மாசிலன் ஆதல் குறும்படம் நவீனக் குறும்பட வரிசையில் ஒரு முக்கியமான படமாகும்.
விமர்சனத்திற்குப் போவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.
வசனங்கள் தரும் பொருளை மட்டும் கொண்டு, கதையைப் புரிந்து கொள்பவர்களா நீங்கள்?
அப்படியென்றால், நீங்கள் இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இந்தக் குறும்படத்தைப் பார்க்காமல் இப்படியே ஓடி விடுங்கள்.
வசனங்கள் அற்ற, பாதிக்கதை மட்டுமே கூறி, மீதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றால், ’இந்த மாதிரிப் படங்களே நம் இலக்கிய அறிவுக்குச் சுவை’ என்பவர்கள் மட்டும், இப்படத்தையோ விமர்சனத்தையோ பார்க்கலாம், படிக்கலாம்.
இக்குறும்படம் நவீனமானது. சொல்லப்பட்ட முறையால், எடுக்கப்பட்ட விதத்தால், இசைக்கப்பட்ட இசையால்.
‘குறியீட்டு வாதம்’ எனும் கோட்பாட்டின் அமைப்பில், இக்குறும்படம் ஆழமான உணர்வுகளின் தவிப்பை, அன்பை, நட்பை, ஏக்கத்தை விளக்கிச் செல்கிறது.
படம் பார்ப்பவர்களின் நோக்கில், கதை வெவ்வேறு தளங்களில் தாறுமாறாய் ஓடி, எங்கோ ஓரிடத்தில் நிற்பதை இக்குறும்படத்திற்கு எழுதப்பட்ட விமர்சனங்களால் அறிய முடிகின்றது.
இக்குறும்படத்தின் கதை பூடகத் தன்மையானது. பார்ப்பவர் கண்களில் மாயவலை விரித்துச் செல்கிறது. இயக்குநரின் கதையோடு தொடர, அவர் வைத்திருக்கும் புதிர்களை அவிழ்க்க வேண்டும். இல்லையாயின் நீங்களே கதாசிரியர் ஆகி விடுவீர்கள்.
சப்தமொழி வெளிப்பாடு
சொல்லப்பட்டக் கதைக்குள், சொல்லப்படாத கதைகள், சொல்லும் கதை ஒன்றா? நூறா? இது தான் சிக்கலும், இன்னொரு பக்கம் சிறப்பும் கூட.
வசனமற்ற கதையில், ஆயிரமாயிரம் வார்த்தைகள் ஆளாளுக்குத் தக்கபடி வந்து கொட்டித் தீர்க்கின்றன.
மொழிக்குத் தான் வார்த்தைகள் வேண்டும். கண் பார்வைக்கும், முக பாவனைகளுக்கும் எந்த வார்த்தைகளும் தேவையில்லை. முண்டியடித்துக் கொண்டு, முகத்திரையைக் கிழித்துக் கொண்டு, வீறிட்டுக் கத்துகின்றன முக மொழிகள்.
குறும்படக் கதை கூறிலில் இதுவரை இல்லாத புதுமை. இசை வெளிப்படுத்தும் உணர்வுகளின் புரிதலில், கதை நடத்திச் செல்லும் நளினம். இசைக்கும் கதை கூறும் அறிவுண்டு என்பதை மெய்ப்பிக்கும் குறும்படம் இது.
இசையைத் தவிர்த்துப் பார்த்தால், கதை வேறு பக்கத்தைக் காட்டும். இசையை நுணுகி உணர்ந்தால் கதை இன்னொரு பக்கத்தைக் காட்டும். உண்மையில், ஒன்றைப் பிறருக்குப் புரிய வைக்க மொழி தான் வேண்டுமென்பதல்ல. பிறவற்றாலும் எதுவும் முடியும்.
இக்குறும்படம், பல காட்சிகளை குறியீட்டுவாத முறையில் வெளிப்படுத்துகிறன. மனம் குழம்பிப் போய்த் திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஒரு நிலைப்பாடில்லை.
இதை வெளிப்படுத்த, நீண்ட வண்ணமடிக்கப்பட்ட குழாய் குளத்திற்குள் தெரியும் காட்சியில், நீரின் அலையில், குழாயின் வடிவம் நெளிந்து, வளைந்து பாம்பு போல் செல்வதைப் படம் எடுத்து இருக்கின்றனர். இதைவிட கதாநாயகனின் உள்ளப் போக்கை இனம் காட்டி விட முடியாது.
குறியீட்டுக் காட்சிகள்
அதுபோல், ஹெல்மெட்டிற்குப் பூப்போடுவது, பைபாஸ் ரோட்டில் ஓரத்தில் கிடக்கும் சாராயப் பாட்டில்களைத் தூக்கி எறிவது, இறப்பைக் காட்டச் சுவரொட்டி, மகாமகக் குளத்தில் குளித்தல் செய்தி, மலையின் உச்சியில் அமைதி தேடினாலும் விடாமல் துரத்தும் அமைதியின்மைக் காட்சிகள், லாரிகளின் சப்தங்கள் என்று இன்னும் பல காட்சி வைப்புகள் அனைத்தும் குறியீடாகக் கதை கூறுகின்றன.
