மாங்காய் தொக்கு செய்வது எப்படி?

மாங்காய் தொக்கு என்பது நிறைய பேருக்கு பிடிக்கக்கூடிய உணவு ஆகும். மாங்காய் தொக்கு பெரும்பாலான விருந்துகளில் இடம் பெறுகிறது. மாங்காய் எல்லா காலங்களிலும் கிடைப்பதில்லை. எனவே அதனை ஊறுகாய், தொக்கு ஆகியவற்றைச் செய்து அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்கின்றனர். இனி சுவையான மாங்காய் தொக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் பெரியது – 3 (தோராயமாக 1 கிலோ)

கல் உப்பு – 100 கிராம்

வத்தல் பொடி – 100 கிராம்

சர்க்கரை – 150 கிராம்

நல்லெண்ணெய் – 100 மி.லி.

கடுகு – 50 கிராம்

வெந்தயம் – 50 கிராம்

பெருங்காயம் – 2 ஸ்பூன்

தாளிக்கத் தேவையான பொருட்கள்

கடுகு – 2 ஸ்பூன்

கருவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

முதலில் மாங்காய்களை நன்கு கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். நறுக்கிய மாங்காய் துண்டுகளுடன் கல் உப்பு சேர்த்து 24 மணிநேரம் வைக்கவும். உப்பு மாங்காயுடன் சேர்ந்து கரைந்து தண்ணீர் விடும்.

24 மணிநேரம் ஊறிய பின், மாங்காய் துண்டுகளை தனியே எடுத்து வெயிலில் நன்கு சுருள காய வைக்க வேண்டும். காய்ந்த மாங்காய்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெல்லத்தைத் தூளாக்கிக் கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து கடுகு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விடாமல் தனித்தனியே வறுத்து எடுத்து பொடியாக்கி கொள்ளவும். மாங்காய், உப்பு கலந்த தண்ணீர் கரைசலில் வெல்லத்தை போட்டு அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி அதனுடன் வத்தல் பொடி, கடுகு பொடி, வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி, சிறு துண்டுகளாக அரிந்த மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்.

வாணலியில் 100 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து மாங்காய் கலவையில் கொட்டவும். பின் மாங்காய் தொக்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, பாத்திரத்தின் வாயினை ஒரு மெல்லிய துணியால் கட்டி, வெயில் 3 முதல் 4 நாட்கள் வரை பகல் முழுவதும் வைத்து எடுக்கவும். சுவையான மாங்காய் தொக்கு தயார்.

குறிப்பு:

மாங்காய் தொக்கு செய்வதற்கு நல்ல புளிப்பான மாங்காய்களை தேர்வு செய்யவும்.

மாங்காய் தொக்கில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டால் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

-ராதாராணி ஐசன்ஹோவர்

Comments are closed.