மலர்களை கொல்லும் மலர் என்னும் இக்கதை பூக்களே பூக்களின் வளர்ச்சியை தடுக்கின்றன என்பதை விளக்குகிறது.
அது மதிய நேரம். எட்டாம் வகுப்பில் தாவர உலகம் பற்றி பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர் வேதிவாசன்.
வகுப்பு நேரம் முடிந்து உணவு இடைவேளை தொடங்கியதை பள்ளி மணியோசை மூலம் தெரிந்து கொண்டார்.
அதனையடுத்து, வகுப்பிலிருந்து நேரே தனது அலுவலக அறைக்கு சென்றார். மாணவர்களும் உணவு உண்பதற்காக வகுப்பிலிருந்து கலைந்து சென்றனர்.
வேதிவாசன் தனது இருக்கையில் வந்தமர்ந்தார். ஏனோ தெரியவில்லை. அவருக்கு இன்னும் பசி எடுக்காதிருந்தது.
மேலும் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு பிறகு தான் ஒன்பதாம் வகுப்பிற்கு அவர் பாடமெடுக்க செல்ல வேண்டும்.
எனவே முதலில் தான் கொண்டு வந்திருந்த சர்வதேச ஆய்வுக் கட்டுரைகளை படித்துவிட்டு பிறகு உணவு உண்ணலாம் என முடிவு செய்தார்.
அதன்படி, முதலில் மரங்கொத்தி பறவை அலகின் உறுதி தன்மை குறித்த ஆய்வுக் கட்டுரையை படிக்க தொடங்கினார். அதில் விவரிக்கப்பட்டிருந்த ஆய்வு முடிவுகள் அவரை பிரமிக்க வைத்தன.
முக்கிய குறிப்புகளை தனது நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். சில ஆய்வு முடிவுகளின் மீது, சில வினாக்களும் அவருக்குள் எழுந்தன. அவற்றையும் குறித்துக் கொண்டார்.
அடுத்து, வளிமண்டல கரியமில வாயுவை குறைப்பதற்கான ஆய்வுக் கட்டுரையை எடுத்து படிக்கத் தொடங்கினர். சிலவினாடிகள் கழிந்தன.
தொடர்ந்து நாற்பது நிமிடமாக அவர் படிப்பதும் எழுதுவதுமாக இருந்ததால் சற்று களைப்பு ஏற்பட்டது.
களைப்பை நீக்க, தனது தலையை நிமிர்த்தி, மேசையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தவாறே, சுற்று முற்றும் பார்க்க, அறை வாசலருகே இரண்டு மாணவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டார்.
அவர்கள் இருவரும் அவரிடம் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள். ஒருவன் எழிலன். மற்றொருவன் கபிலன்.
அவர்களை கண்டவுடன் உள்ள வாங்கப்பா, ஏன் வெளியே நிக்கிறீங்க என்றார் வேதிவாசன்.
உடனே வணக்கத்தை தெரிவித்த மாணவர்கள், உள்ளே வந்தனர். பதில் வணக்கத்தை தெரிவித்த வேதிவாசன், எப்ப வந்தீங்க என்று வினவினார்.
“முப்பது நிமிடம் இருக்கும் சார், என்றார்கள்.
“முப்பது நிமிடங்களா….. ஏம்பா அப்பவே கூப்பிடல… என்று வியந்தார் வேதிவாசன்.
“மன்னிக்கனும் சார். நீங்க படிச்சிக்கிட்டு இருந்தீங்க. கூப்பிட்டா உங்களுக்கு தொந்தரவா இருக்கும்… அதான் நீங்களா பார்க்கற வரைக்கும் வெளியே நின்னுக்கிட்டு இருந்தோம் சார். என்றான் எழிலன்.
மாணவர்களது பக்குவத்தை எண்ணி வேதிவாசன் அகமகிழ்ந்தார்.
மாணவர்களை பார்த்து, நீங்க இனி இப்படி காத்திருக்கு வேண்டியதில்ல. நான் ஏதாவது வேலையா இருந்தாலும் என்னை கூப்பிடலாம். என்றார்.
