மறந்து போன குடிமராமத்து

குடிமராமத்து என்பது ஒரு ஊரில் உள்ள மக்களே அந்த ஊரில் உள்ள  நீர்நிலைகளான ஆறு, குளம், கண்மாய் ஆகியவற்றில் பராமரிப்பு  பணிகள் மேற்கொள்வதைக் குறிக்கும்.

குடி ‍என்றால் மக்கள் என்றும் மராமத்து ‍என்றால் பராமரிப்பு என்றும் பொருள்.

இப்பழக்கம் பண்டை காலம் முதல் தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்த பராம்பரிய பழக்கமாகும். இன்றைய சூழ்நிலையில் மறந்து போன முக்கிய நிகழ்வாகும்.

இனி குடிமாரத்து தோன்றிய விதம், குடிமராமத்தில் செய்யப்பட்ட பணிகள், குடிமராமத்தின் பயன்கள், குடிமராமத்து மறைந்த விதம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பார்ப்போம்.

 

குடிமராமத்து தோன்றிய விதம்

அன்றைக்கு வேளாண்மையே முக்கிய தொழிலாக இருந்தது. நாட்டின் வருமானத்திற்கும், குடிமக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண்மையே மூலமாகும்.

வேளாண்மை நடைபெற நீர் இன்றியமையாத ஒன்றாகும். எனவே நீரினைப் பாதுகாத்து தேவையானபோது பயன்படுத்திக் கொள்ள நீர்நிலைகளான கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.

அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட நீர்நிலைகளை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் முறையாக பராமரித்து வந்தனர் அன்றைய மக்கள்.

மேலும் நீர்நிலைகளின் பராமரிப்பிற்கு அன்றைய கிராம சபைகள் பொறுப்பேற்று சுதந்திரமாகவும், பொருளாதார வளத்துடனும் செயல்பட்டு வந்தன.

 

குடிமராமத்தில் செய்யப்பட்ட பணிகள்

அன்றைய நாட்களில் வடகிழக்கு பருவ மழை காலத்தின் அறுவடை முடிந்ததும், கோடையின் தொடக்கத்தில் கிராம மக்கள் வேளாண்மைக்கு ஆதாரமாக இருக்கும் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள், குட்டைகள் ஆகியவற்றில் தேவையான நீரினை சேமிக்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

அதாவது நீர்நிலைகளின் கரைகளை உயர்த்தினர். நீர்நிலைகளின் கரைகளிலிருந்து கரைகளின் உயரத்தினைப் போல் இருமடங்கு தூரம் உள்ளே தள்ளி மண்ணினை வெட்டி கரைகளை உயர்த்தி கரையில் ஏற்பட்டிருக்கும் உடைப்புக்களை சரிசெய்தனர்.

இவ்வாறு செய்வதால் கரைகளின் அடிப்பகுதி பாதிப்படைவதில்லை. நீர்நிலைகளின் உட்பகுதியில் தூர்வாரி கரைகள் உயர்த்தப்படுவதால் நீர்நிலைகளில் நீர் சேமிக்கும் கொள்ளவு அதிகரிக்கப்படும்.

நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும் பாதையான வரத்துக் கால்வாய்கள், நீர்நிலைகளின் உட்பகுதிகள், நீர்நிலையின் மிகைநீர் வெளியேறும் வாய்கால்கள் ஆகியவற்றில் வளர்ந்திருக்கும் புதர்கள், களைகள், தடுப்புகள் ஆகியவற்றை நீக்கினர்.

மதகுகள், கலுங்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்தும் பராமரித்தனர்.

 

குடிமராமத்து செயல்படுத்தப்பட்ட விதம்

குடிமராமத்து பணிகளைச் செய்வதற்கு கிராம சபையின் மூலம் அறிவிப்பானது மக்களுக்கு முதலில் தண்டோரா மூலம் செய்யப்படும்.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓரிரு ஆட்கள் கட்டாயம் குடிமராமத்து பணிக்கு வரவேண்டும்.

அவ்வாறு வரஇயலதாவர்கள் கூலி ஒப்பந்த முறையில் இப்பணிக்கு வேறு ஆட்களை நியமனம் செய்ய வேண்டும்.

அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நீர்நிலைகளின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

சோழர்கள் காலத்தில் இம்முறையானது சிறப்பாக செயல்பட்டு நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டன.

பாண்டிய நாட்டில் உள்ள வைகை ஆற்றின் உடைபட்ட கரையினை அடைப்பதற்காக வந்தி என்னும் மூதாட்டியின் பொருட்டு பிட்டுக்காக மண் சுமந்து பிரம்படி பட்டார் இறைவனான சிவபெருமான் என்று கூறப்படும் கதையின் மூலம் குடிமராமத்து பற்றிய‌ முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது.

