மருத்துவரால் தரமுடியாத மருந்துகள்!

மருத்துவரால் தரமுடியாத மருந்துகள் என்ற தலைப்பைப் பார்த்ததும் ஆச்சர்யமாக உள்ளதா?

பொதுவாக நமக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் போது மருத்துவரை அணுகி மருந்துகளை உபயோகப்படுத்துவது வழக்கம்.

மருத்துவரால் தரமுடியாத மருந்துகள் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

நாம் செய்ய வேண்டிய செயல்கள், உண்ண வேண்டிய உணவுப் பொருட்கள் ஆகியவையே அந்த மருந்துகள்.

அந்த மருந்துகளை சரிவர பயன்படுத்தினால் நாம் மருத்துவரைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் மிகவும் குறைவு. அவை பற்றித் தெரிந்து கொள்ளவே இக்கட்டுரை.

அந்த மருந்துகள்:

1. உடற்பயிற்சி

உடற்பயிற்சி உடலின் உள்ளுறுப்புகளையும் வெளியுறுப்புகளையும் உறுதியுடனும் வலிமையுடனும் இருக்கச் செய்கிறது.

முறையான உடற்பயிற்சி உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது.

உடற்பயிற்சி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதுடன் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றவும் செய்கிறது.

2. நோன்பு இருத்தல்

நோன்பு இருத்தல் உடலின் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவி செய்கிறது. ஆதலால்தான் மாதம் ஒருமுறை நோன்பிருக்க நம் முன்னோர்களால் வலியுறுத்தப்பட்டது.

3. உறக்கம்

உறக்கம் இயற்கை நமக்களித்த மிகப்பெரிய வரபிரசாதம். சரியான நேரத்திற்கு (இரவு 9.00 மணி) உறங்கி சரியான நேரத்திற்கு (காலை 5.00 மணி) எழுபவர்கள் அருகில் எந்த நோயும் அண்டாது.

முறையான உறக்கம் உடலுறுப்புகள் சீராக இயங்கவும் மன ஆரோக்கியத்திற்கும் உதவும் அரும்பெரும் இயற்கை மருந்து.

4. சிரிப்பு

சிரிப்பு மனிதன் ஒருவன் மட்டுமே அறிந்த இயற்கை மருந்து. ஆதலால்தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

சிரிப்பதால் உடலும் உள்ளமும் ஆரோக்கியம் பெறுகின்றன. சினிமாக்களில் சிரிப்பதற்காகவே காமெடிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. காமெடியன்களும் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விடுகின்றனர்.

5. தன்னை விரும்புதல்

நம்மில் பெரும்பாலோர் ஏதேனும் ஒருசெயலைச் செய்யும்போது ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் தம்மையே குறை சொல்லிக் கொள்ளுவதோடு ஒருவித மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

அதோடு பெரும்பாலோர்க்கு தன்னையே பிடிப்பதில்லை. அவ்வாறு இருக்கக்கூடாது. ‘தன்னையே விரும்புதல்’ என்பது மனதினை உறுதி செய்யும் மருந்து.

6. பிறரை விரும்புதல்

நிறைய மனிதர்கள் எல்லா தவறுக்கும் பிறரையே குற்றம் சுமத்துவர். அச்செயலை அறவே தவிர்க்க வேண்டும். புறாவிற்காக தன்னுடைய ஊனையே கொடுத்த சிபி சக்கரவர்த்தி வாழ்ந்த பூமி இது.

பிற உயிரினங்களையும் விரும்ப வேண்டும் என்பதற்காகவே சிபி சக்கரவர்த்தி கதை சொல்லி வைக்கப்பட்டுள்ளது. பிறரிடம் காட்டும் அன்பு மனஊக்கத்திற்கு வழிவகுக்கும்.

7. தியானம் / யோகா

தியானம் / யோகா உடல் மற்றும் மனஆரோக்கியத்திற்கு இன்றியமையாத இயற்கை மருந்து. தியானம் / யோகா அன்று முதல் இன்று வரை மக்களிடம் பழக்கத்தில் உள்ளது.

8. நல்ல நண்பர்கள்

இன்றைய குழந்தைகளுக்கு நண்பர்கள் கிடைத்தல் என்பது மிகவும் அரிதாக உள்ளது. வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலையே பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்றைக்கு அமைத்திருக்கிறது.

நல்ல நண்பர்களைக் கண்டறிந்து பழகுவது உள்ளத்திற்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும். குழந்தைகள் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்ய பெற்றோர்கள் கட்டாயம் உதவ வேண்டும்.

9. சரியான நேரத்திற்கு சரியான அளவு உணவினை உண்ணுதல்

சரியான நேரத்திற்கு சரியான அளவு உணவினை உண்ண வேண்டும். அதுவே மருந்தில்லா மருந்தாகச் செயல்படும்.

சரியான நேரத்திற்கு அளவிற்கு சரியான அளவு உணவினை உண்ணும் போது உடலின் வளர்ச்சிதை மாற்றம் சரியாகச் செயல்பட்டு நோய் உண்டாவதைத் தவிர்க்கும்.

10. போதுமான அளவு தண்ணீர் அருந்துதல்

போதுமான அளவில் தண்ணீர் அருந்துதல் என்பது மிகவும் இன்றியமையாததது. ஏனெனில் உடலில் உள்ள உறுப்புகள் அதிகளவு நீரினைக் கொண்டுள்ளன.

உதாரணமாக தசைகள் 70 சதவீதம் நீரினையும் மூளை 90 சதவீதம் நீரினையும் இரத்தம் 83 சதவீதம் நீரினையும் பெற்றுள்ளன.

போதுமான அளவு தண்ணீரைப் பருகும்போது உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுவதோடு, சீரான வளர்ச்சிதை மாற்றத்திற்கு வழிவகை செய்யப்பட்டு, நச்சுக்கள் வெளியோற்றப்படுவதோடு உடலின் வெப்பமும் சீராக வைக்கப்படுகிறது.