மரம் வளர்ப்போம்!

நாம் வாழும் இந்த பூமியில் ஒரு காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்தன. ‘மரங்கள் இயற்கையின் வரங்கள்’ என்பது பழமொழியாகும்.

அப்படிப்பட்ட இயற்கை வரங்களான மரங்கள் அதிகளவில் இருந்தபோது ஊரெங்கும் செழிப்பாகவும், பசுமையாகவும் காணப்பட்டது. ஆனால் அவையெல்லாம் இன்றைக்கு கானல் நீராக மாறிப்போனது.

தற்போது ஆங்காங்கே ஒரு சில மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. மரங்கள் அதிகளவில் மனிதர்களால் அழிக்கப்பட்டு அவ்விடங்களில் மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், தொழிற்சாலைகளும் வளர்ந்து நிற்கின்றன.

‘மரங்கள் வளர்த்தால் மட்டுமே மழை பெய்யும்’ என்பது நிதர்சனமான உண்மையாகும். மரங்கள் இல்லாமல் இந்த உலகத்தில் நாம் எப்படி வாழ முடியும்? அப்படிப்பட்ட வாழ்க்கை மிகவும் கடினமாகும்.

ஆகவே! மரங்களை நாம் எப்படி வளர்க்கலாம்! அதனால் கிடைக்கும் பயன்களைப் பற்றி இக்கட்டுரையில் இனி விரிவாய்க் காண்போம்.

வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்

வீட்டுக் கொல்லைப்புறத்திலும் வீட்டுக்கு முன்பும் வேப்பமரம், புங்கைமரம் போன்றவை வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவை ஒரு சில வீடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.

வேப்பமரம், புங்கைமரம் ஆகிய இரண்டும் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரக்கூடியவை.

இனிமேல் வீடுகளில் பல மரங்களை வைக்க முடியவில்லை என்றாலும் வீட்டுக்கு ஒரு மரம் வைத்து அதனை வளர்த்து வந்தால், நமக்கும் நல்ல பலன் அளிக்கும். வருங்கால சந்ததியினருக்கும் உதவியாக இருக்கும்.

என்பது பொன்மொழியாகும். இதுவே நிதர்சனமான உண்மை. ஆகவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது என்பது நமது கடமையாகும்.

கல்விக்கூடங்களில் மரம் வளர்ப்போம்

அன்றாட வாழ்க்கையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று அறிவை மட்டுமே வளர்க்கிறார்கள். அவர்கள் மரங்களையும் வளர்த்தால் அவர்கள் உட்கார்ந்து படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். நல்ல நிழல் கொடுக்கும்.

அங்கு வளர்க்கப்பட்ட மரங்களின் மூலம் கிடைக்கும் குளிர்ச்சியான காற்று உடலுக்கு நன்மையைத் தரும்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கக்கூடிய ஒவ்வொரு மாணவரின் பிறந்தநாள் அன்று ஒவ்வொருவரும் மரக்கன்றுகளை பள்ளிகளில் நட்டால் அவர்களது நினைவாக அந்த மரம் மாணவர்களைப் போலவே வளர்ந்து கொண்டு வரும்.

அதுபோல பள்ளி, கல்லூரிகளில் எந்த ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கினாலும் அதனை ஒரு மரக்கன்று வைத்துத் தொடங்கினால் சாலச் சிறந்தது. இப்படி பள்ளி, கல்லூரிப் போன்ற கல்விக்கூடங்களில் மரம் வளர்த்துப் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மரத்தை வளர்த்து மழையை அழைப்போம்

மழை பொழிவதற்கு மரம் முக்கியமான ஒன்றாகும். மரங்கள் தங்களின் உணவுப் பொருட்களை சைலம் மற்றும் புளோயம் வழியாகக் கடத்துகின்றன. இதனால் மரங்களுக்கு ஏற்படும் வியர்வைத் துளிகள் இலைகளின் நுண்ணியத் துளைகளின் மேல் அமர்ந்திருக்கும்.