இவற்றின் உள்பொருளை அறிந்தால் தான், கதை வெளிப்படும். இதை அறியும் திறன் இல்லையென்றால், கதை எதுவும் புரியாது.
நடக்கும் காட்சி ஒன்று தான். ஆனால். அதன் முன், பின் உள்ள காட்சிகளைப் பார்வையாளர் தான் எழுதிக் கொள்ள வேண்டும் அல்லது நுண்மையால் அறிந்து கொள்ள வேண்டும்.
“அண்ணே, இங்கே ஏன் நிப்பாட்டினீங்க? போலீஸ் வந்தா திட்டுவாங்க” என்று எங்கிருந்தோ யாரோ பேசுவது போல், பேச்சு மட்டும் வரும்.
இந்த வசனம் பைபாஸ் ரோட்டில், வண்டிய நிறுத்தி இருவர் சாராயம் குடித்தனர். பிறகு, விபத்தாகி அதில் ஒருவர் இறந்தார். எனும் கதையை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். (இது கூட என் கணிப்பு தான். இயக்குநர் எதை நினைத்து எழுதினாரோ)
மாசிலன் ஆதல் தலைப்பு, மகாமகக் குளியல் செய்தி இவையே கதையின் மாபெரும் கதை சொல்லிகள். இவற்றிலிருந்தே முழுக் கதையையும் உணர முடிகின்றது.
நான் புரிந்து கொண்ட கதை
தான் செய்த தவறிற்காகத் தானே தண்டனை வழங்கிக் கொள்ளும் கதாநாயகன். தன்னால் இறந்த ஒருவனின் இறந்த இடத்தில் மரியாதை செய்து அவன் வீட்டை நோக்கிச் செல்கிறான்.
இரு குழந்தைகளுடன் இறந்தவனின் மனைவி சோகமாக வாழ்வதை அறிகிறான். வீட்டிற்குள் செல்கிறான். மகனிடம் வெளியே வந்து மன்னிப்புக் கோரி அழுகிறான். பிறகு வாகனத்தில் அடிபட்டுச் சாகிறான். அவ்வளவு தான் கதை.
மரங்கள், வாகனங்கள், பறவைகள், காற்றின் ஒலி இவையெல்லாம் ஒளிப்பதிவாளரின் கையில் உயிர்ப்புடன் பேசுகின்றன. உணர்வுகளுக்கும் ஒரு ஒலி வடிவம் உண்டு. அதை இசையால் வார்க்க முடியும் என நீரூபித்து இருக்கிறார் இசையமைப்பாளர்.
“அப்பா வரட்டும்” என்ற பெண் குழந்தையின் வசனத்திற்குள் ஆயிரம் அர்த்தங்கள் குத்திக் கிழிப்பதை, அந்த விதவையின் முகத்தில் காண முடிகின்றது. அப்பா! என்னா நடிப்பு!
தவறு செய்து விட்டு வருகிறோம் என்ற குற்ற உணர்வோடு இருப்பவனை, எரித்து விடுவதைப் போல் பார்க்கும் விதவையின் பையன்.
அவனிடம் சொம்பில் நீர் வாங்கி அருந்தி, அப்படியே மன்னிப்புக் கோரும் பொழுது, கண்ணீர் கலங்கி, உடம்பு உதறல் எடுத்து, பதறும் அந்தக் காட்சி, இக்குறும்படத்தின் மிக முக்கியமான இடமாக இருக்கின்றது.
சரியான, உச்சக்கட்டமான நடிப்புக்காட்சிகள் அனைத்தும், சோடை போகவில்லை. பல விருதுகளைப் பெற வேண்டிய அற்புதப் படைப்பு இது.
இக்குறும்படம், பலருக்குப் புரியவில்லை என்பதே கதையின் குறைபாடாகவும், படத்தின் நிறைவாகவும் இரு நிலைகளில்அறிய முடிகின்றது.
நவீனக் குறும்பட வரிசையில் மாசிலன் ஆதல் குறும்படம் ஒரு முக்கியமான படமாகும்.
லாரிக்கு அடியில் தூங்கிக் கொண்டே செய்தி கேட்டுத் தொடங்கும் படம், லாரிக்கு அடியிலேயே இறந்து போவது போல முடிகிறது.
அதிகமாக, மேலை நாட்டுக் கோட்பாடுகளுடன் இன்றைக்குக் குறும்படங்களும், திரைப்படங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலை, மேலை நாடுகளில் 1980-1990க்களிலேயே வந்து விட்டன.
“The walking Fish”, “My shoes”, “Doodlebug” போன்ற படங்கள் உலகம் முழுவதும் பார்க்கப்பட்ட நவீன குறும்படங்களில் சிலவாகும்.
