மழைக்காடுகள் – உலகின் நுரையீரல்

மழைக்காடுகள் நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். மழைக்காடுகள் அதிக அளவு ஆக்சிஜனை வழங்குவதால்
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படுகின்றன.

இவ்வாழிடம் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. மழைக்காடானது புவியின் நிலப்பரப்பில் ஆறு சதவீதத்தை மட்டுமே கொண்டுள்ளது.

உலகில் உள்ள உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவை மழைக்காடுகளில் காணப்படுகின்றன.

மழைக்காடுகள் பசுமையான, சூடான, ஈரமான, மரங்கள் அடர்ந்த வாழிடமாகும். இவ்வாழிடத்தில் மரங்கள் உயரமாகவும், அடர்ந்த இலைகளுடனும் காணப்படுகின்றன.

இவ்வாழிடத்தில் உயிரினங்கள் இன்றைக்கும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிகளவு மழைப்பொழிவினைப் பெறுவதால் இவை ‘மழை’க்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

மழைக்காடுகளில் மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் மழைத்துளியானது மழைக்காடுகளின் உச்சியில் இருந்து தரையினை அடைய பத்து நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது.

மழைக்காடானது அன்டார்டிக்காவைத் தவிர ஏனைய இடங்களில் காணப்படுகிறது.

 

மழைக்காடுகளின் வகைகள்

மழைக்காடுகளானது வெப்பமண்டல மழைக் காடுகள், மிதவெப்பமண்டல மழைக் காடுகள் என இரு பிரிவுகளைக் கொண்டுள்ளன.

 

வெப்பமண்டல மழைக்காடுகள்

மழைக்காடுகள்
மழைக்காடுகள்

 

வெப்பமண்டல மழைக்காடானது கடகரேகை மற்றும் மகரரேகைக்கு இடைப்பட்டப் பகுதிகளில் அமைந்துள்ளது. அதாவது பூமத்திய ரேகைக்கு மேலும் கீழும் உள்ளது.

இப்பகுதியில் சூரிய வெப்பமானது ஆண்டுமுழுவதும் அதிகளவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். இங்கு காலநிலையானது வெப்பமாகவும், நிலையாகவும் இருக்கும்.

இங்கு சராசரி வெப்பநிலையானது 18 டிகிரி முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இவ்விடங்களில் மழைப்பொழிவு 175 செமீ முதல் 200 செமீ வரை இருக்கும்.

இவ்வகைக்காடுகள் ஆசியா, மத்திய ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென்அமெரிக்கா போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

உலக வெப்பமண்டல மழைக்காடுகளில் 57 சதவீதம் தென் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், 25 சதவீதம் ஆசியாவிலும், 18 சதவீதம் மத்திய ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றன.

அமேசான் உலகின் மிகப்பெரிய மழைக்காடாகும். ஆப்பிரிக்காவின் காங்கோ மழைக்காடானது உலகின் இரண்டாவது பெரிய மழைக்காடாகும்.

ஆசியாவில் இந்தியா, மியன்மார், பிலிபைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, பாப்பு நியூ கினியா, இலங்கை உள்ளிட்ட இடங்களில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

ஆப்பிரிக்காவில் கேமரூனிலிருந்து காங்கோ வரையிலும், மடகாஸ்கர் பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலும் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

தென்அமெரிக்காவில் பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுலா, கொலம்பியா, ஈகுவடார் போன்ற நாடுகளிலும், மத்திய அமெரிக்காவில் போசாவாஸ், தெற்கு யுகடன் தீபகற்பம் உள்ளிட்ட இடங்களிலும் இவ்வகைக் காடுகள் உள்ளன.

 

வெப்பமண்டல மழைக்காடுகளின் அடுக்குகள்

வெப்பமண்டல மழைக்காடானது நான்கு உயிரின அடுக்குகளைக் கொண்டுள்ளது.

அவை வெளிப்புற அடுக்கு, மரக்கவிகை அடுக்கு, மரக்கீழ் அடுக்கு, காட்டுத்தரை ஆகும். அந்தந்த அடுக்குகளில் காணப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு உயிரினங்கள் அவ்விடங்களில் வாழ்கின்றன.

 

வெளிப்புற அடுக்கு

வெளிப்புற அடுக்கு
வெளிப்புற அடுக்கு

 

வெளிப்புற அடுக்கு என்பது மரக்கவிகைக்கு மேலே உள்ள பகுதியைக் குறிக்கும். இவ்வடுக்கில் மிகப்பெரிய மரங்கள் குறைந்த அளவு காணப்படுகின்றன.

இம்மரங்களின் உயரம் 45 முதல் 55மீ வரை இருக்கிறது. சில மரங்கள் 70-80மீ உயரம் வரை வளருவதும் உண்டு. இவ்வடுக்கில் உள்ள மரங்கள் அதிக வெப்பத்தையும், காற்றின் வேகத்தையும் தாங்க வல்லன.

கழுகுகள், வண்ணத்துப்பூச்சிகள், வெளவ்வால்கள், சிலவகைக் குரங்குகள் இவ்வடுக்கில் காணப்படுகின்றன.

