மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை

மழைப்பெண்

நான், கவிஞர் பழநிபாரதி அவர்கள் இல்லத்திற்கு செல்லும் பொழுதெல்லாம், அவரிடம் இருக்கும் எதோவொரு கவிதை நூலைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்று சொல்வது வழக்கம்.

நிறைய நூல்கள் அவ்வாறு அவர் தர, நான் படித்துப் பேசியதுண்டு. பிறரின் ரசனையை ரசிப்பதில் அவரை மிஞ்ச ஆளில்லை. அது யாராக இருந்தாலும் சரி.

அவர் சந்திக்கும் மனிதர்களின் ரசனைகளைத் தூண்டிவிட்டு, அதில் தன்னை மீறிச் சிலாகித்துச் சிரித்து மகிழ்ந்து ரசிப்பார்.

அவருக்குக் கவிதைகள் இங்கு தான் பிறக்கின்றன.

மனிதர்களின் ஒளிவு மறைவில்லாத சிந்தனையும், ரசிப்பும், மகிழ்ச்சியும் யாரும் காணாத கற்பனைக் காட்சியை அவருக்குத் தோற்றிவிக்கும் போலிருக்கிறது.

அவர், அவரின் குழந்தைகளிடமும் இப்படித் தான் ரசித்து, எங்களிடம் அதை வியந்து கூறுவார்.

 

பழநிபாரதி
பழநிபாரதி

 

”அது சரி,

அவர் ரசனை இருக்கட்டும்.

இங்கு அதெல்லாம் எதற்குக் கூறுகிறீர்கள்?” என்று தானே கேட்கிறீர்கள்?

 

”வரலாற்றியல் முறை ஆய்வு” என்று ஒன்றுண்டு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும், அவனது படைப்பிற்கும் ஒரு தொடர்புண்டு என்பதே அது.

அவ்வகையில், காதலியை ரசிக்கும் காதலனின் மனப்போக்கைக் கவிஞர் எழுதுவதற்கு, அவரின் வாழ்க்கை முறையைத் தெரிந்து கொள்வது சிறப்பு தானே! எனவே தான் அவர் வாழ்வின் ஒவ்வொரு கட்டங்களிலும் ரசிகனாக வாழ்வதைக் கூறினேன்.

அவ்வாறு, அவர் மூலமாக நான் நிறையக் கவிதை நூல்கள் படித்திருக்கின்றேன்.

ஒருநாள் அவருடைய ”மழைப்பெண்” என்ற கவிதைத் தொகுப்பைக் கொடுத்துப் படித்துக் கருத்துக் கூறுங்கள் என்றார்.

 

 

அப்பொழுது எழுதிய கட்டுரை தான் இது. அதைப் படித்த அவர், சிறிய புன்முறுவலோடு ரசித்து வாங்கி வைத்துக் கொண்டார்.

இதற்குப் பிறகு, அவர் எழுதிக் கொண்டிருக்கும் திரைப்படப் பாடல்களை எல்லாம் கொண்டு வந்து காண்பித்து என் ரசனையைக் கேட்டு ரசிப்பார்.

இந்தக் கட்டுரைக்குப் பின், ஒருபடி மேலே அவரோடு நெருங்கினேன் என்பதே உண்மையாகும்.

”மழைப்பெண்” நூல் குறித்த என் பார்வையை, இனி காண்போமா?

 

“ஒரு அனுபவத்திற்கு உருவம் தரக் கவிஞன் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவே கவிதை.

வார்த்தைகள் நடனம் புரியும் போது கவிதைகள் பிறக்கின்றன. மிகக்குறைந்த வார்த்தைகளில் மிக அதிகம் சொல்வதற்கான முயற்சிதான் அனுபவக் கவிதையாகிறது.

அனுபவம் உள்ளத்தில் எழுப்பும் சலனங்களை உணர்ச்சியோடு அழகுற வார்த்தைகளில் அமைப்பதே சிறந்த கவிதை” என்பதற்கிணங்க அதைச் செம்மையாகச் செதுக்கியிருக்கின்றார் கவிஞர் பழநிபாரதி.

ஒருதலைப்பட்சமான உணர்வுகளைச் சங்ககால இலக்கியங்கள் ‘கைக்கிளை’ எனும் திணைக்குள் அடக்கின.

