மாமரம்

மரங்கள் சிரித்தன

ஒரு பெரிய காட்டில் பெரிய மாமரமும், வேப்ப மரமும் அருகருகே இருந்தன. அம்மாமரத்தில் நீண்ட நாள்களாக கிளி ஒன்று வாழ்ந்து வந்தது. தான் வாழும் மாமரமே சிறந்தது என்று அது எப்போதும் பெருமை பேசும்.

மாமரத்தின் அருகில் இருந்த வேப்ப மரத்தில் காகம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஒரு நாள் காகம் கிளியிடம் “இத்தனை பெருமை பேசுகிறாயே? அப்படி என்ன சிறப்பு உன் மரத்தில்?” என்று கேட்டது.

கிளியும் “அகன்று விரிந்த என் மரத்தைப் பார். நீண்ட இலைகள், பருத்த காய்கள் எங்கும் நிறைந்துள்ள அழகைப் பார்.”

“மாம்பழத்தை விரும்பாதோர் இந்நிலத்தில் உண்டோ?.”

“விழாக் காலங்களில் மாவிலைகளை தோரணமாகக் கட்டி மகிழ்கிறார்கள்.”

“பலவகைப் பறவைகளும் விலங்குகளும் நாடி வருவது என் மரத்தையே” என்று ஆரவாரமாகக் கூறியது.

அதைக் கேட்ட காகம் “என் வேப்ப மரத்தின் அருமை உனக்கு தெரியுமா?”

“பசுமையான இலைகள், பச்சை வண்ணக் காய்கள், மஞ்சள் நிறக் கனிகள் மரமெங்கும் நிறைந்து இருக்கும் அழகைப் பார்.”

“என் மரத்தின் இலை, பூ, பட்டை, வேர் எல்லாமே நோய் தீர்க்கும் மருந்தாகும்.”

“விதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல வகைகளிலும் பயன்படுகிறது. எனவே என் மரமே சிறந்தது” என்றது.

இவற்றின் சச்சரவைக் கேட்டுக் கொண்டிருந்த மாமரமும் வேப்பமரமும் பறவைகளின் அறியாமையை நினைத்து சிரித்தன.

வேப்பமரம் பறவைகளைப் பார்த்து, “என் அருமைப் பறவைகளே. வீண் பெருமை பேசுவதால் என்ன லாபம். இயற்கை கொடுத்த பரிசுகளை எல்லோருக்கும் பயன்படுவதே மிகச்சிறப்பு. ஆதலால் பெருமை பேசுவதை தவிர்த்து விட்டு நற்செயல்கள் செய்ய புறப்படுவீர்” என்று கூறியது.

அதனைக் கேட்ட காகமும் கிளியும் பெருமை பேசுவதை தவிர்த்து விட்டு தங்களால் ஆன உதவிகளை மற்றவர்களுக்கு செய்யத் தொடங்கினர்.

இப்போது மாமரமும் வேப்பமரமும் பறவைகளின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ந்து சிரித்தன‌.

 


Comments

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.