மேலும் தொடர்ந்தவர், வகுப்பு நடக்குற நேரத்துல நீங்க என்ன பார்க்க வரநேர்ந்து, இப்படி காத்துக்கிட்டு நின்னா…. உங்க வகுப்பு பாடம் வீணாயிடும்ல…. என்றார் வேதிவாசன்.
மாணவர்கள் எதுவும் சொல்லவில்லை. தலையை மட்டும் ஆம் எனும்படி அசைத்துக் கொண்டனர்.
“சரி என்ன விஷயம்பா என்றார் வேதி.
மலர்களை கொல்லும் மலர்
“சார், கபிலனும் நானும் பூக்கள் தொடர்பான அறிவியல் செய்திகள பேசிக்கிட்டு இருந்தோம். அப்போ கபிலன் ஒரு புதுசெய்திய சொன்னான். அத நம்ப முடியல. அதுபற்றி அவனுக்கும் மேலும் தகவல் தெரியல… அதான் உங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம்ன்னு வந்தோம் என்றான் எழிலன்.
“அப்படியா என்ன தகவல் சொல்லுங்க. என்றார் வேதிவாசன்.
“சார், ஒரு பூ இருக்காம். அது, பக்கத்துல இருக்கும் மற்ற பூக்கள சாகடிச்சிடுமாம் ஆனா அந்த பூவோட பேரு, எனக்கு மறந்திடுச்சு சார் என்றான் கபிலன்.
“உம்ம்… அரிதான தகவலையும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க. நல்லது. ஆனா நீ இந்த தகவல எங்கு படிச்சே என்று வினவினார் வேதிவாசன்.
“சார், உண்மையில் நான் இந்த தகவலை எங்கும் படிக்கல. போன மாசம், எங்க சித்தப்பா வெளிநாட்டில இருந்து வந்திருந்தாரு. அந்த நாட்ட பத்தி செய்திகள் எனக்கு சொல்லும்போதுதான் இந்த தகவலையும் சொன்னாரு.
அந்த பூவோட பேரும் சொன்னாரு. அந்த பூவோட படத்தைகூட நான் பார்த்தேன். அது மஞ்சள் நிறத்தில அழகா இருந்தது சார் என்றான் கபிலன்.
கபிலன் சொன்ன செய்திகளை வைத்து, அவன் சொல்வது டஃப்போடில் Daffodil மலர்களைத்தான் என்பதை புரிந்து கொண்டார் வேதிவாசன்.
“நீ சொன்னது சரிதான், என்றபடி டேஃபடில்ஸ் மலரை பற்றி கூற முற்பட்டார். ஆனால் எதேச்சியாக அவரது கைகடிகாரத்தை பார்க்க, மதிய உணவு இடைவேளை முடியும் நேரம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்தார்.
உடனே, நீங்க சாப்பிட்டீங்களா என்று கேட்டார் வேதிவாசன்.
“இல்லீங்க சார்.. இனிமே தான் சாப்பிடனும் என்றனர் இருவரும்.
அப்போ முதல்ல நீங்க போய் சாப்பிடுங்க. தகவலை பிறகு சொல்றேன் என்றார் வேதிவாசன்.
ஆர்வமிகுதியால், பரவாயிலங்க சார். ஒருநாள் தானே, நாங்க பசி தாங்கிப்போம்… நீங்க அந்த பூ பத்தி சொல்லுங்க சார் என்றனர் மாணவர்கள்.
ஆனால் வேதிவாசனோ அவர்களது பேச்சை ஏற்கவில்லை. நீங்க முதல்ல போய் சாப்பிடுங்க. அடுத்த வகுப்பு யாருடையது எனக் கேட்டார் வேதிவாசன்.
“அடுத்து கணித வகுப்பு சார் என்றனர் இருவரும்.
“சரி கணித வகுப்புல, பத்து நிமிடம் கடன் வாங்கிட்டு வந்து உங்களுக்கு இந்த தகவலை சொல்றேன். மேலும் வகுப்புல சொன்னா எல்லாருக்கும் பயனா இருக்குமே என்றார் வேதிவாசன்.
ஆசிரியரின் இந்த வார்த்தைகளில் மகிழ்ந்தனர் எழிலனும் கபிலனும். அதனால் சரிங்க சார் என்றபடி அங்கிருந்து இருவரும் புறப்பட்டுச் சென்றனர்.
