மலைகள் – உயிர்சூழல்களின் கலவை

மலை வாழிடம்

மலைகள் உயிர்சூழல்களின் கலவை ஆகும். இது நிலவாழிடத்தின் முக்கிய பிரிவாகும். இவ்வாழிடத்தில் நிலவாழிடத்தின் பெரும்பாலான வாழிடங்கள் அமைந்துள்ளன.

இவ்வாழிடத்தில் நிலவும் சிக்கலான சுற்றுசூழலுக்கு ஏற்ப தகவமைப்புகளைக் கொண்டு பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன.

மலை வாழிடத்தில் நிலப்பரப்பு சிதறிக் காணப்படுகிறது. ஆனால் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் இங்கு காணப்படுகின்றன.

மலையின் உயரமான பகுதிகளில் மரங்களில்லாத தூந்திரா பகுதியாக உள்ளது. மலையின் சரிவுகளில் மலைக்காடுகள் காணப்படுகின்றன.

தாழ்ந்த மலைநிலங்கள் வெப்பமண்டல காடுகள், மிதவெப்பமண்டல காடுகள், புல்வெளிகள், பாலைவனம் என பல்வேறு வகையான நிலவாழிடத்தைக் கொண்டுள்ளது.

மலை வாழிடம் உருவாக்கம்

புவியோட்டின் மேற்பரப்பான டெட்டானிக் தகடுகள் ஒன்றுடன் ஒன்று மோதி பாறைகள் மேலெழும்பி மலைகள் உருவாகின்றன.

பூமிக்கு அடியில் உள்ள லாவாவானது எரிமலையின் மூலம் வெளிப்பட்டு நாளடைவில் குளிர்ந்து இறுகி மலைகளாக மாறுகின்றன.

மலைகளில் நிலவும் காலநிலை

மலைகளின் காலநிலையானது அவை அமைந்துள்ள இடம், அவற்றின் உயரம் மற்றும் காற்றின் திசை ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

மலையின் உயரம் அதிகரிக்கும்போது வெப்பநிலை குறைந்து கொண்டே செல்லும். ஒவ்வொரு 100 மீட்டர் உயரத்திற்கும் 0.5டிகிரி முதல் 0.6டிகிரி வரை வெப்பநிலை குறைகிறது.

காற்றுக்கு எதிராக உள்ள மலைசரிவானது அதிக மழைப்பொழிவையும், காற்றுக்கு மறைவாக உள்ள மலைசரிவானது குறைந்த மழைப்பொழிவையும் பெறுகின்றன. இதனால் மலையின் இருபுறச் சரிவுகளிலும் காலநிலை வேறுபடுகிறது.

பாலைவனங்களில் அமைந்துள்ள மலைகள் குறைவான மழைப்பொழிவினைப் பெறுகின்றன.

நிலநடுக்கோட்டுப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் காலநிலை ஒவ்வொரு இரவும் குளிர்காலத்தைப் போலவும், ஒவ்வொரு பகலும் வசந்த காலத்தைப் போலவும் காணப்படுகிறது.

மிதவெப்ப பகுதிகளில் அமைந்திருக்கும் மலைகளில் பருவகால காலநிலை நிலவுகிறது. இங்குள்ள மலைகள் கோடைகாலத்தில் மரங்கள் வளருவதற்கு ஏற்ப காலநிலையும், குளிர்காலத்தில் நாள்முழுவதும் உறைபனியைக் கொண்டுள்ள காலநிலையும் கொண்டுள்ளன.

மிதவெப்ப மண்டலத்தில் அமைந்துள்ள மலைகளில் நிலநடுக்கோட்டை பார்த்து அமைந்திருக்கும் மலைச்சரிவானது தாவரங்கள் வளர்வதற்கு ஏற்ற காலநிலையைக் கொண்டுள்ளன.

