‘ஹாரன்’ சத்தம் கேட்டு செக்யூரிட்டி ஓடி வந்து, திறந்திருந்த கேட்டை மீண்டும் திறப்பது போல திறந்து விட்டார்.
அந்த காருக்கு அவ்வளவு என்ன மரியாதை என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்.
அந்த காரில் உள்ளவருக்கு தான் அந்த மரியாதை எல்லாம். காலை ஒன்பது மணிக்கு எப்போது அந்த கார் வரும் என்று எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது; பிடித்தவர்கள் மகிழ்ச்சியிலும், பிடிக்காதவர்கள் வெறுப்பிலும்.
எப்படியோ அந்த காருக்கு என்று ஒரு மரியாதை இருக்கத்தான் செய்கிறது.
மழையில் நனையாமலிருக்க வேண்டுமானால் குடையை பிடித்துக் கொள்ளலாம்; ஆனால் மழையை நிறுத்த முடியாது.
அது போலத்தான், கார் வருவது. பிடிக்காதவர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் பார்ப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
ஆனால், கார் வரத்தான் செய்யும். காரா வருகிறது, காரின் உள்ளே இருப்பவரால் அல்லவா காரே வருகிறது.
கையில் நிறைய பொருள்களை தூக்கிக் கொண்டு பள்ளியின் உள்ளே சென்ற துரை, காரின் சத்தம் கேட்டு கையில் உள்ள பொருளை அங்கேயே விட்டுவிட்டு, காரை நோக்கி வேகமாக ஓடி வந்து இறங்கியவரின் கையில் உள்ள பேக்கை வாங்கிக் கொண்டு, அவருக்கு பின்னாலே பவ்வியமாக நடந்து வந்தார்.
எப்போதும் ஒருபொதுவான விதி என்னவென்றால், பெரிய மனிதர்களுடன் இருக்கும்போது, அவர்களின் முன்னால் அமரச் சொன்னாலும் அமராமல் இருப்பது, நடந்து செல்லும்போது பின்னால் மட்டுமே நடப்பது, இதுபோன்ற சில விஷயங்களால் மட்டுமே பெரிய மனிதர்களிடம் நல்ல பெயர் எடுக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
துரையை பற்றி சொல்லவே வேண்டாம். துரைக்கு, எல்லாமே மேலதிகாரிதான்.
அந்த பள்ளியின் நிர்வாகமே இவரின் கண்ணசைவில் தான் இயங்குவதாக பலரும் பேசிக் கொள்ளுவார்கள்.
துரை அவ்வளவு ஒரு விசுவாசியாக இருக்கிறார்.
எல்லோருக்கும் ஒரு ஆசை இருக்கிறது. எப்படியாவது துரையின் இடத்தை, நாம் பிடித்துவிட வேண்டும் என்பதே அது.
அந்த அதிகாரியின் நிழல் என்பது கிடைக்காத ஓன்று என்றே நினைத்துக் கொண்டிருந்தனர்.
அப்படி, அவர் என்ன தான் செய்வார்? ஒன்றுமே இல்லை. அவர் வகித்து வந்த பதவிதான் அவ்வாறு நினைக்க வைத்தது. குண்டூசி வாங்குவதானாலும் கடப்பாரை விற்பதாக இருந்தாலும் அவருடைய அனுமதி வேண்டும்.
பள்ளியின் வளாகத்தில் எந்த ஒரு அசைவும் அவருடைய கண்ணசைவில் தான் என்று இருக்கும்.
அவருக்கு கீழே வேலை பார்க்கும்போது சில உதவிகள், பல நன்மைகள் பெற வேண்டுமானால் அவருடன் இணங்கி போவது ஓன்று.
இன்னொன்று கடமைக்காவது பல்லை காட்டிக்கொண்டு மனதில் வெறுப்பை சுமப்பது ஒன்று.
இப்போது, எல்லோருக்கும் மேலாக துரையின் நடவடிக்கை இந்த பள்ளியையே பொறாமை படவைக்கும்.
அந்த அதிகாரி உள்ளே வருவதிலிருந்து கடைசியில் கண்ணிலிருந்து மறையும் வரை துரையின் உடல் அந்த அதிகாரியின் நிழலோடு தான் பயணிக்கும்.
நாட்கள் நகர்ந்தன.
அந்த அதிகாரியின் ஓய்வு நாள் வந்தது. அதிகாரியின் சிரித்த முகமெல்லாம் அன்று நசுங்கிய பூக்களை போல வதங்கி போயிருந்தது. அவருக்கு விட்டு செல்ல மனமில்லாவிட்டாலும், வேறு வழியில்லை.
புதிய அதிகாரியும் வந்தாகி விட்டது. மனமுவந்து ஏற்றுக் கொண்டவர்களால் சிரிக்க முடியவில்லை; வெறுப்புடன் இருந்தவர்களால் நடிக்காமல் இருக்க முடியவில்லை.
பிரிவு உபச்சார விழா. ஓய்வு பெறும் அதிகாரிக்கு ஆளுக்கு ஆள் பொன்னாடை, மாலை, கிப்ட், என்று ஏகப்பட்டதைக் கொடுத்தனர். எல்லாவற்றையும் எடுத்து பெரிய பைக்குள் திணித்து வைத்தனர்.
வீட்டுக்கு கிளம்பும் நேரம் வந்தது. எல்லோரும் கையை கொடுத்து விட்டு மெல்ல நகர தொடங்கினர். இப்போது, அந்த இடத்தில் அதிகாரி மட்டும் நின்று கொண்டிருந்தார் துரைக்காக.
வேகமாக துரை வந்து பையை தூக்கினார்; தூக்க முடியவில்லை; மல்லுக்கட்டி தூக்கி கொண்டு நடந்தார் காரை நோக்கி.
சிறிது தூரம் நடந்தவருக்கு ஒரு அழைப்பு.
“சீக்கிரம் இங்க வாங்க! டவுனுக்கு போகணும். நாளைக்கு பங்கஷனுக்கு பொருள் வாங்கணும்!” கூப்பிட்டவர் புதியதாய் வந்த அதிகாரி.
பொருள் நிரம்பிய பையைக் கீழே வைத்துவிட்டு “சார், பார்த்து போய்ட்டு வாங்க! இந்த பக்கம் வரும்போது அவசியம் வந்துட்டு போங்க!”ன்னு சொல்லிவிட்டு, புதுஅதிகாரியின் வார்த்தைக்காக காத்திருந்தவர் போல மெல்லமாக காரை நோக்கி நடந்தார் துரை.
கண்ணுக்கு எட்டிய வரை யாருமே தென்படவில்லை; அவரவர்கள் வேளையில் மும்முரமாக இருந்தனர். லேசான புன்னகையுடன் நடந்தார் பழைய அதிகாரி பையுடன்.
இப்போது பை கனமாகவே இல்லை; பையிலிருந்த கனமெல்லாம் நெஞ்சுக்கு மாறியது போல இருந்தது.
ஒருவார்த்தை மட்டும் நினைவுக்கு வந்தது “எதுவும் நிரந்திரமில்லை!”
கார் சத்தமில்லாமல் வெளியே சென்றது.
பொய்கை கோவி அன்பழகன்
மயிலாடுதுறை