வகுப்பு துவங்குவதற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்கள் இருந்தன. அதற்குள் பத்து நிமிடங்களை கடனாக கணிதநேசனிடம் கேட்டு வாங்கிவிட வேண்டும் என்பதற்காக அவரது இருக்கையை நோக்கி நடந்தார் வேதிவாசன்.
வேதிவாசன் பெற்ற கடன்
வேதிவாசனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்தான் கணிதநேசன். அதற்காக வகுப்பு மணித்துளிகளை கடனாககூட எளிதில் தந்துவிடகூடியவர் அல்ல, கணிதநேசன்.
அதுவும் பத்தாம் வகுப்பு என்றால் யாராவது அவருக்கு வகுப்பு மணிதுளிகளை கொடுத்தால் மகிழ்வுடன் வகுப்பினை எடுத்துக் கொள்பவர் கணிதநேசன். இதெல்லாம் தெரிந்த அவரிடம் சென்றார் வேதிவாசன்.
“கணி, ஒரு பத்து நிமிடம் கடனா வேணும் என்றார் வேதி.
“என்னப்பா… என்கிட்ட பத்து நிமிடம் கேட்கிற… நம்ம நட்புக்காக எத்தன மணி நேரம் வேனும்னாலும் தரேன். என்றார் கணிதநேசன்.
வேதிவாசனுக்கோ ஆச்சரியம். சரி நல்லதா போச்சே என்று மனதிற்குள் நினைத்தவாரே, நன்றி கணி என்றார் வேதிவாசன்.
உடனடியாக, ஆனா ஒன்ணு, நேரத்தை பள்ளி முடிஞ்ச பிறகு கேளுங்க. என்னோட வகுப்பு நேரத்தை மட்டும் கேட்காதீங்க. பாடத்திட்டம் அதிகமா இருக்கு… எல்லா கணக்குகளையும் வகுப்பிலேயே போட்டு காண்பிக்கனும் என்றார் கணிதநேசன்.
“நெனச்சேன்” என்ற முனகியபடி, ஐயா, வர பத்தாம் வகுப்பில பத்து நிமிடங்கள் மட்டும் கொடுங்க. நேரத்திற்கு நான் வெளியே வந்திடுறேன் என்றார் வேதி.
“மன்னிச்சிக்குங்க வேதி. வேணும்னா உணவு இடைவேளையில அந்த பத்து நிமிடத்தை எடுத்துக்குங்களேன் என்றார் கணிதநேசன்.
அதற்கிடையே இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தது. வகுப்பு துவங்க. பத்தாம் வகுப்றையோ அவரது அறைக்கு பக்கத்தில்தான் இருந்தது. இருப்பினும் இருக்கையில் எழுந்து புறப்பட தயாரானார் கணிதநேசன்.
அதற்குள், மாணவர்கள் அவரை வந்து பார்த்த விஷயங்களை கூறி, பத்து நிமிடங்களை கடனாக தருமாறு மீண்டும் கேட்டுக் கொண்டார் வேதிவாசன்.
வேறுவழியின்றி, ஒருவழியாக கணிதநேசன் ஒத்துக் கொண்டார். சரியா பத்து நிமிடங்கள் மட்டும்தான் வேதி, மீதியிருக்கும் நாற்பது நிமிடத்துல ஒரு முக்கியமான கணித தேற்றத்தை நான் சொல்லி தரணும் என்றார் கணிதநேசன்.
“சரிப்பா என்றபடி, உடனடியாக பத்தாம் வகுப்பறைக்கு சென்றார் வேதிவாசன்.
டஃப்போடில்
அங்கு மாணவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தனர். வகுப்பு துவங்க இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தன.
உள்ளே நுழைந்தவர், எழிலனும், கபிலனும் கேட்ட கேள்வியினை ஒருமுறை எல்லோருக்கும் சொன்னார். பின்னர் அதற்கான விடையை இவ்வாறாக விவரிக்க தொடங்கினார் வேதிவாசன்.
“மாணவர்களே, மலர்களை கொல்லும் மலர் இருக்கிறது. இது ஒருவகை அழகான பூ. அதன் பெயர், டஃப்போடில் என்றார் வேதிவாசன்.