 

மரக்கவிகை அடுக்கு

மரக்கவிகை அடுக்கு
மரக்கவிகை அடுக்கு

 

இப்பகுதியில் 30-45மீ உயரம்வரை வளரும் மரங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் மரங்கள் ஒன்றுடன் ஒன்று கொடிகளால் பின்னப்பட்டு தொடர்ச்சியாக சேர்ந்து குடை போன்ற அமைப்பில் இருக்கிறதால் இது மரக்கவிகை என்று அழைக்கப்படுகிறது.

இப்பகுதியில்தான் மழைக்காட்டு உயிரினங்கள் அதிகளவு உள்ளன. உலகின் 50 சதவீத மரங்கள் இவ்வடுக்கில் காணப்படுகின்றன.

இவ்வடுக்கில் தான் ஒட்டியுள்ள மரங்களுக்கு தீங்குவிளைவிக்காத மேலொட்டிகள் காணப்படுகின்றன. இவை மழையிலிருந்து ஒட்டியுள்ள மரத்தின் சிதைப்பொருட்களில் இருந்தும் நீரினையும், கனிமங்களையும் பெற்றுக் கொள்கின்றன.

இங்கு காணப்படும் தாவரங்கள் அழகான நீள்வட்ட கூரிய முனைகளை உடைய இலைகளைக் கெண்டுள்ளன.

இவ்வடுக்கில் ஓக்காப்பி, டார்சியரின், பாசிலிகஸ் பல்லிகள், பலவகையான பாம்புகள், மரத்தவளைகள், தேவாங்குகள், இருவாட்சிகள் உள்ளிட்ட பறவையினங்கள் காணப்படுகின்றன.

டார்சியரின்
டார்சியரின்

 

மரக்கீழ் அடுக்கு

மரகவிகைக்கும், காட்டுத்தரைக்கும் இடைப்பட்ட பகுதி மரக்கீழ் அடுக்கு என்று அழைக்கப்படுகிறது. இவ்வடுக்கில் 5 சதவீத சூரிய ஒளியே கிடைக்கப்படுகிறது.

இங்கு காணப்படும் தாவரங்களில் இலைகள் அகன்று பெரிதாக இருக்கும். மரக்கவிகை அடுக்கிற்கு வளரவுள்ள மரக்கன்றுகள் பலவும் இவ்வடுக்கில் காணப்படும். இவ்வடுக்கை செடி அடுக்கு என்றும் சொல்லலாம்.

இவ்வடுக்கில் பலவிதமான பறவைகள், பாம்புகள், பல்லிவகைகள், சிறுத்தை, சிறுத்தைப்புலி உள்ளிட்டவைகள் இவ்வடுக்கில் காணப்படுகின்றன.

 

சிறுத்தைப்புலி
சிறுத்தைப்புலி

 

காட்டுத்தரை

வெப்பமண்டல காடுகளின் கடைசி அடுக்கு காட்டுத்தரை என்றழைக்கப்படுகிறது. இவ்வடுக்கானது 2 சதவீத சூரிய ஒளியையே பெறுகிறது.

குறைவான சூரிய ஒளியில் வாழும் உயிரினங்கள் மட்டும் இவ்வடுக்கில் காணப்படுகின்றன. இவ்வடுக்கு இறந்து சிதைந்து கொண்டிருக்கும் தாவர மற்றும் விலங்குகளைப் பெற்றிருக்கிறது.

இவ்வடுக்கானது இளஞ்சூடான ஈரப்பதத்துடன் உள்ளதால் இறந்த உயிரினங்கள் விரைந்து சிதைந்து விடுகின்றன. குறைந்த சூரிய ஒளி மற்றும் இவ்வடுக்கில் காணப்படும் பூஞ்சைகளின் காரணமாக இங்கு தாவர வளர்ச்சி மிகக்குறைந்த அளவே உள்ளது.

இங்குள்ள மண்ணானது தரம் குறைந்ததாக உள்ளது. இரும்பு மற்றும் அலுமினிய ஆக்ஸைடுகளினால் மண் சிவப்பாகக் காணப்படுகிறது.

இங்குள்ள மரங்களின் வேர்கள் நிலத்தின் மேற்புறத்திலேயே காணப்படுகிறது. ஏனெனில் இங்கு மண்ணின் மேலடுக்கில்தான் சத்துகள் நிரம்பிக் காணப்படுகிறது.

 

காளான்
காளான்

 

மிதவெப்பமண்டல மழைக்காடுகள்

மிதவெப்பமண்டல மழைக்காடுகள்
மிதவெப்பமண்டல மழைக்காடுகள்

 

மிதவெப்பமண்டல மழைக்காடுகள் மிதவெப்பமண்டலத்தில் அதிக மழைப்பொழிவினைப் பெறும் பகுதிகளில் மட்டும் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கடற்கரையினை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளன.

இங்கு ஆண்டு சராசரி மழைப்பொழிவு 140 செமீ ஆகும். இங்கு வெப்பநிலையானது 4 டிகிரி முதல் 12 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.

