புறத்தில்
படையெடுத்துச் சூழ்ந்து கொள்கின்றன
சப்தங்கள்…
காதுகளை கண்களை
அடைத்துக் கொள்ளும் போதும்
துளைத்தெடுத்துப் புகுந்து குடைய
அமைதி இழக்கிறது மனம்…
அகப்புறமிருந்து
ஆர்ப்பரிக்கின்ற சப்தங்களை
புறக்கணிக்க முடியாமல் அதிர்கின்றன
புலன்கள்…
உறக்கத்தின் உள்புகுந்து
சிம்மாசனத்தைப் போட்டமர்ந்து கொண்டு
கர்ஜிக்கின்றனவாகவும் நிதானமிழந்து
தடுமாறி உலவுகின்றன கனவுகள்…
நிசப்தமாக சப்தமிட்டபடி
கவனங்களில் ஞாபகங்களில் எட்டிப் பார்க்கும்
சப்தமிடும் நினைவுகள்…
நீர்மூழ்கி எழுந்தாலும்
காற்றில் புகுந்து உலவினாலும் கூட
விடாமல் தொடர்கின்றன வீதிகளிலும்
மதுக்கடைகளின் முன்னும்
மயானங்களைச் சுற்றிலும் சப்தங்கள்…
ஆழ்ந்த மவுனத்தால் எதிர்நிற்க
உடைபட
நொறுங்கி ஒடுங்குகின்றன…
என் முன் கொக்கரிக்கும் சப்தங்கள்
தொடத் தொட துள்ளியெழும் சப்தங்களை
வாசிக்காமல் விட்டால் வாய்மூடி வாலைச் சுருட்டிச் கிடக்கின்றன
எதுவான சப்தங்களும்….
இப்போது
தனிமையில் இருந்தாலும்
சப்தங்கள் இல்லாமல் நகர்த்த முடிவதில்லை
பொழுதுகளை…
கா.அமீர்ஜான்
திருநின்றவூர்
7904072432
அமைதியான தியானத்திற்கு எவ்வளவு சப்தங்களை கடக்க வேண்டியிருக்கிறது.
கவிதை மிகமிக அருமை.
வாழ்த்துக்கள் ஐயா!