‘டஃப்போடில் என்ற பெயரை கேட்டவுடன், ஆம் என்றபடி கபிலன் தலையசைத்துக் கொண்டான்.
“பூந்தொட்டியில் டஃப்போடில் மலர்களோடு ரோஜா, துலிப் Tulip போன்ற மலர்களை ஒன்றாக வைக்கும் போது, டஃப்போடில் இந்த மலர்களை வாடி வதங்கிப்போகச் செய்கிறது. அல்லது அவற்றை கொன்றுவிடுகிறது.
அதற்கு காரணம் டஃப்போடில் மலரிலிருந்து வெளிவரும் பிசினில் இருக்கும் நார்சிக்லேசின் Narciclasine எனும் அல்கலாய்டு alkaloid சேர்மம் தான் என்றார் வேதிவாசன்.
“குறிப்பா, டஃப்போடில் மலரின் பிசின், ரோஜா செடியில், தீங்கிழைக்கும் நுண்ணுயிரிகள் பெருக்கம் அடையச் செய்ய உதவுவதோடு, நீர் போக்குவரத்தையும் தடைசெய்யுது. அதனால ரோஜா செடி சீக்கிரம் வதங்கி போயிடுது என்றார் வேதிவாசன்.
அனைத்து மாணவர்களும் இச்செய்தியை உற்சாகத்துடன் கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஐரிஸ் பூக்கள்
மேலும் தொடர்ந்தவர், அதேநேரம், நார்சிக்லேசின் சேர்மம் ஐரிஸ் பூக்களின் வாழ்காலத்தை அதிகரிக்கும், அதாவது டஃப்போடில் மலர்களோடு சேர்த்துவைக்க, ஐரிஸ் மலர்கள் சீக்கிரம் வதங்கி போவதில்லையாம் என்றார் வேதிவாசன்.
எழிலன் எழுந்து நின்று, சார் சேர்மம்னா தெரியும். அல்கலாய்டு பத்தி சொல்லுங்களேன் என்றான்.
“சொல்றேன், எப்படி கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள், லிப்பிடுகள் போன்ற சேர்மங்கள் இயற்கையில் இருக்குதோ, அதுமாதிரி அல்கலாய்டு எனும் ஒருவகைச் சேர்மங்கள் தாவரங்களில் இருக்கின்றன என்றார் வேதிவாசன்.
எழிலனை பார்த்து, குயினைன் quinine பற்றி தெரியும்ல என்றார் வேதிவாசன்.
“உம்ம்.. தெரியுமே சார், அது சின்கோனா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் ஒரு மலேரியா தடுப்பு மருந்து என்றான்.
“சரியா சொன்னப்பா…. அந்த குயினைனும் அல்கலாய்டு வகையை சேர்ந்த சேர்மம்தான். பொதுவா அல்கலாய்டுகள் என்பது நைட்ரஜனை கொண்ட கரிம காரச்சேர்மங்கள் ஆகும்.” என்றார் வேதிவாசன்.
“நன்றி சார் என்று சொல்லி எழிலன் அமர, கபிலன் எழுந்து, சார் டஃப்போடில் மலரை போர்டுல வரைய முடியுமா என்று கேட்டான்.
“ஓஓ… வரையலாமே என்றவர், கரும்பலகையில் டஃப்போடில் மலரை மஞ்சள் நிற சுண்ணாம்பு கட்டியை பயன்படுத்தி அழகுற வரைந்தார்.
வேதிவாசன் வரைந்த டஃப்போடில் மலரை கண்டு மாணாக்கர்கள் மகிழ்ந்தனர்.
அதற்கிடையே, சரியாக வகுப்பு தொடங்கி பத்து நிமிடங்கள் முடிந்தது.
வகுப்பறை வாசலில் கணிதநேசன் நின்று கொண்டிருந்தார். உடனே சரி மாணவர்களே உங்களது கணித ஆசிரியர் வந்துவிட்டார் பிறகு பார்க்கலாம் என்றபடி அங்கிருந்து புறப்பட்டார் வேதிவாசன்.
முனைவர்.ஆர்.சுரேஷ்
சென்னை.
அலைபேசி: 9941091461
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!