அது சூரிய ஒளியின் மூலம் நீராவியாக்கப்பட்டு ஆகாயத்திற்குச் சென்று அங்கு குளிர்விக்கப்பட்டு மழை பொழிவைத் தருகின்றது. இப்படி மரங்களை அதிகமாக வளர்த்து மழையை அழைக்கலாம்.

என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறுகிறார்.

எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். ஆகவே மழை இல்லாத உலகத்தை உருவாக்க மரங்களை வளர்த்து மழையை அழைப்போம்.

பறவைகளுக்கு கூடு கட்ட பல மரங்களைத் தருவோம்

ஒருகாலத்தில் பறவைகள் எல்லாம் மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.
‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது பழமொழி.

அதைப்போல மரங்களில் பறவைகள் கூடி வாழ்ந்தால் அதனால் இடப்படும் எச்சங்கள் மூலம் செடிகள் முளைத்து அது மரமாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் மரத்தை வெட்டிய பிறகு பறவைகள் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

சிட்டுக்குருவி, தூக்கணாங்குருவி, காடைப்புறா, கருங்குயில் போன்ற பல பறவைகளின் நடமாட்டம் மரங்களை வெட்டிய பிறகு குறைந்து விட்டது.

ஆகையால் இனி வரும் காலங்களில் அவ்வாறு நாம் செய்யாமல் பறவைகளுக்கு கூடு கட்டுவதற்காக பல மரங்களை வளர்ப்பதன் மூலம் பறவை இனத்தைக் காப்பாற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நீர் வளம் காக்க நிறைய மரங்கள் வளர்ப்போம்

நாம் வளர்க்கக்கூடிய மரங்களின் வேர்களானது பூமிக்கு அடியில் பாறைகளைத் துளைத்துக் கொண்டு அதிக தூரத்திற்குச் செல்லும்.

இதன் மூலம் மழைப்பொழிவின்போது நீரானது மரத்தின் மீது பட்டு தண்டின் வழியாக வேருக்குக் கடத்தப்படும்.

அந்த வேரின் மூலம் தண்ணீர் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பூமியின் நீர்மட்டத்தை அதிகரிக்கும் இதன் மூலம் நமது நீர் வளமானது காக்கப்படும்.

இப்படி நம்முடைய நீர் வளமானது காக்கப்பட்டால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு நாம் நீர் வளத்தை விட்டுச் செல்ல முடியும்! இல்லையென்றால் அவர்கள் நிற்கதியாய் நிற்க நேரிடும்.

ஆகவே நீர் வளம் காக்க நிறைய மரங்களை வளர்ப்பது என்பதை எல்லோரும் முக்கியமான குறிக்கோளாகக் கொண்டு நிறைய மரங்களை வளர்க்க வேண்டும்.

தொழிற்சாலைகளில் மரம் வளர்ப்போம்

நமது நாட்டில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் நாம் மரங்களை வளர்ப்பதன் மூலம் அந்த தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறக்கூடிய வெப்பத்தை நம்மால் குறைக்க முடியும்.

இதன் மூலம் தொழிற்சாலைகளில் உள்ள வெப்பம் குறைக்கப்பட்டு தொழிலாளர்கள் நன்றாக வேலை செய்ய முடியும். எனவே தொழிற்சாலைகளில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும்.

முன்னோர்களைப் போல மரம் வளர்ப்போம்

நமது முன்னோர்கள் முற்காலத்தில் சாலைகளின் ஓரங்களில் புளிய மரத்தினை நட்டனர்.

ஏனென்றால் புளியமரத்தின் கிளைகள் மிகவும் வலிமையானதாக இருக்கும். புளியமரம் அதிக தண்ணீரை உறிஞ்சாது மற்றும் அதனுடைய வேர்கள் வெகு தொலைவிற்கு செல்லாது.

மேலும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய புளியம்பழம் போன்றவைகளின் மூலம் வருவாய் கிடைக்கும் என்பதாலும் சாலைகளில் நடந்து பயணிப்போர்களுக்கு நிழலில் அமரவும் புளியமரம் ஏதுவாக இருக்கும் என்பதாலும் சாலையோரங்களில் புளிய மரத்தினை நட்டனர்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்களை வெட்டி ரோடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இனி வரும் காலங்களில் நம் முன்னோர்கள் நட்ட புளிய மரத்தையே சாலைகளின் ஓரங்களில் வளர்ப்பது சிறப்பானதாக இருக்கும்.

உயிர் கொடுக்கும் மரங்கள்

மரங்கள் அனைத்தும் மனிதர்களிடமிருந்து கிடைக்கக்கூடிய கார்பன் டை ஆக்ஸைடை(CO2) உட்கிரகித்து ஆக்ஸிஜனாக (O2)மாற்றி அதை வெளியிடுகின்றன.

அதனையே மனிதன் சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மனிதனுக்கு உயிர் கொடுக்கும் மரங்களை நாம் வளர்ப்பது மிகவும் அவசியமாகும். ஆகவே உயிர் கொடுக்கும் மரங்களை நாம் உயிர் கொடுத்து வளர்ப்பது நமது கடமையாகும்.

ஓசோன் படலத்தை ஒழுங்காக்குவோம்

வளிமண்டலத்தின் இரண்டாவது அடுக்கு ஓசோன் மூலக்கூறுகளின் படலத்தைக் கொண்டுள்ளது. இந்த ஓசோன் படலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக துளை ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மனிதர்களுக்கு சூரிய ஒளி தாக்கத்தின் மூலம் தோல் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துக்கள் வரக்கூடும்.

ஆகவே அந்த ஓசோன் படலத்தில் துளை ஏற்படாமல் இருக்க மரங்களை அதிகமாக வளர்த்து மழை பொழிவைப் பெருக்கி ஓசோன் படலத்தை ஒழுங்காக்குவோம். மரத்தை வளர்த்து மனித வாழ்க்கையைக் காப்போம்.

மனிதர்களின் வாழ்க்கையில் மரங்கள் சிறந்த இடத்தை பெற்றுள்ளன. அதிகமாக மரங்களை வெட்டி தொழிற்சாலைகளைக் கட்டி தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெருக்கிக் கொண்டே போய்க் கொண்டிருக்கிறோம்.

ஆனால் அவை வருங்காலத்தில் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாகும்.

ஆகவே மரங்களை வளர்த்தால் மட்டுமே மழையை பெற முடியும்! மழை பெய்தால் மட்டுமே எல்லா உயிர்களும் வாழ முடியும்!

வீடுகளில் மரங்கள், கல்விக்கூடங்களில் மரங்கள், தொழிற்சாலைகளில் மரங்கள், நீரின் வளத்தை காப்பதற்காக மரங்கள், பறவைகளுக்கு இருப்பிடத்தை கொடுக்க மரங்கள் இப்படியாக எல்லாவற்றிற்கும் மரங்களே முக்கியமாக இருக்கின்றன.

மேற்கண்ட செயல்பாடுகளின் மூலமே நம்மால் மரத்தை வளர்க்க முடியும்! நம்முடைய மனிதத்தை காக்க முடியும்! வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்ட முடியும்!

வருங்கால மனிதர்களுக்கு பணம், பதவி, சொத்து ஆகியவற்றை விட்டுச் செல்வதற்குப் பதிலாக, உயிருக்கும் மேலாக இருக்கும் மரங்களை அவர்களுக்கு விட்டுச் சென்று வளமான வாழ்வை உருவாக்குவோம்.

பெ.சிவக்குமார்
பி.எட் (வேதியியல்) முதலாம் ஆண்டு
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம்
கைபேசி:  9361723667
மின்னஞ்சல்: sivakumarpandi049@gmail.com