பனி தூவும்
பணி செய்யும்
வெண் மகள்
நன்மார்கழி !
நோன்புகள் இருக்க
மாண்புகள் வளர்க்கும்
குளிர் மங்கை
துளிர் மார்கழி !
வாசலின் கோலத்தில்
பூசணைப் பூக்கள்
பாக்களும் பஜனையும்
ஆக்கிடும் மார்கழி !
மாதம் முழுக்கவே
வேதங்கள் ஒலிக்கும்
மா தவம் என்றொரு
மாதமே மார்கழி !
வானவரை வசமாக்கும்
மாணிக்கவாசகரின்
திருவெம்பாவை பாட
வரும் மகளே மார்கழி !
சூடிக்கொடுத்த
சுடர்க்கொடி ஆண்டாள்
பாடிக்களித்த -திருப்
பாவையே மார்கழி !
பொய்கள் உரைக்காத
தை மகளின் தூதாய்
மெய்யென மலர்ந்தாள்
நெய்வாச மார்கழி !
வன்மத்தை ஒழித்துக் காட்டி
தொன்மத்தை நிலை நிறுத்தி
நாடெங்கும் நலம்கொழிக்க
பீடுடைய மார்கழியே வா ..!

கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!