மழை

உயிர் வாழ்வதற்குத் தேவையான நீரை அளிப்பது மழை. அதனால் தான் சிலப்பதிகாரத்தில் மாமழை போற்றுவாம் என்று மழையை வணங்குகிறார் இள‌ங்கோ. இங்கு மழை பற்றிய‌ அறிவியலைத் தெரிந்து கொள்வோம்.

நம்மை சூழ்ந்திருக்கும் காற்றில் சிறிதளவு ஈரப்பதம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். காற்று மிக குளிர்ந்து இனி ஈரப்பதத்தை தாங்கிச் செல்ல இயலாத அளவிற்கு ஈரப்பதம் பெருகும்போது, சிறு துளிகளாக மாறி மழையாகப் பெய்கிறது.

சூரியக் கதிர்கள் பூமியின் பல பாகங்களிலும் நீர்நிலைகளிலும், கடற்பரப்பிலும் விழும்போது சூழலுக்கேற்ப தட்ப வெப்பநிலை மாறுபாடடைந்து காற்றானது உருவாகி ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு வீசுகிறது.

காற்றானது வெப்பத்தால் லேசாகி மேலே செல்கிறது. அப்படி மேலே செல்லும்போது அதன் அழுத்தம் மற்றும் திண்மம் குறையும்போது குளிர்ச்சியாகி காற்றணுக்களின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது. ஈரப்பதம் ஏந்தி காற்று நகர்தலே மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

 

மேகங்களின் வகைகள்

மேகங்களின் வடிவம் மற்றும் காணப்படும் உயரத்தின் அடிப்படையில் கீற்று மேகங்கள், படை மேகங்கள், திரள் மேகங்கள் மற்றும் கார்படை மேகங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன.

 

கீற்று மேகங்கள்

இவை கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றன. எனவே இவை உயர் மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை இயற்கையாகவே வறண்டும் பனிப்படிகங்களைக் கொண்டும் உள்ளதால் ஒரு போதும் மழையைக் கொடுப்பதில்லை.

இம்மேகங்கள் நீண்டவைகளாகவும், நார் போன்ற அமைப்பினைக் கொண்டதாகவும், வளைந்தும் முனைகளில் சுருள் போன்ற அமைப்பு இல்லாததாகவும் காணப்படும்.

 

படை மேகங்கள்

கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் உயரத்தில் உருவாகின்றன. இவை தாழ் மேகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரே மாதிரியாகவும், அடர் சாம்பல் நிற விரிப்பு போன்ற தோற்றத்தையும் கொண்டிருக்கும் இவை சிறு தூரலை அல்லது பனிப் பொழிவினைக் கொடுக்க வல்லது.

 

திரள்மேகங்கள்

இவை நடுத்தர மேகங்கள். இதன் தோற்றமானது மிருதுவான வெடித்த பருத்தியைப் போன்று காணப்படும். இவை தனியாகவோ அல்லது அணியாகவோ அல்லது சிதறியோ காணப்படும். இவை மழைப்பொழிவு, மின்னல், இடி ஆகியவற்றை கொடுக்கக் கூடியவை. கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை காணப்படும்.

 

கார்படை மேகங்கள்

இவை செங்குத்தானவை. கருமை அல்லது சாம்பல் நிறத்தில் அடர்த்தியாகக் காணப்படும். கனத்த மழைப் பொழிவினைக் கொடுப்பதால் இவை புயல் அல்லது மழை மேகங்கள் என அழைக்கப்படுகின்றன.
மேகக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து அங்கும் இங்கும் நகரும்போது ஈரப்பதமானது அங்கு மிதக்கும் புழுதிகளின் மேல் படிந்து உருவில் சிறிது வளர்ந்து புவி ஈர்ப்புச் சக்தியால் கீழே விழுகிறது. அதுவே மழை என்று அழைக்கப்படுகிறது.

 

தூரல் மற்றும் மழை

மழை பெய்யும்போது பூமியை வந்தடையும் மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீக்கு குறைவாக இருந்தால் அது தூரல் என்றும் மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீக்கு மேல் இருந்தால் அது மழை என்றும் அழைக்கப்படுகிறது.

 

இலேசான மழை, கனத்த மழை

ஓரிடத்தில் பெய்யும் மழையை இலேசான மழை மற்றும் கனமான மழை என்று வேறுபடுத்திக் கூறலாம்.

ஓரிடத்தில் ஒரு மணி நேரத்தில் பெய்த மழை 2.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது இலேசான மழை எனவும் 2.5 மி.மீட்டரிலிருந்து 7.5 மி.மீட்டர் வரை இருந்தால் அதைச் சுமாரான மழை எனவும். 7.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் கனத்த மழை எனவும் குறிப்பிடப்படுகிறது.

சில சமயங்களில் அதிக குளிர்ச்சியாகி நீர்த்துளிகள் விண்ணிலேயே உறைந்து பனிக்கட்டியாகவே பூமியில் விழும். அது பனிக்கட்டி மழை அல்லது ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.

 

 

மழையின் வகைள்

மழையானது வெப்பச் சலன மழை, மலை மழை, புயல் அல்லது சூறாவளி மழை என வகைப்படுத்தப்படுகிறது.

