மருதாணி சிவப்பு – அறிவியல் குறுங்கதை

மருதாணி சிவப்பு ஒரு நல்ல அறிவியல் குறுங்கதை.

“வேதி, தூற‌ (மழை) போடுது. மாடியில காய போட்ட துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வரியா?” என்றார் அம்மா.

“சரிமா” என்றபடி தனது அறையிலிருந்து இரண்டாவது தள மொட்டை மாடிக்கு விரைந்தார் வேதிவாசன்.

மழை வேகமெடுக்கத் தொடங்கியது.

கொடியில் காய போடப்பட்டிருந்த துணிகளையெல்லாம் வேகவேகமாக உருவிக் கொண்டு கீழே இறங்கி வந்தார் வேதிவாசன்.

“என்னப்பா? எல்லா துணியும் ஈரமாயிடுச்சா?” என்றார் அம்மா.

“கொஞ்சமாதாம்மா….” என்று பதிலளித்தபடி, அங்கிருந்த நாற்காலியில் துணிகளை வைத்துவிட்டு அறைக்கு நகர்ந்தார் வேதிவாசன்.

நாற்காலியில் வைக்கப்பட்ட துணிகளை தொட்டு பார்க்க, சில துணிகள் ஈரத்துடன் இருப்பதை அம்மா உணர்ந்தார். அவைகளை மட்டும் தனியே எடுத்து வீட்டினுள் இருந்த கொடியில் உலர்த்துவதற்காக விரித்து போட்டார்.

 

சிறிது நேரத்தில் மழை நின்றது. கார்மேகமும் அவ்வளவாக இல்லை. இருந்த போதிலும், சூரியஒளி இன்னும் தென்படாமல் இருந்தது.

சிறிதுநேரம் கழிந்தது. சுளீரென சூரிய ஒளிக்கதிர்கள் பூமியை வந்தைடைய தொடங்கின‌.

படிப்பக அறையில் இருந்த சன்னல் மூலம் இதனை உணர்ந்த வேதிவாசனுக்கு, நனைந்த துணிகளின் ஞாபகம் வந்தது. எழுந்து வெளியறைக்குச் செல்ல, அம்மா (வீட்டினுள் இருந்த) கொடியிலிருந்து எல்லா துணிகளையும் எடுத்துக் கொண்டிருந்தார்.

“என்னம்மா மாடியில் காய போடனுமா?” என்று வேதி கேட்க, “ஆமாப்பா” என்றார் அம்மா. உடனே அத்துணிகளை அவர் வாங்கிக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றார்.

 

துணிகளையெல்லாம் கொடியின் ஓரத்தில் தொங்கவிட்ட பின், ஒவ்வொன்றாக எடுத்து கொடியில் விரித்துக் காயப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுது காற்று சற்று பலமாக வீசவே, கொடியின் ஓரத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சட்டைத் துணி மட்டும் பறந்து சென்றது.

“ச்சே…கீழ விழுந்திடுச்சே” என்று முணுமுணுத்தபடி மாடியில் இருந்து கீழே பார்க்க, அந்த சட்டை பக்கத்து வீட்டு மாடியில் விழுந்து கிடந்தது.

வேதிவாசன் அதைக் கேட்டு வாங்குவதற்காக, பக்கத்து வீட்டிற்கு சென்றார்; வாயிற் கதவருகே இருந்த அழைப்பு மணி பொத்தானை அழுத்தினார்.

 

பக்கத்து வீட்டு நண்பரது மகள் வெளியே வந்து எட்டி பார்த்தாள்.

வேதிவாசனை கண்டதும், “வாங்க சார்…” என்றபடி விரைந்து வந்து வாயிற் கதவை திறந்து வணக்கத்தை தெரிவித்தாள்.

கதவில் கொஞ்சம் மருதாணி ஒட்டிக் கொண்டது. அப்பொழுதுதான்   இருகரங்களிலும் மருதாணி பூசிக்கொண்டதை அவள் உணர்ந்தாள்.

எட்டாம் வகுப்பில் அவளது அறிவியல் ஆசிரியர் வேதிவாசன்தான். தற்போது அவள் முதலாம் ஆண்டு இளநிலை அறிவியல் பட்ட படிப்பு படித்து கொண்டிருந்தாலும், ஆசிரியர் மீதான மதிப்பும் பக்தியும் சிறிதும் குறைந்திருக்கவில்லை. அதனால்தான், தான் மருதாணி பூசியிருந்ததை மறந்து வாயிற் கதவைத் திற‌ந்தாள்.

பதில் வணக்கத்தை தலையசைவில் தெரிவித்த வேதிவாசன், “அடடா மருதாணி கதவுல ஒட்டிக்கிச்சே!” என்றார்.

“பரவாலங்க சார்” என்றாள் மாணவி.