காதலர் இருவரின் பழக்கத்திற்குப் பின் தனித்தனியான உணர்வாக்கங்களைப் ‘பிரிதல்’ எனும் துறைகளுக்குள் அடக்கிப் பேசின.

‘மழைப்பெண்’ கவிதைத் தொகுப்பு முழுமையும் இந்த இரண்டு பகுதிகளுக்குள்ளும் அடங்கிச் சங்கத்தமிழின் புதுமை வடிவமாகி அழகுற நிற்கின்றது.

தலைவனோ தலைவியோ ‘இடந்தலைப்பாடு’ எனும் நிகழ்வுக்குப் பிறகு மிக்கக் காதலுணர்வோடு இருக்கும் பொழுது, காதலின் தன்மையால் அவர்கள் பார்ப்பவையெல்லாம் பிரியமானவரின் தோற்றமாகவே இருக்குமாம்.

இதைத் தொல்காப்பியர் “நோக்குவயெல்லாம் அவையே போறல்” என்பர். இதை அழகாகப் புதுக்கவிதை வடிவில் கவிஞர்,

“எல்லோருமாக

இருந்தேன் நான்

வழியனுப்ப வரமுடியாத

உன் பயணத்தில்”

என்கின்றார்.

 

புதுக்கவிதையின் தரத்தை உலகக் கவிதைகளின் தரத்திற்கு உயர்த்தியதில் படிமக் கவிதைகளுக்கு (IMAGE POETIC) ஒரிடம் உண்டு.

தற்பொழுது இக்கவிதைகள் இருண்மை நோக்கில்தான் பலராலும் எழுதப்படுகின்றன. ஆனால் கவிஞரின் படிமக் கவிதைகள் புரிதலை வெளிப்பாடாகக் கொண்டவையாகும்.

இந்நூலில் உள்ள கவிதைகள் இயல்புக்கு மீறாத கற்பனையையும் புற உலகத்தால் பெற்ற அறிவினையும் இணைத்து அமைக்கும் கலைப்படிமக் கவிதைகளாக (Artistic image poem) உள்ளத்தைக் காதலுணர்வில் உருக்குகின்றன.

“படைப்பாளின் உள்ளக்கிடங்கில் தோன்றிய அதேவுணர்வு வாசகனின் உள்ளத்திலும் தோன்றினால் அது கவிதையின் வெற்றியாகிறது” என்பர்.

படைப்பு இடமாற்றமாவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. காட்சிப் பின்புலப் படைப்பாக்கங்கள் எந்தத் தளத்தில் பதிவாக்கம் செய்யப் பெற்றிருந்தாலும், அதைப் பதிவு செய்ய கவிஞன் தேடும் சொற்கள் மந்திரத்தனமான செயல்களைச் செய்யக்கூடாது. அப்போதுதான் கவிதைகள் இரசனையுடையதாகக் கருதப் பெறும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கவிஞன் ‘ஹீயம்’( Hiyam Qablan) இரவுப் பொழுதில் நிலாவைப் பார்க்கின்றான். அது அவனுக்குள் பல காட்சிப் பின்புலத்தைத் தருகின்றது.

அழகான அக்கவிதையில் எந்தச் சொற்களும் படிமக் கருத்தைத் தவிர்த்து மாயாஜாலம் செய்யவில்லை. அக்கவிதையானது,

“மௌனமான கப்பல்தளத்திற்கு மேலே

கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா

தூரத்தில் காணும் அது

விளையாடிய குழந்தை

மறந்து விட்ட பலூன் தான்”

என்பதாகும்.

 

இதேபோல் கவிஞர் பழநிபாரதி கையாண்டிருக்கும் படிமக் காட்சிகள் அழகியல் நோக்குடைய பிரதிபலிப்புக் கொள்கையை (Theory of Reflection) அடிப்படையாகக் கொண்டவையாகும்.

முத்தத்தைக் கொடூரமான பறவையாகப் படிமமாக்கி எழுதிய கவிதை இங்கு எண்ணத்தக்கதாகும்.

“சிறகு முளைத்த முத்தங்கள்

என் கைகள் கீறிப்பறந்து

வட்டமிடுகின்றன.

உன் தலைக்கு மேலே

இரை போட்டுப் பழக்கு.

அவை

உன்னைக் கொத்தித் தின்பதற்குள்”.

