மஞ்சுளா மறைந்து ஓராண்டு முடிந்து விட்டது.
ராமகிருஷ்ணன் முகத்தில் அப்பியிருந்த சோகம் மட்டும் மாறவில்லை.
ஷீலா பிறந்தது முதல் அவள் உடம்பை ஒன்று மாற்றி ஒன்று படுத்திக் கொண்டேயிருந்தது.
மனோ, யு.கே.ஜி போய்க் கொண்டிருந்தான்.
ஆயிரம் அலுவல்களுக்கிடையேயும் மஞ்சுளாவை அக்கறையுடன் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். பணத்தைத் தண்ணீராகச் செலவழித்தான்.
மூடநம்பிக்கைகளை வெறுக்கும் குணம் கொண்டிருந்தாலும், பெரியோர்களது சொல்லுக்கு மதிப்பு தந்து, கிரக தோஷங்கள் விலக, எவ்வளவோ பூஜைகள் செய்தான்.
நாளுக்கு நாள் இளைத்துத் துரும்பாய்ப் போன மஞ்சுளா, வாயில் நுழையாத பெயரைக் கொண்ட ஓர் நோய்க்குச் சொந்தக்காரியாகி, இரண்டு குழந்தைகளையும் ஒருநாள் ராமகிருஷ்ணன் வசம் ஒப்படைத்துவிட்டுப் போய்ச் சேர்ந்தாள்.
இந்த ஓராண்டு காலமாக எந்திரமாகவே இயங்கி வந்த ராமகிருஷ்ணன், மனோவையும் ஷீலாவையும் கவனித்துக் கொள்வதில் மட்டும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தான்.
தாயில்லாக் குழந்தைகள். அவனது அம்மாவிடமும் தங்கை வேணியிடமும் அவனது குழந்தைகள் நன்றாகவே ஒட்டிக் கொண்டு விட்டனர்.
அம்மா, தங்கை வேணி, அவனது இருகுழந்தைகள், அவன் இதுதான் ராமகிருஷ்ணனின் குடும்பம். அப்பா இல்லை. அப்பா காலமான கையோடு தங்கை வேணியின் திருமணத்தை முடித்து வைத்தான்.
இரக்கமில்லாத காலன், திருமணமாகி சிலமாதங்களிலேயே, சாலை விபத்தொன்றுக்கு வேணியின் கணவன் உயிரைப் பலியாக்கி வைத்தான்.
நல்ல குணம் கொண்ட மஞ்சுளா, வேணியைத் தன் தங்கையாகப் பாவித்து தங்களுடனேயே வைத்துக் கொண்டாள். அவளது புகுந்த வீட்டினர் எவ்வளவோ கெஞ்சியும், வேணியை அங்கு அனுப்ப மறுத்துவிட்டாள் மஞ்சுளா.
இவ்வளவு உயர்ந்த குணம் கொண்ட மஞ்சுளாவின் இழப்பில் ராமகிருஷ்ணன் இடிந்து போயிருப்பது வியப்பில்லைதான்.
தாடியும் மீசையுமாக கண்ணெதிரே நடமாடி வரும் மகனைப் பார்க்கையில் தாய் மகேஸ்வரிக்கு நெஞ்சு பாரமாய் கனக்கும். அவனை மறுமணம் செய்து கொள்ளச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தி கெஞ்சிக் கூத்தாடிப் பார்த்து விட்டாள்.
ராமகிருஷ்ணன் மறுமணத்திற்குச் சம்மதிக்காமல் ஒரே பிடிவாதம் காட்டி வந்தான். மறுதிருமணம் என்னும் பேச்சை எடுத்தாலே எரிமலையாக வெடித்தான்.
வேணி சொல்லும் எடுபடவில்லை. அண்ணன், குழந்தைகளுடன் அல்லாடுவதை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ராமகிருஷ்ணன் ஒருநாள் தனிமையில் இருந்தபோது மிகுந்த தயக்கத்துடன் கேட்டாள் வேணி.
“அண்ணா, கோவிச்சுக்காம நான் சொல்றதைக் கேட்பியா?”
‘என்ன?’ என்பது போல எவ்விதச் சலனமின்றி அவளை ஏறிட்டு நோக்கினான் ராமகிருஷ்ணன்.
“நீ மன்னி மேல் வச்சிருக்கிற அபரிதமான அன்பு அளவிடமுடியாதுதான். அவள் இல்லாம குழந்தைகளோட நீ படற பாடு இருக்கே.. என்னால தாங்கமுடியலே அண்ணா. எவ்வளவுதான் நானும் அம்மாவும் கவனித்துக் கொண்டாலும், அம்மாவால் எவ்வளவு நாளைக்குப் பார்த்துக்க முடியும்? அதனால், நான் ஒண்ணு கேட்பேன். கோபிக்க மாட்டியே” என்றவள் மேலே பேச தயங்கினாள்.
“கேளு…. என்ன கேட்கப் போகிறாய்? அம்மா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாங்க. அதுக்கு சம்மதம் சொல்லும்படி சொல்லுவ அதானே?”
“அண்ணா, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்டிருக்கே! நான் கேட்க நினைத்தது உன் மறுமணம் அல்ல. என் மறுமணம் பற்றி. எண்ணி அறுபத்தாறு நாட்களே என்னுடன் வாழ்ந்த என் கணவரும் ஒரு முற்போக்குச் சிந்தனையுடையவர்தான்.
அவர் ஆன்மா சாந்தியடையணும்னா, நான் மறுமணம் செஞ்சே ஆகணும். எது எப்படியோ ஷீலாவுக்கும் மனோவுக்கும் நான் கடைசி வரைக்கும் தாயாக இருக்கப் பிரியப்படறேன்.
எனக்கொரு நல்ல மனம் கொண்டவனைக் கல்யாணம் செஞ்சுவச்சு உன் குழந்தைகளை என்னோடு அனுப்பி வைண்ணா?”
வேணி கூறியதைக் கேட்டு நெகிழ்ந்து போன ராமகிருஷ்ணன் ‘சே! எனக்கு இப்படி ஓர் எண்ணம் வரவே இல்லையே’ என வெட்கி தலைகுனிந்தான்.
உடனே மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்கினான்.
ஜானகி எஸ்.ராஜ்
திருச்சி
கைபேசி: 9442254998