அப்பொழுது மாணவியின் தந்தையும் வெளியே வந்து வேதிவாசனை உள்ளே அழைத்தார்.

ஒரு சட்டை துணி காற்றில் பறந்து, அவரது வீட்டு மாடியில் விழுந்ததை வேதிவாசன் கூறவே, உடனே தனது இளைய மகனை அழைத்து, துணியை எடுத்து வரச் சொன்னார் அந்த பக்கத்து வீட்டுகாரர்.

 

அப்பொழுது, “சார், மருதாணி பூசிக்கிறதுனால, எப்படி கையில சிவப்பு நிறம் தோன்றுது?” என வேதிவாசனிடம், கேட்டார் மாணவி.

“அதற்கு காரணம் மருதாணி இலையில இருக்கும் லாசோன் (lawsone) எனும் வேதிப்பொருள்தான்” என்றார் வேதிவாசன்.

“நன்றி சார். லாசோனின் வேதிபெயரை தெரிஞ்சிக்கலாமா?” என மாணவி கேட்டார்

“கண்டிப்பா; அதோட வேதிபெயர் 2-ஹைட்ராக்சி-1,4-நாப்தோ குய்னோன்(2-hydroxy-1,4-naphthoquinone)”என்றார் வேதிவாசன்.

மேலும் தொடர்ந்த வேதிவாசன், “லாசோனை, ஹென்ன டோனிக் அமிலம் என்றும் சொல்லுவாங்க; இது ஒருவகை சிவப்பு வண்ண சாயம்”என்றார்.

“ஓ… அதனால்தான் மருதாணி தோலிற்கு சிவப்பு நிறத்தை தருதா?” என்றார் மாணவி.

“ஆமாம்; ஆனா மற்ற சாயம் மாதிரி இல்ல இந்த லாசோன்! அதாவது லாசோனின் சிவப்பு நிறத்தால தோல் சிவப்பா மாறால! லாசோன் தோலில் இருக்கும் கெராடின் புரதத்துடன் வினைபடுவதால சிவப்பு நிறத்தை தருது” என்றார் வேதி.

 

“நல்லது சார். ஆனா மருதாணியினால தோன்றும் சிவப்பு நிறம் நீண்ட நாட்களுக்கு இருக்கே! அது எப்படி?” எனக் கேட்டார் மாணவி.

“சொல்றேன்; மருதாணி விழுதை கை விரல்களில் பூசிய உடன், லாசோன் சாயம் மேற்புறத்தோலில் இருக்கும் நுண்ணிய துளைகள் வழியாக ஊடுருவி சென்று, தோலின் முதல் அடுக்கான ஸ்டிராடம் கார்னியம் மற்றும் இரண்டாம் அடுக்கான எபிடெர்மிஸ் இடையே நன்கு பிடித்துக் கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக கைகள் சிவப்பாகி விடுகின்றன” என்றார் வேதிவாசன்.

 

“சார், இன்னும் ஒரு சந்தேகம்; தோலில் சிவப்பு நிறம் போயிட்டாலும், நகத்துல மட்டும் அவ்வளவு சீக்கிரம் மருதாணியின் சிவப்பு நிறம் போக மாட்டேங்குதே!” எனக் கேட்டார் அந்த மாணவி.

“உம்ம்ம்… மருதாணியில் இருக்கும் லாசோன் நிறமிகள், தோலை போன்றே நகத்தகடு செல்களிலும் நல்லா ஒட்டிக்கும்.

நாளைடைவில் தோலில் உள்ள‌ நுண்ணிய துளைகள் வழியே சாயம் வெளியே வந்திடும்.

ஆனா, தோலில் இருக்கும் நுண்ணிய துளைகளைக் காட்டிலும், நகத்தில் இருக்கும் துளைகளின் விட்டம் மிகவும் சிறியது. அதனால வெளியே வராமல் நகத்தில் நீண்ட நாளைக்கு சாயம் இருக்கும்” என்று பதிலிளித்தார் வேதிவாசன்.

 

“நன்றி சார்”என மாணவி சொல்ல, அருகில் துணியுடன் நின்று கொண்டிருந்தான் அந்த தம்பி.

“சார் இந்தாங்க” என்று சொல்லியபடி அந்த துணியை தனது மகனிடம் இருந்த வாங்கி வேதிவாசனிடம் கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர். துணியை வாங்கி கொண்டு நன்றி தெறிவித்தார் வேதிவாசன்.

“நல்லது சார், டீ குடிச்சிட்டு போகலாமே?” என்றார் பக்கத்து வீட்டுக்காரர்.

“இருக்கட்டும் சார், இன்னொருநாள் பார்ப்போம்” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் வேதிவாசன்.

முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461

 

பிற அறிவியல் குறுங்கதைகள்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.