மறுபடி மறுபடி படிப்பதுதான் நன்கு படிப்பதன் ரகசியம்.
படிக்க ஆரம்பித்து, படிப்பு மேல் இருக்கும் வெறுப்பினைத் தள்ளுபடி பண்ணி, படி அதுவே நம்மை உயர்த்தும் படி என்பதனை உணர்ந்து, புரிந்து படிக்கும் அன்பர்களுக்கு நான் அறிமுகப்படுத்தும் அடுத்த படி ‘மறுபடி’.
ஒரு துறையிலோ அல்லது கலையிலோ நாம் விற்பன்னராக வேண்டுமானால், தெளிவாகப் படித்துத் தெரிந்த விஷயங்களை மீண்டும் மீண்டும் படித்துப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
தேர்வுகளுக்கு தயார் செய்யும் போது, படித்த விஷயங்களை தேர்வு முடிந்தவுடன் மறந்து விடுவது, உண்மையான படிப்பினையை நமக்குத் தராது.
எந்த ஒரு செயலையும் மறுபடி மறுபடி செய்கின்ற போது, நாம் அதில் தேர்ந்த விற்பன்னர் ஆக முடியும்.
“பத்தாயிரம் மணி நேரம் ஒரு செயலைச் செய்தால், அந்தச் செயலில் அல்லது கலையில் ஒருவர் ஒப்பற்ற நிபுணர் ஆக முடியும்” என்கிறார் அறிஞர் மால்கம் கிளோட்வெல்.
புரியாத பாடங்களைக் கூட மறுபடி மறுபடி படிக்க, அதிலுள்ள குளறுபடிகள் நீங்கி, நம்மில் ஒரு தெளிவு பிறக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
அதற்காக அரைத்த மாவையே அரைத்து, மாவினை புளித்துப் போக விடக்கூடாது. ஒவ்வொரு முறையும் புதிய பரிமாணத்தில் புதிய புரிதலுடன் ஆர்வமாக சிந்தித்துப் படிக்கும் போது, அந்தக் கலையில் நாம் நித்தம் நித்தம் புதுமைகளைப் படைத்திடுதல் சாத்தியமே.
என்னை விடவும் சிறப்பாக
இப்படித்தான் இசைமேதை பீத்தோவன் அவர்கள், வசதி படைத்த பல பணக்காரர்கள் கலந்து கொண்ட ஒரு விழாவில், தனது இசை நிகழ்ச்சியினை நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த விழாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பல சீமான்களும் சீமாட்டிகளும் கலந்து கொண்டனர்.
பொதுவாக இந்த மாதிரி நிகழ்சிகளில் வந்திருக்கும் அனைவரும், அரச குடும்ப பெண்மணிகளின் அழகினையும் அவர்கள் அணிந்திருக்கும் ஆடை மற்றும் அணிகலன்களையும்தான் புகழ்ந்து பாராட்டிப் பேசுவார்கள்.
ஆனால் அன்று நடந்த விழாவில் ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களும் இசைமேதை பீத்தோவனின் இசையினை வெகுவாக ரசித்துப் புகழ்ந்து பாராட்டினர்.
இதைப் பார்த்த அரச குடும்பத்தைச் சார்ந்த மூத்த சீமாட்டி ஒருவர் பீத்தோவனிடம் நேரடியாக வந்து, “நானும் இந்த பியானோ இசைக்கருவி மீட்டுவதைப் படித்து இங்கே வாசித்திருந்தால், எல்லோரும் என்னைத்தான் புகழ்ந்து பேசியிருப்பார்கள் என்று நையாண்டி கலந்த ஆணவம் மற்றும் வெறுப்புடன் கூறினாராம்.
அதற்கு பீத்தோவன்
“மேன்மை பொருந்திய பெண்மணியவர்களே!
பியானோ இசைப்பது மிகவும் இலகுவான விஷயம்தான்.
நான் இந்த மாதிரியான இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு, 40 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மட்டுமே பயிற்சி எடுத்துக் கொண்டேன்.
தாங்களும் இவ்வாறு பயிற்சி எடுத்துக்கொண்டால், என்னை விடவும் சிறப்பாக இது போன்ற இசை நிகழ்ச்சியினை நடத்த முடியும்” என்று பணிவோடு கூறினாராம்.
உண்மைதானே! மீண்டும் மீண்டும் பயிற்சி எடுத்துக் கொண்டால்தானே முயற்சி திருவினையாகும்.
இதைத்தானே வள்ளுவரும்
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்று திருக்குறளில் கூறினார்.
முயற்சியும் பயிற்சியும் இருந்தால்தான் வாழ்வில் உன்னத உயர்ச்சி எனும் வளர்ச்சியினை நாம் அடைய முடியும்.
“உயர்வடைய வழி, மறுபடி மறுபடி”
சில நேரங்களில் ‘நாம்தான் நிறைய படித்துவிட்டோமே! நிறைவாய் படித்து விட்டோமே!’ என்று ஒரு எண்ணம் தோன்றும்.
அப்போது என்ன செய்ய வேண்டும் என்பதுதான் ஐந்தாம் படி. அது என்ன என்பதனை அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.
( படிப்பது எப்படி என்று படிப் படியாய்ப் படிப்போம்)
முனைவர் பொ.சாமி
வேதியியல் இணைப் பேராசிரியர்
வி.இ.நா. செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294
அடுத்தது இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6
முந்தையது புரிந்து படி – படிப்பது எப்படி?- பாகம் 4
Truly an inspirational story of a great genius.
Thank you Sir for sharing this awesome anecdote.
Experience Makes a man perfect..! என்பதை ஆசிரியர் அருமையாக விவரித்துள்ளார்…