அந்தி நேரம்
இருள் சூழ்ந்த மேகம்
இன்னிசை யெழுப்பும்
மெல்லிய மழைச்சாரல்
பக்கமேளமாக இடிசத்தம்
அவ்வப்போது பளிச்சிடும்
மின்னல் கீற்று
மழைவிட்டதும்
வானிற்கு வர்ணம் பூச
காத்திருக்கும் வானவில்
சாரலின் மெட்டுக்கேற்ப
காற்றோடு சேர்ந்து
ஆட்டம்போடும் இலைகள்
அடிக்கடி தலைமுடியை வருடி
என்னிடத்தில் தன் காதலை
கூறி செல்லும் தென்றல்
அவ்வபோது
கஸ்தூரி மணம்போல்
வரும் மண்வாசம்
சாலையில் அங்கும்
இங்குமாக நடமாடும்
குடைகள்
வழக்கம்போல பரபரப்பாக
இயங்கி கொண்டிக்கும்
தெருமுனை டீக்கடைக்காரர்
தன் கரகரப்பான குரலால்
மாலைநேர செய்திகள்
வாசிக்கும் பழைய ரேடியோ
ஒழுகும் குடிசைக்குள்
தெருவை வேடிக்கை பார்த்தபடி
பூ கட்டிக் கொண்டிருக்கும் பூக்காரம்மா
நனைந்து விடுமோ என்ற பயத்தில்
ஆடையை சற்று உயர்த்தி பிடித்தபடி
நடந்து செல்லும் தாத்தா
வீட்டின் ஜன்னல் வழியாக
சுடச்சுட தேநீர் அருந்தி கொண்டே
இவற்றையெல்லாம் பார்த்து ரசித்தபடி நான்
முகமது இனியாஸ்
அறந்தாங்கி
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!