கொடூரப் பறவையின் எதிர்பார்ப்பும், முத்தத்தின் எதிர்பார்ப்பும் படிமக் காட்சியில் கருத்து ஒருமைப்பாடுடைய பொருளாகின்றது.

இதே போல் முத்தத்தைக் குளியலறை, மேகம், நதி, புயல், இரவுப்பொழுது, தேநீர் கலவை, பந்து விளையாட்டு போன்றவற்றுடன் உவமித்துப் படிமமாக்கியுள்ளார்.

“நீண்ட காலமாய்

எனக்குள் புதைந்து

வைரமாகி விட்டது

உனக்குக்

கொடுக்க முடியாமல் போன

அதே முத்தம்”

நல்ல உவமைகள் ஒத்த தன்மையுடைய பொருள்களோடு இணைந்து அழகியல் தன்மைக்கு வளம் சேர்க்கின்றன.

 

படைப்பாக்கவாதி, படைப்புகள், வாசகன் என்ற முப்பரிமாண‌ வலைக்குள் கருத்தின்பால் ஒரு பிரளயம் உட்புகுந்து கவிமன வானம் புடைத்திருக்கின்றது.

புதுப்புதுப் பொருள்கள், காட்சிகள், உருவகங்கள், வண்ணங்கள், வடிவுகள், நினைவுகள் போன்றவை கவிஞனைத் தன் பங்குக்கு இழுத்து மயக்கப் பார்த்திருந்தாலும், கவிஞர் மிகச்சரியான ஒழுங்கு முறையில் ஒவ்வொரு கவிதையிலும் காதலைப் படிமப்படுத்தியுள்ளார்.

காதலியைப் பார்த்த அந்த நொடிப் பொழுதை,

“ஐம்பூதங்களுக்கு

உனக்காக என்னை

பலி கொடுத்து

உறைந்த கணம் அது”

என்கின்றார்.

மேலும் இக்கவிதையில் அந்தப் பொழுது ‘வானத்திலிருந்து எரிந்து விழும் எரிநட்சத்திரம் போலவும் மரத்தில் விழுந்த மின்னல் போலும். பாறைகளைச் சிறுகல்லாக்கும் நதிநீர் போலவும் உள்ளனவாம்.

ஒவ்வொரு படிமப் பொருளும் கூறவந்த பொருளோடு வாசகனுக்கு அப்படியே போய் சேருகிறது.

காதலன் தன் காதலியைக் காணாமல் ஐந்து நாட்கள் இறந்தே போனான் எண்ணத்தால். அதைப் பிறகு கூடும் போது மறந்திருக்கலாம்.

ஆனால் காதலன் மறக்க மாட்டானாம் ஏன்? காதலி அந்த ஐந்து நாட்கள் பட்ட துன்பத்தைக் கூறு எனக் கேட்க,

“அடக்கம் செய்யாமல்

அடுக்கி வைத்திருக்கின்றேன்

நீ நடத்தும்

இறுதி மரியாதைக்காக”

என்கின்றான்.

 

தீவிரமாக யோசித்தால் மட்டுமே புரியக் கூடிய ஆழ்ந்த கவிதைப் பாணியைத் தளமாகக் கொண்ட குறியீட்டுக் கவிதைகள் கவிஞரால் மிக எளிமையாக எழுதப் பெற்றிருக்கின்றன அவ்வகையில்,

“தாக நிலமாய்

உதடு வெடிக்க

நிழல் மேகமாய்

உன் முத்தம்”

“உன் அழகின்

மணி யோசையில்

படபடத்தோடுகின்றன

என் மாடப்புறாக்கள்”

எனும் கவிதைகள் அமைந்துள்ளன.

மேலும் என்னைச் சமைத்து, பரிமாறி, சுவைத்து, செரித்துவிடு என உணவாக மாறும் காதலனின் பக்குவம் எண்ணி எண்ணி வியக்கத் தக்கதாகும்.

 

மற்றொரிடத்தில் காதலியை மரமாகவும், அதில் பயனடையும் பறவையாகத் தானும் இருப்பதாக உவமித்துள்ளார்.

காமத்தின் எல்லையில் இருவரின் நிலையையும் உருவகப்படுத்தி, ஊஞ்சலின் வெளியாகவும் சுழன்று படுத்துறங்கும் பம்பரமாகவும் காட்டியுள்ளார்.

