மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31

நீண்ட காலத்திற்கு பின், நண்பன் அலைபேசியின் மூலம் என்னை அழைத்தான். நலம் விசாரிப்பு, தற்போதைய நிலை, பழைய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.

எங்களது உரையாடல் முடிந்தது. அலைபேசியை அணைத்து மேசையில் வைத்தேன்.

ஒருமுறை கிராமத்தில் இருந்த எனது நண்பனது வீட்டிற்கு சென்றதும், அங்கு இருந்த தோட்டம், சாகுபடி நிலங்களைக் கண்டு மகிழ்ந்ததும் என் கண் முன்னே வந்து சென்றது.

நீர்ப் பாசனம் மற்றும் நெல் வகைகள் பற்றிய தகவல்களை நண்பனின் அப்பா எனக்கு விரிவாக எடுத்துச் சொன்னதும் எனது நினைவிற்கு வந்தது.

“சார்… சார்….”

மேசையை பார்த்தேன்.

“நான் தாங்க…” – மேசையில், லோட்டாவில் இருந்த நீர் அழைக்கிறது என்பதை உணர்ந்தேன்.

உடனே, “நீ தானா?” என்றேன்.

“ஆமாம் சார். நானே தான். இவ்வளவு நேரம் உங்க நண்பரோட நீங்க பேசிக்கிட்டு இருந்தத கவனிச்சிக்கிட்டு தான் இருந்தேன்.”

“நான் நண்பனோடு தான் பேசிகிட்டு இருந்தேன்னு எப்படி கண்டுபிடிச்ச?”

“உங்க பேச்ச வச்சு தான்…”

“பரவாயில்லையே!”

“சார் நெல்வயல் பத்திலாம் ஏதோ பேசிக்கிட்டு இருந்தீங்க!”

“ஆமாம், நண்பனுக்கு சொந்தமா நிலம் இருக்கு. நெல்லு தான் விளைவிப்பாங்க… அதுபத்தி தான் கேட்டுகிட்டு இருந்தேன்.”

“நெல் விளையற‌தற்கும் நீர் வேணுமில்லே?”

“நிச்சயமா… நீ இல்லாம எந்த தாவரமும் வளர முடியாதே” என்றேன்.

அப்பொழுது சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ‘மறை நீர்’ பற்றிய தகவல் என் நினைவிற்கு வந்தது. உடனே, “உனக்கு மறை நீர் பற்றி தெரியுமா?” என்றேன்

“நான் தான் நீர். ஆனா, மறை நீருன்னா என்ன தெரியாதே!”

“உம்ம் கேட்டுக்கோ. மறை நீருன்னா, பொருட்கள உற்பத்தி செய்வதற்கும், அதை தொடர்ந்த சேவைகளுக்கும் தேவைப்படும் நீரின் அளவைக் குறிக்கும். ஆங்கிலத்துல மறை நீர, virtual water-ன்னு சொல்றாங்க.”

“எனக்கு புரியல சார்.”

“இம்ம்… ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் தான் மறை நீர்.

உதாரணத்துக்கு தோசைய எடுத்துப்போம். தோசமாவு தயாரிக்க நீர் வேணும். இது தோச சாப்பிடும் அந்த நபருக்கு, நேரடி நீர் பயன்பாடு ஆகும்.

ஆனா, தோசமாவு செய்யப் பயன்படும் அரிசி மற்றும் உளுந்து ஆகியனவற்றை விளைவிக்க நீர் தேவைப்படுது. அத்தோட, விளைந்த நெல், உளுந்து முதலியவற்றை அறுவடை செய்யப் பயன்படும் இயந்திரம், மற்றும் கடைக்கு கொண்டு செல்ல உதவும் வாகனங்களுக்கும் எரிபொருள் தேவைப்படும்.

இந்த எரிபொருள் உற்பத்தியிலும் நீர் தேவைப்படும். இவை எல்லாம் சேர்ந்து தான் தோச மாவுக்கான ‘மறை நீர்’ உள்ளடக்கத்தை உருவாக்குகிறது.

தெரியுமா? மறை நீருக்கு, ‘உட்பொதிக்கப்பட்ட நீர்’ அல்லது ‘மறைமுக நீரு’ன்னும் பேரு இருக்கு. ஆங்கிலத்துல embedded water அல்லது indirect water-ன்னு அழைக்கிறாங்க.”

“ஓஓ… அப்ப ஏறக்குறைய எல்லா பொருட்களிலும் நான் இருப்பேன் தானே?”

“ஆமாம். சொல்லப்போனா, ஒவ்வொரு பொருளையும் தயாரிக்க சராசரியா எவ்வளவு நீர் செலவாகுதுன்னும் மதிப்பீடு செஞ்சிருக்காங்க.”

“அப்படியா!”

“ஆமாம். நான் ஏற்கனவே, சொன்னா மாதிரி, ஒரு பொருள்ல அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் இருப்பதில்ல. ஆனா, அந்த நீர், பொருளின் உற்பத்திக்காக செலவிடப்பட்டிருப்பதால் அதில் மறைந்திருக்கிறது. இதனாலதான் அதுக்கு மறை நீருன்னு பேரு.”

“சரி சார். இத யாரு கண்டுபிடிச்சது?”

பேராசிரியர் டோனி ஆலன் (Tony Allen). இவரு ஒரு புவியியலாளர். 1993-ல இவர்தான் மறைநீர் பற்றிய கருத்து முதல்ல சொன்னாரு.”

“சிறப்பு”

“இம்… பேராசிரியர் ஆலன், நீர் பற்றாக்குறை நிலவும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபபிரிக்க நாடுகளில், மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பான ஆராய்ச்சியின் போது தான் மறை நீர் கருத்தை கொண்டுவந்தாருன்னு படிச்சேன்.

நோக்கம் என்னன்னா, நீர் வளம் நிறைந்த நாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை, நீர் பற்றாக்குறை இருக்கும் நாடுகள் இறக்குமதி செய்வதன் மூலம், அந்த நாடுகளின் நீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியும் என்பதே.”

“எல்லோருக்கும் நல்லது நடந்தா மகிழ்ச்சி தானே”

“ஆமாம்…”

“மறை நீர் கருத்தால வேற‌ என்ன நன்மை இருக்கு?”

“நீர் வளங்கள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சியில மறைநீர் கருத்து ஒரு புதிய துறையா வளர்ச்சி பெற்று வருது. இதன் மூலம், நீர்வளப் பயன்பாட்டின் செயல்திறனை அதிகரிக்கவும், நீர் வளங்களை முழுமையாக நிர்வகிக்கவும் உதவும் ‘நீர் கொள்கைகளை’ மேம்படுத்த மறைநீர் கருத்த முழுமையாகப் பயன்படுத்தலாமாம்.”

“நல்லது சார். நான் கிளம்பும் நேரம் வந்துடிச்சு” என்று கூறி நீர் சென்றது.

நான் அடுத்து எனது பணியைத் தொடங்கினேன்.

(உரையாடல் தொடரும்)

கனிமவாசன்
சென்னை
கைபேசி: 9941091461

மின்னஞ்சல்: drsureshwritings@gmail.com

நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32

வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30

கனிமவாசன் அவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.