நாம் இப்போது தான் வெற்றிநடை போடுகிறோம்.
யூகங்கள், யூகங்கள், யூகங்கள் – விரிந்து விரிந்து துளிர் விடுகிறது – ”மாசிலன் ஆதல்”.
இந்தக் குறும்படம் சொல்லும் கதை என்ன? நீங்கள் புரிந்து கொண்ட கதையை எழுதி அனுப்புங்களேன்!
admin@inidhu.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
வாசக எழுத்தாளரின் எண்ணம்
எழுத்தாளர் வ. மணிகண்டன் தமது விமர்சனத்தில் கூறும்பொழுது இவ்வாறு கூறுகிறார்.
“இறுதிக்கட்டத்தில் நாயகன் ஏன் அந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்குள் செல்கிறான்? மாமியார், குழந்தைகள் என எல்லோரும் இருக்கும் தருணத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறான்? வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்ற குழப்பம் இன்னமும் தீர்ந்தபாடில்லை.
‘இதுதான்’ என்று நானாக ஒன்றை யூகித்திருக்கிறேன். பார்வையாளனுக்கான வெளியை (space) கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் கூட இப்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். தெரியவில்லை.
‘இதற்காகத்தான் உள்ளே நுழைகிறான்’ என்கிற யூகம் சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். ஒவ்வொரு படைப்புமே தமது பார்வையாளனுக்கும் / வாசகனுக்குமான ஒரு வெளியை உருவாக்கவே முயற்சிக்கின்றன. அதில் அவரவர் கற்பனை முக்கியத்துவம் பெறுகின்றன”
படைப்பாளிகள்
கதை, திரைக்கதை, இயக்கம் – நாதன். ஜி
நடிகர்கள் – செல்வ கந்தன் செல்வராஜ், பூஜா, மாஸ்டர் இளவேனில், மாஸ்டர் குகன்.
எடிட்டிங் – இராதாகிருஷ்ணன் தனபால்
இசை – அசோக் ஸ்ரீதரன்
மாசிலன் ஆதல் குறும்படம் பாருங்கள்
குறும்படத்தைக் காண கீழே உள்ள காணொளியை சொடுக்கவும்.
(குறும்படம் விரியும்)
முனைவர் செ சு நா சந்திரசேகரன்
கைபேசி: 9283275782
மின்னஞ்சல்: chandrakavin@gmail.com
Comments
“மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்” அதற்கு 7 மறுமொழிகள்
@மாசிலன் ஆதல் குறும்படம்
முதலில் இயக்குநருக்கு வாழ்த்துக்கள் சொல்வதைவிட இப்படத்தைப் பற்றி ஓர் ஆழமான விமர்சனத்தை விவாதமாக மாற்றியதற்காக நன்றி. குறிப்பாக வசனத்தை மட்டும் வைத்து நீங்கள் படம் பார்ப்பவராக இருந்தால் நிச்சயம் நீங்கள் இந்த படைப்பை விரும்ப வேண்டாம் என்ற ஞாயமான விமர்சனத்துடன் தொடங்கும் இவ்வாய்வு ஒரு படத்தை எப்படி நுணுகி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் தொனியில் அமைந்துள்ளதாக உணர்கிறேன்.
முண்டாசுக் கவி பாரதி சொன்னதுதான் என் சிந்தையில் ஊருகிறது. “பேசாத வற்றைப் பேசத் துணிந்தேன்” என்ற அந்த ஒற்றைச் சொல்லுக்கு நூற்றுக்கணக்கான அர்த்தங்கள் இருப்பதை அறிகிறேன். சில நேரத்தில் இசை, இரைச்சலாகத்தான் தோன்றும். அதேபோல் சப்தம் கூட இசையாக மாறும் அது கேட்பவர்களின் மனநிலையைப் பொருத்து. இச்சூழலில் மாசிலன் ஆதல் எனும் குறும்படம் இன்னும் நான் பார்க்கவில்லை ஆனாலும் கூட இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற உணர்வு இந்த விமர்சனத்தை படித்த பிறகு தோன்றியிருக்கிறது. அந்த அளவிற்கு படத்தை பார்த்து வெறுமனே, பார்த்தோம் ரசித்தோம் உணர்ந்தோம், மறந்தோம் என்று இல்லாமல் அதை முறையாக பதிவு செய்யும் ஆய்வாளரான பேராசிரியருக்கு என்னுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே சமயத்தில் படத்தை படமாக பார்ப்பதைத் தாண்டி, அதை ஒட்டி ஒரு விமர்சனத்தை பதிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பார்க்கும் மன நிலைமை, உள்ளபடியே படத்தின் ஆழத்திற்கு கொண்டு போய் சேர்க்காது. வெறும் விமர்சனத்தின் பார்வையிலேயே நின்றுவிடும். அந்தவகையில் இப்படத்தை விமர்சனம் என்ற கோணத்தையும் தாண்டி அவர் படத்தின் அடி ