வழக்கத்தில் இருந்து மறையும் மொழிகள் பட்டியலில் இந்தியா உலக அளவில் முதல் நிலையில் உள்ளதாம்.
பல்வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில், 196 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாய நிலையில் உள்ளனவாம்.
வருடந்தோறும் பிப்ரவரி இருபத்தி ஒன்றாம் நாள் சர்வதேசத் தாய்மொழித் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஐ.நா.வின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ வழக்கத்தில் இருந்து மறையும் நிலையில் உள்ள மொழிகள் குறித்துப் பட்டியல் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலகம் முழுவதும் தற்பொழுது சுமார் 6000 மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில் சுமார் 2500 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாயத்தில் உள்ளனவாம்.
200 மொழிகளை சுமார் 10 பேர் மட்டுமே பேசுகின்றனர், 178 மொழிகளைச் சுமார் 10 முதல் 50 பேர் மட்டுமே பேசுகின்றனர்.
கடந்த முப்பது ஆண்டுகளில் உலகம் முழுவதும் 200க்கு மேற்பட்ட மொழிகள் வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. 538 மொழிகள் வழக்கத்தில் இருந்து மறையும் அபாயகரமான நிலையில் உள்ளன.
607 மொழிகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. தற்பொழுது உலகில் வழக்கில் உள்ள மொழிகளில் மூன்றில் ஒரு பங்கு மொழிகள் மற்றும் ஆப்பிரிக்க மொழிகளில் 10 சதவீத மொழிகள் மறைந்து விடும்.
எனினும் 800க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் ‘பப்புவா’ நியூ கினியா நாட்டில் சுமார் 88 மொழிகள் மட்டுமே வழக்கிலிருந்து மறையும் அபாயத்தில் உள்ளன என்றும் அந்தப் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழி என்பது ஒரு மனிதன் இன்னொருவனைத் தொடர்பு கொள்வதற்கான ஒரு கருவி மட்டுமே என்பது மேம்போக்கான கருத்து.
ஒவ்வொரு மொழிக்குப் பின்னாலும், நீண்டதொரு கலாசாரப் பாரம்பரியம் இருந்தே தீரும்.
தன்னை, தன்னைச் சார்ந்தவர்களை, இந்த உலகத்தை, இயற்கையை, பிரச்சனைகளை, ஆட்சியாளர்களை, பிற கலாசாரங்களை ஒருவன் எப்படிப் பார்த்தான்? எவ்விதம் எதிர் கொண்டான்? என்ற நுணுக்கமான பதிவுகள் கதை, கவிதை, பழமொழி எனப் பல வடிவங்களில் அவனது மொழியில் உருப்பெற்ற பிரபஞ்ச ஞானத்தின் வரலாற்றுப் படிமங்களாக நிலை கொள்கின்றன. ஆகவே தான், மொழியைக் காலத்தின் கண்ணாடி என்றனர்.
ஒரு மொழியின் அழிவு ஒரு நாகரிகத்தின் மரணமாகக் கவலையுடன் கவனிக்கப்படுகிறது.
மொழிகள் வழக்கிலிருந்து மறைவதால், அவற்றைப் பேசி வந்த மக்களின் பாரம்பரிய மிக்க பண்பாடும் மறைந்து விடுகிறது.
ஆராமெயிக் மொழி – ஒரு பார்வை
இப்படித்தான் ஏசுநாதர் பேசிய ‘ஆராமெயிக்’ என்ற மொழியும் உலக வழக்கில் இருந்து மறைந்து போனது. இருந்தாலும் ஏசுநாதர் பேசிய மொழியைச் சிரியா நாட்டில் இருக்கும் ஒரு கிராமத்தினர் இன்றும் பேசி வருகிறார்கள் என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
சிரியா நாட்டில் ‘மலுலா’ என்ற சிறிய கிராமத்தில் வாழும் மக்கள் தான் இந்த மொழியைப் பேசுகிறார்கள். இந்த கிராமத்தில் 4ஆயிரம் பேர் தான் வசிக்கிறார்கள். ஏசுநாதர் பேசிய இந்த ‘ஆராமெயிக்’ மொழி காதுக்கு இனிமையான மொழி என்று கூறுகிறார்கள். ஆராமெயிக் மொழி சுமார் 3000ஆண்டுகளுக்கு முன்பு உதித்த மொழியாகும்.
ஏசுநாதர் காலத்தில் இது (ஆராமெயிக்) பேசும் மொழியாக இருந்தது. அப்போது ‘ஹீப்ரு’ மொழியும் இருந்தது. இந்தியாவில் எப்படி ‘சமஸ்கிருதம்’ மத சம்பந்தமான விஷயங்களுக்கு மாத்திரமே பயன்படுத்தும் மொழியாக இருந்ததோ, அதே போல் ஏசுநாதர் காலத்தில் ஹீப்ரு மொழியும் மத சம்பந்தமான விஷயங்களுக்கும், ஆராமெயிக் மக்கள் பேசுவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
ஏசுநாதர் தனது போதனைகள் எளிதாக மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதற்காக மக்களின் பேசும் மொழியாகிய ஆராமெயிக் மொழியிலேயே மக்களிடம் பேசினார்.
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வந்த இந்த மொழியை இன்றைக்கும் 4ஆயிரம் பேர் பேசுகிறார்கள் என்பது ஆச்சரியமான செய்தியே!
கல்வி, தொழில், வேலை முன்னேற்றங்களினால் வெளியுலக தொடர்பு அதிகரிப்பதன் காரணமாக பேச்சு மொழியாகிய ஆராமெயிக் மொழி முழுமையாக மறைந்து விடும் என்று மொழி ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்து இருக்கிறார்கள்.
– சிவகாசி, ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்