மழைக்காலங்களில்
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை!
குடையோ மழையங்கியோ
ஒதுங்கி நிற்றலோ
ஏதும் பலனின்றி
நனைதலும்
அதன் பொருட்டான தாமதமும்
வாடிக்கையாகும்!
மதிய வேளையில்
சற்றே கண்ணயரும்
அம்மழை
மீண்டும் தொடரும்
சரியாக
அலுவலகம் விட்டு
வீடு சேரும் வரை!
ஒரு மழைக்காலத்தில்
நான் ஓய்வு பெறலாம்
ஆயினும் மழை
காலங்காலமாய்
தொடர்ந்து கொண்டிருக்கும்
அலுவலகம் செல்லும்
பலரை நனைத்து!
ஓய்வோ மூப்போ
காலச்சக்கரத்தின் சுழற்சியில்
மழையை நான்
தவற விடலாம்
நனையாமல் போகலாம்
ஆனால்
அதன் விளைவாய்
மனம் புழுங்கலாம்
ஒரு பிரிதலுக்குண்டான
ஏராள வெறுமை சுமந்து!
எஸ்.மகேஷ்
சிட்லப்பாக்கம்
சென்னை – 600064
கைபேசி: 9841708284
மின்னஞ்சல்: mahicen@yahoo.com
எஸ்.மகேஷ் அவர்களின் படைப்புகள்
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!