மறுபிறவி பற்றித் தமிழ் இலக்கியம் சொல்லும் கருத்துக்களை நம்மிடம் பகிர்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜதாசன்.
உலகினில் இருந்தோர் இறந்தோர் எண்ணிலர். பார்த்து உணர்ந்தோரும் இருப்பது நிலையானதென்றே எண்ணுவர். அவர்தம் செயலும் எண்ணமும் அதைச் சார்ந்தே இருக்கும்.
நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
என்று திருவள்ளுவர் நிலையாமையை இயம்புகின்றார்.
அழியப் போகும் உயிரிது என்றெண்ணி யாராவது நம்மில் சும்மா இருப்போமா?
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
ஒருநாள் முழுவதும்கூட உயிரோடிருப்பது நிச்சயமில்லாத மனிதன் எண்ணுகின்ற எண்ணங்கள் பல கோடிகளாகும்.
சுழலும் உலகில் உழன்று கொண்டிருக்கும் உயிரினங்களில், ‘வாழ்க்கை நிலையற்றது’ என்று உணரக்கூடிய சிந்திக்கும் ஆற்றல் பெற்றவன் மனிதன் ஒருவனே.
பிறப்பு என்பது ஊழ்வினையால் வருவதே, என்பது நம்முடைய ஆழ்ந்த கலாச்சார நம்பிக்கை.
அதையே திருவள்ளுவர்.
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து
நமக்கு எந்த காலத்திலும் நிச்சயமாகப் பிறவியை தரக்கூடிய மூலகாரணம் ஆசைதான்.
மாணிக்கவாசகர் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.
‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாகிப்
பல்விருக மாகிப் பறவையாய் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய்
வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாநின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன்’
தத்தம் வினைப் பயனாய் பிறப்புகள் அமைகின்றன.
சீவக சிந்தாமணி ‘தொல்லைநம் பிறவி எண்ணின் தொடுகடல் மணலும் ஆற்றா’ என்று சொல்கிறது.
பழமையான நம் முற்பிறவிகளை எண்ணிக் கணக்கிட்டால், அவை தோண்டப் பெற்ற கடலின் மணலும் ஒப்பிடப் போதாத அளவுடையன என்று மனிதப்பிறவியினை எடுத்துக்காட்டுகின்றது.
சிவ வாக்கியர்.
ஓடி ஓடி ஓடி ஓடி உள் கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாள்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.
என்று பிறவிகளைக் காட்டுகின்றார்.
பகவத்கீதையிலும்
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜூந
தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப.௪-௫
“அர்ச்சுனா! எனக்கும், உனக்கும் பலபிறவிகள் கழிந்துவிட்டன. அவை எல்லாவற்றையும் நீ அறியமாட்டாய். நான் அறிவேன்” என்று பிறவிகளை கண்ணன் காட்டுகின்றார்.
இக்கருத்தை புறநானூறு
'தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியா தோரையும் அறியக்காட்டி' 27
என்று இறத்தலையும் பிறத்தலையும் உணர்த்துகின்றது
அதனையே திருவள்ளுவர்
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு 339
என்கிறார்.
உடல் அழிந்தாலும் உயிர் அழிவதில்லை. ஆக மரணம் என்பது உயிருக்குத் தூங்குவது போன்றது. அந்த உயிர் வேறோர் உடலோடு பிறப்பது தூங்கி விழிப்பது போன்றதாகும்.
உடல் அழியும் உயிர் அழியாது என்பதை திருவள்ளுவர் மிகத் தெளிவாக நமக்கு விளக்குகின்றார்.
குடம்பை தனித்தொழியப் புள் பறந்து அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு 338
என்கிறார்.
உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள சம்பந்தம், முட்டையின் ஓட்டுக்கும் அதிலிருந்து பறந்து போய்விடும் பறவைக்கும் உள்ளது போன்றதே.
திருவள்ளுவரும் ஊழின் தன்மையை விளக்குகின்றார்.
ஊழின் பெருவலி யாவுள மற்றுஒன்று
சூழினும் தான் முந்துறும்
பழவினையை விட வல்லமையுள்ளது என்ன இருக்கின்றது? நம் பழ வினையை தவிர்க்க என்ன என்ன செய்தாலும் அப்பழ வினையே முன்னால் வந்து நிற்கும்.
(பழவினை என்றால் முன்வினை அதாவது முற்பிறவியில் செய்த வினை என்று பொருள். நாம் செய்யும் செயல்களின் பயனை இந்தப் பிறவியில் மட்டுமல்ல இனி வரும் பிறவிகளிலும் அனுபவிக்க வேண்டி வரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.)
பழம் பாடல்
எந்த ஆருயிர் யாதோர் பொருளினைச்
சிந்தையாற் பற்றிக் காரியஞ் செய்திடின்
அந்த யோனியதா மென்ற றிவினால்
பந்தமில் பொருள் பற்றுத றக்கதே
என்று சொல்கிறது.
மனிதன் இறக்கும் தருவாயில் என்ன மாதிரியான எண்ணத்தை மனதில் நினைத்துக் கொண்டு இறக்கின்றானோ, அதற்கேற்றார்போல் பிறவி அமைகின்றது என்று இப்பாடல் வரிகள் சொல்லுகின்றது.
கைவல்யம் (சந்தேகந்தெளிதல் படலம் 85)
சடமதாகிய தியான மெய்யாகிய சர்வ முத்தியை நல்கும்
திடமானது எப்படியெனில் அவரவர் தியானமே பிறப்பாகும்
உடலமாசையால் தியானிக்கில் தியானித்த உடல் களாகுவர் மைந்தா
தொடர்பவங் கெடச் சொரூபமே தியானிக்கிற் சொரூப மாகுவர் மெய்யே
பொய்யாகிய தியானமானது சத்தியமாகிய பரிபூரணமான கைவல்யத்தைக் கொடுக்கின்ற திடத்தை உடையதாயிருப்பது எப்படி? என்று கேட்டால் அவரவர் மரணகாலத்தில் சிந்திக்கின்ற உருவமாகவே மறுபிறவி உண்டாகும்.
ஆகையால் இந்த உடல் மீதுள்ள ஆசையால் நினைத்த நினைப்பே வடிவமாவார்கள்.
தொன்று தொட்டு வருகின்ற பிறவியை மீண்டும் மீண்டும் பெறாமலிருக்க, ஆத்ம சொருபத்தை சிந்தித்தால் பிறவாநிலை அடைவார்கள் என்று விளக்குகின்றது.
நாலடியார் கீழ்க்கண்டவாறு சொல்கிறது.
பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு.(101)
இளைய பசுங்கன்றை பசுக்கூட்டத்தின் நடுவே விட்டாலும், தன்தாயைத் தேடி அடைந்து விடும்.
அதுபோல் முற்பிறவியில் செய்த பழவினையும்,அவ்வினை செய்தவனைத் தேடி அடைவதில் வல்லமையுடையதாகும்.
ஒருவன் செய்த கருமங்கள் பல பிறப்பிலும் தொடர்ந்து பயனைத் தரும் என்பதை உணர்ந்து நன்றே செய்திடல் வேண்டும்.
நம் பழவினை நம்மைத் தொடரும் என்பதை நினைவில் இருத்தல் நன்று. அவரவர் விதிப்படியே பிறவிகள் இருக்கும்.
மறுபிறவி சிறக்க இப்பிறவியில் நல்லவராய் வாழ்வோம்.
இராமமூர்த்தி இராமாநுஜதாசன்
திருநின்றவூர் 602024
கைபேசி: 9444410450