வெப்பமண்டலத்தில் அமைந்துள்ள மலைகளில் கிழக்கு நோக்கிய சரிவானது மேற்கு நோக்கிய சரிவினைவிட அதிக உயிரினங்கள் வாழும் சூழ்நிலையைக் கொண்டுள்ளது.

மலைகளில் உள்ள தாவரங்கள்

வடக்கு மிதவெப்பமண்டல நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய இடங்களில் காணப்படும் மலைகளின் சரிவுகளில் ஊசியிலைக் காடுகள் காணப்படுகின்றன. அதற்கு மேலே மலை தூந்திரா பகுதி உள்ளது.

 

மலை ஊசியிலைக்காடுகள்
மலை ஊசியிலைக்காடுகள்

இங்கு ஊசியிலைகாடுகளில் பைன், பிர்ச், ஸ்புரூஸஸ் மற்றும் இலையுதிர் மரவகையான லார்சஸ் ஆகியவை காணப்படுகின்றன.  இம்மரங்களின் அடியில் குருந்தாவரங்கள் காணப்படுகின்றன.

தெற்கு மிதவெப்பமண்டல காடுகளில் பரந்த இலைகளைக் கொண்ட இலையுதிர் காடுகளே காணப்படுகின்றன. இப்பகுதியில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய மலை காடுகளில் யூகலிப்டஸ் மரவகைகள் காணப்படுகின்றன.

 

மலை இலையுதிர்காடுகள்
மலை இலையுதிர்காடுகள்

இப்பகுதியைச் சார்ந்த நியூசிலாந்து, அர்ஜன்டைனா, சிலி நாடுகளில் உள்ள மலைகளில் நோத்தோபோகஸ் மரவகைகள் காணப்படுகின்றன.

நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் பசுமை மாறாக் காடுகள் அமைந்துள்ளன. அதற்கு மேலே புல்வெளிகள், மலை தூந்திரா ஆகியவை காணப்படுகின்றன.

 

மலை புல்வெளிகள்
மலை புல்வெளிகள்

 

மலை வாழிடத்தில் காணப்படும் விலங்குகள்

மான்கள், கரடிகள், ஓநாய்கள், மலைஆடுகள், மலைமுயல்கள், மலைசிங்கங்கள், சிவப்பு பாண்டாக்கள், வெட்டுக்கிளிகள், மலை பறவைகள் ஆகியவை மலை வாழிடத்தில் காணப்படுகின்றன.

 

மலை ஆடுகள்
மலை ஆடுகள்

 

மலை சிங்கங்கள்
மலை சிங்கங்கள்

 

சிவப்பு பாண்டா
சிவப்பு பாண்டா

மலைகள் காப்போம்

மலை வாழிடத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. இதனால் மண்அரிப்பு ஏற்பட்டு உயிரினங்களின் வாழிடம் கேள்விக் குறியாகி உள்ளது.

மலை வாழிடமானது சுற்றுலா தலமாக மாற்றப்படும் போது வாகனங்கள், மனிதனின் கழிவுகள் ஆகியவற்றால் மாசுபாடு உருவாகிறது. இம்மாசுபாடு மலை வாழிடத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கிறது.

மலைகளில் உள்ள கனிமங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் மனிதனால் சுரண்டப்படும் போது அவை பெரும் பாதிப்பினை மலை வாழிடத்தில் ஏற்படுத்துகின்றது.

மலை சரிவுகளில் உள்ள மரங்களை வெட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மண் அரிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம்.

மலைகளில் மரங்கள் வெட்டப்பட்ட இடங்களில் அவ்விடத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை நட்டு மரங்களை வளர்க்க வேண்டும்.

இயற்கையின் நன்கொடையான மலை வாழிடத்தைப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். மலை வளத்தைக் காப்போம். வருங்கால சந்ததியினருக்கு அதனைப் பரிசளிப்போம்.

வ.முனீஸ்வரன்

 

Visited 1 times, 1 visit(s) today