அழகியலும், காதலுணர்வும் ஒன்றையொன்று விட்டுவிடாமல் கைகோர்த்துக் கொண்டு செல்லும் பாங்கிற்கு,

“முத்தத்துக்குப் பின் முத்தம்

அலைக்குப் பின் அலை

கரை ஒதுங்கியது

உடல்

உடல் நுழைந்தது கடல்”

எனும் கவிதை சான்றாக அமைந்துள்ளது.

‘மழை’ எனும் சொல் ‘முத்தம்’ எனும் சொல்லின் மாற்றுப் பெயரோ என எண்ணுமளவு முத்தம் எதிர்நோக்கும் காதல் தாகம் இந்நூல் முழுமைக்கும் விரவிக் கிடக்கின்றது. முத்தத்தைப் பந்திற்குப் படிமமாக்கி வெளிப்படுத்தியுள்ளார்.

“வெற்றிப்புள்ளியை நோக்கி

நகர்த்து அல்லது நகர்த்தவிடு

நம் உதடுகளுக்கிடையில்

உதைபட்டுத் தவிக்கிறது

ஒரு முத்தப்பந்து”

என்பது அக்கவிதையாகும்.

 

ஒரு பெண்ணின் உடலைக் கறுப்புச் சொற்கள், சிவப்புச் சொற்கள், உருபு மயக்கம், தனிச்சொல், நடுவிரி என ஒவ்வொரு உறுப்புகளையும் ‘கேசாதிபாத வர்ணனை’யாக உருவகப்படுத்தி எழுதியது.

‘ஆற்றுப்படை’ நூல்களில் பாடினியை யாழோடு உருவகப்படுத்தி எழுதிய அழகினை நினைவுப் படுத்துகிறது.

லா.ச.ரா. தன் நாவல்களில் இயற்கைப் பொருள்களின் மெல்லியதான உணர்வுகளைக் கூடப் பதிவு செய்திருப்பார். அதே போல் கவிஞரும் ஒரு கவிதையில்,

“கண்ணாடி விழுங்கிய

உன் பிம்பங்களையாவது

கொத்தித் தேடி

அள்ளி வந்து

ஆறுதல் செய்ய

என்னிடமிருந்து தான்

உன் வீட்டுக்கு வருகிறது

சிட்டுக் குருவி”

என்று பதிவு செய்திருக்கின்றார்.

இயற்கைக்கு மாறான அனுபவத் தூண்டல் கொண்ட கவிதையாகும்.

 

“படிமக் கவிஞன் ஒரு பொருளை மேம்போக்காகப் பார்ப்பதில்லை. அதைப் புகழ்வதோ, இகழ்வதோ இல்லை. வாசகன் என்ன உணர வேண்டும் என்று அறிவுறுத்தவும் இல்லை. அவன் உணர்ந்ததை நாம் உணரச் செய்வது தான் படிமக் கவிதையின் உயிர்நிலை” எனும் டாக்டர் மு.சுதந்திரமுத்துவின் கருத்திற்கேற்ப ‘மழைப்பெண்’ கவிதைகள் அனைத்தும் அமைந்துள்ளன.

ஒரு சில கவிதைகள் மட்டும் இருண்மையை (abscurits) நோக்கியதாகப் பயணித்தாலும், புதுக்கவிதை வளர்ச்சிக்கு ‘மழைப்பெண் ‘ ஒரு பிரகாசமான விடியலாய் வந்திருக்கிறது.

உலகக் கவிதைத் தரத்திற்கு இத்தமிழ்க் கவிதை போட்டி போட்டு இருக்கிறது.

பாரதிசந்திரன்

பாரதிசந்திரன்

முனைவர் செ சு நா சந்திரசேகரன்
9283275782
chandrakavin@gmail.com

 

 

Visited 1 times, 1 visit(s) today

Comments

“மழைப்பெண் – ஒரு வரலாற்றியல் பார்வை” அதற்கு 2 மறுமொழிகள்

  1. த.பரிமளா

    கவிதை வாசிப்பில் இதுவரை ஈடுபாடு இருந்தது இல்லை.தங்களின் கட்டுரையை படித்த பிறகு கவிதை
    வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

  2. DHANANCHEZHIYAN

    கவிதைகளின் பண்புகளை பகுத்து அளிப்பது போல் உள்ளது கட்டுரை. முனைவர் சந்திரசேகர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.