டு பலவகை வண்ணச் செடி, கொடி, மரங்கள் அதை எண்ணும் போது, அச்செய்கையின் சிக்கனம், தொலை நோக்கு, சுற்றுச் சூழல் குறித்த அவர்களின் பார்வை விளங்கும்.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” எனவும் ‘ஊருக்கு ஒரு கோயில்; கோயிலைச் சுற்றித் தெப்பம்’ எனவும் சொல்லுவர்.

அக்கூற்றுப்படி, குளம், நந்தவனம், தல விருட்சம் என நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்வு, சூழல் மேம்பாட்டில் அவர்கள் கொண்ட அக்கறை போன்றவை விளங்குகின்றன.

உலகம் சூடாகிறது என்று சொன்னாலும், சொன்னார்கள். சுற்றுச் சுழல் பற்றிப் பேசுவது பலருக்கு இப்பொழுது ஃபேஷனாகி விட்டது.

இயற்கையிலிருந்து செயற்கையை நோக்கி நாம் செல்கிறோம். இயற்கையைக் காப்பாற்றும் பல்வேறு வழிகளில் மரம் நடுதல் மட்டுமின்றி, நட்ட மரங்களைப் பாதுகாத்தலும் ஒரு வழி.

நம் பிள்ளைகளுக்கு மரங்களின் மீது ஒரு பக்தி வர வேண்டும். மரம் மழை தரும் – உணவு தரும் – நிழல் தரும் – மருந்து தரும் – மன நிறைவைத் தரும் – வாழ்வைத் தரும் – மரங்கள் வெறும் மரங்கள் அல்ல – அவை இறைவன் நமக்களித்த வரங்கள்.

– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்

 

Visited 1 times, 1 visit(s) today