 

குடிமராமத்தின் பயன்கள்

குடிமராமத்தின் மூலம் ஆண்டுதோறும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் நீர்நிலைகளில் தேவைக்கும் அதிகமான நீர் தேக்கி வைக்கப்பட்டது.

நீர்நிலைகளைத் தூர்வாரும்போது எடுக்கப்பட்ட வண்டல்மண் வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்டது.

இதனால் விவசாயம் செழிப்பாக இருந்தது. கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்ததோடு மக்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பட்டது.

 

குடிமராமத்து மறைந்த விதம்

பழங்காலத்திலிருந்தே வழக்கில் இருந்த குடிமராமத்து வேளாண்மையின் முக்கியத்துவம் குறையத் துவங்கியதும் மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது.

ஆங்கிலேய ஆட்சியில் நீர்நிலைகள், பாசனவழிகள், பொதுச்சாலைகள், பொதுநிலங்கள் என அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன.

1949-ல் இருந்து தமிழ்நாட்டின் நீர்நிலைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வர ஆரம்பித்தன.

இதனால் நீர்நிலைகளின் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

1975 முதல் 1979 வரை தமிழ்நாடு பொதுப்பணித்துறையினரால் குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டது.

எனினும் நீர்நிலைகளின் பராமரிப்பில் கிராம மக்களின் ஆர்வமும் குறையத் தொடங்கியது. நாளடைவில் குடிமராமத்து வழக்கில் இருந்து மறைந்தது.

 

குடிமராமத்து மறைந்ததால் ஏற்பட்ட பாதிப்புக்கள்

குடிமராமத்து மறைந்ததால் நீர்நிலைகள் சரிவர ஆண்டுதோறும் பராமரிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் பருவமழைப்பொழிவானது அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மூன்று மாதங்களாயினும், பருவமழையானது 7 முதல் 15 நாட்களில் பொழிந்துவிடுகிறது.

சரிவர பராமரிப்பு இல்லாத நீர்நிலைகளில் குறுகிய நாட்களில் பெய்யும் அதிக அளவு மழைநீரினை தேக்கி வைக்க முடியாமல் நீர்நிலைகளில் உடைப்புக்கள் ஏற்பட்டு வறட்சிக்கு அடிகோலிகிறது.

நீர்நிலைகளில் நீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் உயருவது இல்லை. ஆனால் நிலத்தடி நீரினை உறிஞ்சி பயன்படுத்துவது தொடர்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது.

நிலமேற்பரப்பு நீரும், நிலத்தடி நீரும் இல்லததால் குடிநீருக்குக்கூட தற்போது பிரச்சினை வருகிறது.

நீர்நிலைகளின் பராமரிப்பு இல்லாததாலும், வேளாண்மை குறைந்துவிட்டதாலும், ஏனையவை முக்கிய தொழில்களாக வந்ததாலும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது.

இதனால் மழைகாலங்களில் குறுகிய நாட்களில் அதிக அளவு பெய்யும் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக உயிர் சேதத்தையும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தி விடுகிறது.

எடுத்துக்காட்டாக 2015-ல் சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ளபெருக்கைக் குறிப்பிடலாம்.

நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததால் தமிழகம் மழைகாலங்களில் சரியான மழையைப் பெறும்போது வெள்ளப்பெருக்கையும், சரியான மழைப்பொழிவு இல்லாதபோது வறட்சியையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

வேளாண்மைக்கு மட்டுமின்றி குடிநீருக்குக்கூட தண்ணீர் இன்றி அவதியுறும் காட்சிகள் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

குடிமராமத்தினை மறந்ததால் ஏற்பட்ட அடுத்தடுத்த விளைவுகளால் ஆரோக்கிய உணவு, ஆரோக்கிய குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்குக்கூட தமிழ்நாட்டில் பிரச்சினைகள் தற்போது தோன்ற ஆரம்பித்து விட்டன.

 

இன்றைக்கு குடிமராமத்து சாத்தியமா?

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசாங்கத்திற்கு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆவண செய்ய வேண்டும்.

இனிமேலும் அவரவர் ஊர்களில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு அந்தந்த ஊர்மக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீர்நிலைகளினால் பயன்பெறும் பாசனதாரர்களைக் கொண்டு பாசன சங்கங்களை வலுப்படுத்தி நீர்நிலைகளின் பணிகளை அந்தந்த பாசன சங்கங்கள் மூலம் செயல்படுத்தி குடிமராமத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம்.

எனவே மக்களும் அரசாங்கமும் சேர்ந்து செயல்பட்டு குடிமராமத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தலாம்.

– வ.முனீஸ்வரன்

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.