வண்ண வண்ண மலர்களின் கொள்ளை அழகில் அனைவரும் மயங்குவது இயற்கையே. ஆயினும் குறிப்பிட்ட சில வகை மலர்கள் மட்டும் மனமகிழ்வோடு, அவற்றின் மீதான விருப்பத்தையும் அதிகரிக்க செய்கின்றன.
இதற்கு காரணம், அவற்றின் வண்ணத்தோடு வீசும் நறுமணமும் தான்! ஆம், மணம் கமழும் ரோஜா, மல்லிகை உள்ளிட்ட மலர்களை விரும்பாதவர் எவரேனும் உள்ளனரோ?
மலர்களின் நறுமணம் தோன்றுவதன் நோக்கம் என்ன? மலர்களின் நறுமணத்திற்கு காரணமாக இருப்பது எது? இக்கேள்விகளுக்கான விடையை தான் இக்கட்டுரையில் காண இருக்கிறோம்.
முதலில், மலர்களின் நறுமணத்திற்கான நோக்கத்தை பற்றி பார்ப்போம்.
மலர்கள், ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக செயல்படுகின்றன. அதாவது, மலர்களில், ஆண் மலர் பகுதியாக மகரந்தபைகளும், பெண் மலர் பகுதியாக சூலகமும் செயல்படுகின்றன.
மகரந்த பைகளிலிருக்கும் மகரந்த துகள்கள் சூலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள சூல்வித்து உடன் இணைந்து புதிய தாவரத்திற்கான கருவினை உருவாக்குகிறது. இச்செயல் முறையே, மகரந்த சேர்க்கை ஆகும்.
இம்மகரந்த சேர்க்கையில், மகரந்த துகளின் இடப்பெயர்வு முறையானது குறிப்பிடதக்க நிகழ்வு ஆகும். இதற்காக, தாவரங்கள் வெவ்வேறு முறைகளைக் கையளுகின்றன.
இதில் ஒரு முறை தான் சிலவகை பூச்சியினங்களை பயன்படுத்தி கொள்ளும் முறை. ஆம் தேனீ, வண்ணத்துப் பூச்சி முதலிய பூச்சிகள், மகரந்த சேர்கைக்காக தாவரத்திலுள்ள மலர்களால் கவரப்படுகின்றன. மலர்களின் கவர்ச்சிக்கு காரணமாக அவற்றின் நறுமணம் விளங்குகிறது.
எனவே, மலர்களின் நறுமணத்திற்கான நோக்கம், அவற்றின் மகரந்த சேர்க்கைக்காக! அதாவது, பூச்சிகளை கவர்ந்து அவற்றின் மூலம் மகரந்த சேர்க்கையை நிகழ்த்துவதற்காக.
தற்போது, நறுமணத்திற்கு காரணம் என்ன என்ன என்பதை பார்ப்போம்.
மலர்களின் நறுமணத்திற்கு காரணம், அவற்றிலிருக்கும் வேதிபொருட்கள் தான்! ஆம், எளிதில் ஆவியாக கூடிய அரோமெடிக் வேதிச்சேர்மங்களே, மலர்களின் வாசனைக்கு காரணமாக விளங்குகின்றன.
அதே சமயத்தில், ஒரு குறிப்பிட்ட வேதிசேர்மமே, ஒரு குறிப்பிட்ட மலரின் நறுமணத்திற்கு காரணமாக இருப்பதில்லை. மாறாக, பல சேர்மங்களின் கூட்டுகலவையே, நறுமணமாக வீசுகின்றன.
இருப்பினும், குறிப்பிட்ட வகை தாவர இனத்தின் மலர்கள் ஒரே மாதிரியான நறுமணத்தை வெளியிடுகின்றன.
மேலும், வளர்ச்சி அடையாத, அதாவது, மகரந்த சேர்க்கைக்கு தயாராகாத இளம் மலர்கள் குறைந்த அளவே, நறுமணத்தை வீசுகின்றன. இதனால், இளம் மலர்களால் பூச்சியினங்கள் அதிகமாக கவரப்படுவதில்லை.
ஆனால், மகரந்த சேர்க்கைக்கு தயார் நிலையில் இருக்கும் போது, தாவரத்தின் மலர்களிலிருந்து உச்சபட்ச நறுமணம் வெளிவருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், தாவர இனப்பெருக்கம் சிறப்பாக நிகழ்கிறது.
சரி, தற்போது, சில வகை மலர்களின் நறுமணத்திற்கு காரணமாக இருக்கும் வேதிபொருட்களை பற்றி காணலாம்.
ரோஜா
ரோஸ் ஆக்ஸைடு (cis-rose oxide) எனும் கரிம சேர்மமே, ரோஜா மலரின் வாசனைக்கு முக்கிய காரணம். மிகமிக குறைந்த அளவே, ரோஸ் ஆக்ஸைடு சேர்மம் காற்றில் வெளியிடப்பட்டாலும், நம்முடைய மூக்கினால் அதனை நன்கு உணர முடியும்.
