மலையைச் சுமப்பேன்

மங்களுர் என்ற ஊரில் செல்வம் என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மிகவும் ஆணவம் மிக்கவனாகவும், தன்னைவிட புத்திசாலி உலகில் வேறு யாரும் இல்லை என்ற எண்ணம் கொண்டவனாகவும் இருந்தான்.

ஆதலால் அவன் அடுத்தவர்களை அலட்சியமாக கருதி அவமானப்படுத்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அவனது பணபலத்தினையும், முரட்டுத்தனத்தினையும் எண்ணி பயந்து ஒதுங்கி வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு நாள் அந்த ஊருக்கு பக்கிரிசாமி என்ற பயில்வான் ஒருவன் வந்தான். அவன் செல்வத்தைப் பற்றி ஊர் மக்களின் மூலம் அறிந்து கொண்டான்.

தூணை வளைப்பாயா?

செல்வத்திற்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்க பயில்வான் பக்கிரிசாமி எண்ணினான்.

தன் திட்டப்படி செல்வத்தை சந்தித்து தான் பல மல்யுத்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளதையும், தன்னுடைய தேகபலத்தைப் பற்றியும் கூறி தனக்கு ஏதேனும் வெகுமதியை அளிக்கும்படி கூறினான்.

உடனே செல்வம் பயில்வான் பக்ரிசாமியிடம் பக்கத்தில் இருந்த கல்தூணினைக் காட்டி “இத்தூணை உன்னால் வளைக்க முடியுமா?” என்று கேட்டான்.

பயில்வான் பக்ரிசாமியும் “இக்கற்றூணை அசைக்கலாம். உடைக்கலாம். தூள்தூளாக்கலாம். ஆனால் வளைக்க முடியாது” என்று கூறினான்.

அதனைக் கேட்டு செல்வமும் “நீ தேகபலம் உள்ளவன் என்கிறாய். ஆனால் கற்றூணை வளைக்க முடியாது என்கிறாய். அப்படியானால் நீ என்ன பெரிய பயில்வான்?” என்று கேலி பேசினான்.  அவனுடைய ஆட்களும் பயில்வானை கேலி செய்து சிரித்தனர்.

 

மலையைச் சுமப்பேன்

பயில்வான் பக்கிரிசாமி “அது இருக்கட்டும். நான் நினைத்தால் என்னுடைய தலையில் அதோ தெரிகிறதே, அந்த மலையைச் சுமப்பேன்” என்றான்.

செல்வம் “அப்படியா, நிச்சயம் சுமப்பாயா?” என்று கேட்டான்.

“நான் மலையைச் சுமக்க ஒரு நிபந்தனை. நான் கேட்கிற உணவு வகைகளை எல்லாம் நீங்கள் மூன்று மாதத்திற்கு எனக்கு தரவேண்டும். நான் அவற்றை உண்டு என் தேகபலத்தைக் கூட்டி நான் அந்த மலையைச் சுமப்பேன்.” என்று கூறினான்.

“மூன்று மாதம் கழித்து நீ சொன்னபடி மலையைச் சுமக்காவிட்டால்?” என்று செல்வம் கேட்டான்.

“என்னுடைய வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருப்பேன்” என்று பயில்வான் கூறினான்.

அன்று முதல் செல்வம் வீட்டில் பக்ரிசாமிக்கு தடபுடலான சாப்பாடு கிடைத்தது.

செல்வமும் ‘பக்ரிசாமி எங்கே மலையை சுமக்கப்போகிறான். நமக்கு சரியான அடிமை கிடைத்துவிட்டான்’ என்று மனதிற்குள் எண்ணினான்.

மூன்று மாதங்கள் சென்றன. செல்வம் பயில்வான் பக்ரிசாமி நாளை மலையைச் சுமக்கப் போவதாக ஊராருக்கு அறித்து அந்நிகழ்ச்சியைக் காணவருமாறு எல்லோருக்கும் அழைப்பு விடுத்தான்.

மலையை சுமக்க முடியாத பக்ரிசாமியை ஊரார் சாட்சியோடு தன்னுடைய அடிமையாக்கவே செல்வம் இவ்வாறு செய்தான்.

மறுநாள் எல்லோரும் மலையின் அடிவாரத்தில் கூடினர். பயில்வான் பக்ரிசாமி மலையின் அருகில்போய் அமைதியாக நின்றான். எல்லோரும் அடுத்து நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

செல்வம் “ஏன் அமைதியாக நிற்கிறாய் பக்ரிசாமி?. நீ சொன்னபடி மலையை தூக்கு” என்றான்.

அதற்கு பக்ரிசாமி “நான் மலையைச் சுமப்பேன் என்று சொன்னேன். ஆதலால் யாராவது மலையைத் தூக்கி என்னுடைய தலைமீது வையுங்கள். நான் தாராளமாகச் சுமக்கிறேன்.” என்றான்.

செல்வம் செய்வதறியாது திகைத்தான். ஊரார் செல்வத்தைப் பார்த்து கேலியாகச் சிரித்தனர். பயில்வான் பக்கிரிசாமியைப் பராட்டினர்.

செல்வம் மிகுந்த அவமானம் அடைந்தான். அன்றோடு அவனுடைய ஆணவம் அழிந்தது. நல்லவனான மாறிய செல்வம் ஊர் மக்களோடு ஒற்றுமையாகப் பழகினான்.

நம்மைவிடப் புத்திசாலிகள் எவரும் கிடையாது என்ற ஆணவம் ஒருநாள் கட்டாயம் அடக்கப்படும். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை இக்கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வ.முனீஸ்வரன்

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: