மூலிகைச் சாறு

மருந்து உட்கொள்ளும் வேளை

மருந்து உட்கொள்ளும் வேளை என்பது நோயாளியின் நிலையையும், நோயின் தன்மையையும் மருந்தின் தன்மையையும் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகளில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வயிற்றில் உணவில்லாத போது மருந்தைக் கொடுப்பது: காலையில் வெறும் வயிற்றில் மாலையில் உணவு ஜீரணித்தப் பிறகு கொடுக்கப்படும்.

மருந்து அருந்திய உடன் உணவு எடுத்துக் கொள்வது: இது இடுப்புக்குக் கீழே உள்ள உறுப்புகளுக்கு வலுவூட்டும். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களிலும், அபான வாயுவின் (இடுப்புப் பகுதியில் உள்ள) கோளாறுகளிலும் கொடுக்கப்படும்.

பாதி உணவு உண்டபின் மருந்தை அருந்தி, மீதி உணவு சாப்பிடுவது: இது சமான வாயு கோளாறுகளிலும், வயிற்று உறுப்புகளில் தோன்றும் நோய்களிலும், பித்தக் கோளாறுகளிலும் கொடுக்கப்படும்.

உணவு அருந்தி முடித்தவுடன் மருந்து உண்பது: வியான வாயு (இருதயத்திலுள்ள வாயு) வின் கோளாறுகளில் காலை உணவிற்கு பின்னும், உதான வாயு (தொண்டையிலுள்ள வாயு)வின் கோளாறுகளில், மாலை உணவிற்கு பின்னும் மருந்தை அருந்த வேண்டும்.

தொப்புளுக்கு மேல் மார்பு, தொண்டை முதலிய உறுப்புகளுக்கு வலு அளிப்பதற்கும், மார்பில் உண்டாகும் நோய்களுக்கும், கபத்தினால் தோன்றும் நோய்களுக்கும், உடல் பருமனாவதற்கும் இக்காலத்தில் மருந்தை அருந்த வேண்டும்.

உணவு சமைக்கும்போது மருந்தை அதில் கலந்து அல்லது சமைத்த பிறகு அதில் கலந்து உண்பது: சிறுவர்கள், மருந்து அருந்துவதில் வெறுப்புடையவர்கள், சுவையை இழந்தவர்கள், உடல் முழுவதும் பரவிய நோய் உடையவர்கள் ஆகியவர்களுக்கு இம்முறையில் மருந்தைக் கொடுக்க வேண்டும்.

உணவு உண்டாலும், உண்ணாவிடிலும் அடிக்கடி மருந்து உண்ணும் முறை: இம்முறை சுவாசம், இருமல், விக்கல், நாவறட்சி, வாந்தி, நஞ்சினால் ஏற்பட்ட நோய் இவைகளில் பயன்படுத்தப்படும்.

ஒவ்வொரு பிடி சோற்றுடன் மருந்தைக் கலந்து உண்பது: இது ஜூரண சக்தியின் வளர்ச்சிக்கும், ஆண்மை வளர்ச்சிக்கும் கொடுக்கப்படும்.

ஒரு பிடி சோற்றுக்கும், மற்றொரு பிடி சோற்றும் நடுவில் மருந்தை அருந்துவது: இம்முறை இருதய நோய், வாந்தி இவற்றில் பயன்படும். இந்த இருமுறைகளுக்கும் பிராண வாயுவின் கோளாறுகளால் ஏற்படும் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும்.

இரவில் படுக்கும்முன் மருந்தை அருந்துவது: கழுத்துக்கு மேல் பகுதிகளில் உள்ள உறுப்புகளில் தோன்றும் நோய்களுக்கு இம்முறையைப் பயன்படுத்த வேண்டும்.

 

மருந்து உட்கொள்ளும் சில விதிமுறைகள்:

கஷாயங்கள்: ஒரு பங்கு (சுமார் 15-20 கிராம்) மருந்தில் 400 மி.லி நீர் சேர்த்து சிறு தீயில் கொதிக்க வைத்து 50 மி.லி ஆக சுண்டவைத்து வடிகட்டி சாப்பிடவும். கஷாயங்களை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

சூரணங்கள்: சூரணமருந்துகள் 1 ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தேன், நெய், மோர், வெந்நீர் இவைகளில் ஏதேனும் ஒன்றுடன் நோய்க்குத் தகுந்தவாறு எடுக்கவும். சூரண மருந்துகள் ஒரு மாதத்திற்கு மேல் வைத்திருந்தால் வீரியம் குறைந்து விடும்.

அரிஷ்டங்கள், ஆஸவங்கள்: இவைகளை சம அளவு நீரில் கலந்து உணவுக்குப் பிறகு எடுக்கவும். குழந்தைகளை மருந்தின் அளவு மிகக் குறைவாக இருக்க வேண்டும்.