இங்கு மிக குறைந்த அளவு என்பது, 5 ppb (parts per billion) ஆகும். parts per billion என்பதின் ஒப்பீடாக, முப்பத்திரெண்டு வருடத்தில் ஒரு நொடி எனக் கொள்ளளாம்.
பீட்டா டாமசீனோன் (beta-damascenone) எனும் வேதிபொருளும், ரோஜாவின் நறுமணத்திற்கு காரணம். 0.009 ppb அளவுள்ள பீட்டா டாமசீனோணையும் நம்மால் நுகர முடியும்.
மற்றுமொரு முக்கிய பகுதிபொருளாக, பீட்டா அயனோன் (beta-ionone) வேதிச்சேர்மம் விளங்குகிறது. இவை தவிர, ஜெரானியோல் (geraniol), நேரோல் (nerol), சிட்ரோநெல்லோல் (citronellol), ஃபர்னிசோல் (farnesol), மற்றும் லினாலூல் (linalool) உள்ளிட்ட சேர்மங்களும் ரோஜாவின் நறுமணத்திற்கு காரணமாக இருக்கின்றன.
அல்லி
இவ்வகை மலரின் தாவர இனத்தை பொருத்து, மணம் வீசும் வேதிபொருட்கள் மாறுபடுகின்றன. இருப்பினும், இவ்வகை பேரினத்தை பொருத்தமட்டில், பீட்டா ஒஸிமின் (beta-ocimene) மற்றும் லினாலூல் (linalool) ஆகிய சேர்மங்களே, அவற்றின் நறுமணத்திற்கு முக்கிய காரணியாக இருக்கின்றன.
மேலும், மைரிசின் (myrcene) மற்றும் இயூகாலிப்டால் (eucalyptol) உள்ளிட்ட சேர்மங்களும் நறுமண காரணிகளாகும்.
மனோரஞ்சிதம்
இம்மலரின் நறுமணத்திற்கு காரணமாக பென்சையில் அசிடேட் (benzyl acetate), லினாலூல், மற்றும் மெத்தில் பென்சயேட் (methyl benzoate) உள்ளிட்ட கரிம சேர்மங்கள் விளங்குவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
செம்முள்ளி / டிசம்பர் பூ
டிசம்பர் பூவின் மணத்திற்கு காரணம் ஐயனோன் (ionone) எனும் வேதிச்சேர்மம் ஆகும்.
வெங்காய தாமரை
வெங்காய தாமரையின் மணத்திற்கு முக்கிய காரணம் ஓசிமினால் (ocimenol) மற்றும் சின்னமைல் ஆல்கஹால் (cinnamyl alcohol) ஆகும். இதில் ஓசிமினால் வேதிபொருளானது, ஒருவித அமில மணத்தையும் (citrusy odour), சின்னமைல் ஆல்கஹால் ஒருவித காரமணத்தையும் (balsamic odour) இப்பூவிற்கு தருகிறது.
எத்தில் மீத்தாக்சி பென்சயேட் (ethyl 2-methoxybenzoate) எனும் சேர்மம் இப்பூவிற்கு பழவாசனையையும் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
சாமந்தி
ஆல்ஃபா பைனீன் (alpha-pinene), யூகலிப்டால் (eucalyptol), காம்ஃபர் (camphor), மற்றும் போர்னியால் (borneol) உள்ளிட்ட டெர்பீன் வேதிசேர்மங்களே, சாமந்தி பூவின் வாசனைக்கு காரணமாக இருக்கிறது.
இருப்பினும், இவ்வகை சேர்மங்கள், சாமந்தி செடியின் இனத்தை பொருத்து மாறுபடுகின்றன. தவிர, கிரிசாந்தினோன் (chrysanthenone), கிரிசாந்தினைல் அசிடேட் (chrysanthenyl acetate) மற்றும் பீட்டா கார்யோஃபிலீன் (Beta-caryophyllene) முதலிய வேதிபொருட்களும் சாமந்தி பூவின் நறுமணத்திற்கு காரணம் ஆகும்.
இயற்கையின் பேரழகு படைப்புகளில் ஒர் அங்கமான மலர்களின் நறுமணத்திற்கான (இயற்கையின்) அறிவியல் அதிசயமானது!
அழகு மலரின் நறுமணத்தால், பூச்சிகள் கவரப்பட்டு, பின் மகரந்த சேர்க்கை நடைபெறுகிறது. இதனால், இத்தாவர இனம் தன்னை இப்பூமியில் நிலைநிறுத்தி கொண்டு, தொடர்ந்து பலுகி பெருகும் நிகழ்வு அபாரம்.
இதற்காக, இத்தாவரத்தின் மலர்கள் பயன்படுத்தும் வாசனைமிகு கரிம சேர்மங்களின் அமைப்பும், அம்மலர்களை போன்றே அழகுடன் இருக்கின்றன.
– முனைவர்.ஆர்.சுரேஷ்
ஆராய்ச்சியாளர்
பகுப்பாய்வு மற்றும் கனிம வேதியியல் துறை
கன்செப்ஷன் பல்கலைக்கழகம், சிலி
sureshinorg@gmail.com
கைபேசி: +91 9941633807
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!