 

வெப்பச்சலன மழை

சூரியக் கதிர்கள் பூமத்திய ரேகைப் பகுதியில் செங்குத்தாக விழுவதால் அது வெப்பமான பகுதியாக உள்ளது. இங்குள்ள காற்று விரிவடைந்து செங்குத்தாக மேலெழும்புகிறது.

மேலே செல்லச் செல்ல வெப்பநிலை படிப்படியாகக் குறைந்து குளிர்ச்சியடைந்த மேகங்கள் உருவாகின்றன. இவை பனி விழும் நிலையை அடையும் போது மழைப்பொழிவு உருவாகிறது. இதுவே வெப்ப சலன மழை என்றழைக்கப்படுகிறது.

இது இடி மற்றும் மின்னலினைக் கொண்டிருக்கும். வழக்கமாக இவ்வகை மழையானது மாலை நேரங்களில் நான்கு மணி அளவில் பெய்வதால் இது நான்கு மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுகிறது.

 

மலை மழை

காற்றானது கடற்பகுதிகளிலிருந்து வீசும்போது ஈரப்பதத்தினைக் கொண்டுள்ளது. இவ்வகைக் காற்றுகள் உயரமான மலைத் தொடர்களில் மோதும் போது மேல்நோக்கி உந்தப்படுகிறது. அவை குளிர்ந்த காற்று முகப் பகுதியில் அதிக மழையை உருவாக்குகிறது.

எதிர் முகக் காற்று திசையில் ஈரப்பதம் குறைவான காற்றாக கீழிறங்கி குறைந்த அளவு மழையையோ அல்லது மழைப் பொழிவினையோ கொடுப்பதில்லை.

கேரளா காற்று முகம் பகுதியிலும் தமிழ்நாடு எதிர்முக காற்று திசையிலும் அமைந்துள்ளாதால் கேரளா அதிக மழைப் பொழிவினையும் தமிழ்நாடு குறைந்த மழைப்பொழிவினையும் தென் மேற்கு பருவக் காற்று காலத்தில் பெறுகின்றன.

 

சூறாவளி அல்லது புயல் மழை

காற்றானது அழுத்தம் அதிகமான இடத்திலிருந்து அழுத்தம் குறைவான இடத்திற்கு நகர்ந்து கொண்டே இருக்கும். இதையே காற்று வீசுவதாகக் கூறலாம். அழுத்தத்தில் வேறுபாடு சற்று அதிகமாக இருந்தால் காற்று வேகமாக வீசி குறைந்த அழுத்தம் நிலவும் சூழலுக்கு விரையும். அதே நேரத்தில் வேகமும் அதிகரிக்கும்.

பூமி சுழற்சியின் காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு சுழல் வடிவத்தில் உருவாகின்றது. மேலெழும்பிய காற்றானது புனல் வடிவத்தை அடைகின்றது. மேலெழும்பிய காற்று குளிர்ச்சியடைந்து நீர் சுருங்குதல் ஏற்படுகிறது. இவை கனத்த மழையினை தாழ்வழுத்தப்பகுதிகளில் கொண்டு வருகின்றது.

வடகிழக்கு பருவக் காற்று காலத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரையோரங்களில் அதிக எண்ணிக்கையில் புயல்கள் உருவாகின்றன.

 

செயற்கை மழை

சில சமயங்களில் மேகக் கூட்டங்கள், கறுத்து, மின்னல் இடியோடு காணப்பட்டாலும், போதுமான குளிர்ச்சி ஏற்படாததாலும், மழையாகப் பெய்யும் சூழல் உருவாகாததாலும், மேகங்கள் மழையைப் பொழியாமலேயே கலைந்து நகர்ந்து செல்வதுண்டு.

நீர்வளம் குன்றி எதிர்பார்க்கும் மழை பொழியாமல் வறண்ட சூழ்நிலையில் மேகங்களைச் செயற்கையாக குளிரவைத்து மழைபொழிய வைப்பது செயற்கை மழை என்று அழைக்கப்படுகிறது. மேகக் கூட்டங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற இராசாயனப் பொடியைத் தூவும் போது அவை குளிர வைக்கும் சிறு துகள்களை உண்டாக்கி மழை பொழிய ஏதுவாகிறது என்று கண்டு பிடிக்கப்பட்டது.

மேகங்களுக்கிடையே 10ºC- க்கும் கீழே குளிர்ச்சியை உண்டாக்கினால் ஒழிய மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையை உருவாக்க அதிக பணம் செலவாகும்.

எனினும் அதில் வெற்றி கண்டால் வறட்சியால் படும் அவதி குறையும். ஆகையால் பல அரசுகள் இந்த முயற்சியில் ஈடுபட்டன. தமிழ்நாட்டில் 1987ல் சென்னையில் குடிநீருக்கு பஞ்சமாக இருந்த நிலையில் அரசு செயற்கை மழை பெய்ய முயற்சி செய்தது.

ஆனால் மேகங்கள் நகர்ந்து வேண்டிய இடத்தை விட்டு வேறு இடங்களில் சிறிது பெய்தது. பணச் செலவும் அதிகம். ஆயினும் செயற்கை மழை பெற ஆராய்ச்சிகள் மேலும் ஆங்காங்கே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழையைப் புரிந்து கொள்வோம்; மழை நீரைச் சேமிப்போம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.