இவை உலகின் சில இடங்களில் மட்டும் உள்ளன. வடஅமெரிக்காவில் வடமேற்கு பசிபிக் பகுதிகள், பிரிட்டானிய கொலம்பிக் கரையோரங்கள் ஆகியவற்றிலும் ஐரோப்பாவில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, துருக்கி, ஜார்ஜியா, ஸ்பெயின் ஆகியவற்றிலும் இவை காணப்படுகின்றன.

கிழக்காசியாவின் தாய்வான், தென்சீனா, ஜப்பான், கொரியா போன்ற இடங்களிலும், தென்அமெரிக்காவின் தெற்கு சிலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற இடங்களிலும் இவ்வகைக் காடுகள் உள்ளன.

இவ்வகைக் காடுகளில் கடற்கரை செம்மரம், பயர் வீட், சங்க் கேப்பேஜ் உள்ளிட்ட தாவரங்கள், தாவர தொற்றுண்ணிகளான மோசஸ், லைக்கன்கள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன.

மலைச்சிங்கம், எல்க் மான்கள், மரத்தவளைகள், வேரிட் திரஸ் உள்ளிட்ட பறவையினங்கள் இங்கு காணப்படுகின்றன.

 

வேரிட் திரஸ்
வேரிட் திரஸ்

 

மழைக்காடுகளின் முக்கியத்துவம்

மழைக்காடானது உலகின் உணவுக்கிட்டங்கியாக உள்ளது. காப்பி, வாழை, கொட்டைகள், அன்னாசிபழங்கள், கோகோ, பேப்பர், மூங்கில், இரப்பர், தேங்காய், வென்னிலா, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவைகள் இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவையே.

உலகின் நுரையீரல் என்று இவை அழைக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஆக்ஸிஜனின் 20 சதவீதத்தினை இக்காடுகள் வழங்குகின்றன.

உலகில் தற்போது உள்ள மருந்துக‌ளில் 25 சதவீதம் இக்காடுகளிலிருந்து பெறப்பட்டவை ஆகும்.

இக்காடுகள் உலகில் உள்ள நீர்சுழற்சியினை சமநிலைப்படுத்துகின்றன.

பூமியில் உள்ள நீரினை உறிஞ்சி காற்று மண்டலத்தில் வெளியிட்டு மழையைப் பெய்யச் செய்கிறது.

மழைக்காடுகளில் விழும் இலைகள் பரந்து விரிந்து பெரிய பஞ்சினைப் போன்று செயல்படுகின்றன. மழைநீரினை இவைகள் உறிஞ்சி ஆறுகளாகவும், ஓடைகளாகவும் தொடர்ந்து வெளியிடுகின்றன.

மழைக்காடுகளில் உள்ள மரங்கள் மண்அரிப்பு, வெள்ளப்பெருக்கு, வண்டல் படிவு ஆகியவற்றைத் தடுக்கின்றன.

 

 

மழைக்காடுகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்

மனிதன் தனது தேவைகளான சாலை வசதி, பேப்பர் தயாரிப்பு, வேளாண்மை, எரிபொருள், கட்டிடங்களுக்கான மரங்கள் உள்ளிட்டவைகளுக்காக இவ்வகைக் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறான். இதனையே நாம் காடழிப்பு என்கிறோம்.

காலநிலை மாறுபாடு இவ்வகைக்காடுகளில் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது. காலநிலை மாறுபாடு அமேசான் மற்றும் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியநாடுகளின் காடுகளில் வறட்சியை உண்டாக்கியுள்ளது.

காட்டில் வறட்சி ஏற்படும்போது காட்டுத்தீ உண்டாகி காற்று மாசுப்பாட்டை அதிகளவு ஏற்படுத்துகிறது.

மழைக்காடுகளில் அவ்விடத்தினைச் சாராத தாவர மற்றும் விலங்குகளை அறிமுகப்படுத்தும்போது அவ்வுயிரினங்களின் செயல்பாடுகளால் காடானது அழிக்கப்படுகிறது.

 

 

மழைக்காடுகளின் பாதுகாப்பிற்கு நாம் செய்ய வேண்டியவை

நாம் உண்டாக்கும் கழிவுப்பொருட்களின் அளவு மற்றும் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

நாம் பயன்படுத்தும் பொருட்களை முடிந்தளவு மறுபடியும் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

முடிந்தளவு மறுசுழற்சி செய்து பயன்படுத்தக் கூடிய பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

பிளாஸ்டிக், கார்டுபோட்டு, பேப்பர், கண்ணாடி, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை மறுபடியும் மற்றும் மறுசுழற்சி செய்தும் பயன்படுத்த வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்த வேண்டும்.

மக்களிடம் மழைக்காடுகளின் முக்கியத்துவம், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்தி மழைக்காடுகளை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்த வேண்டும்.

மழைக்காடுகள், அவற்றின் ஆச்சர்யங்கள், அழகுகள் ஆகியவற்றை நாம் ரசித்தது போல் நம் சந்ததியினரும் ரசிக்க நடவடிக்கை எடுப்போம்.

– வ.முனீஸ்வரன்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.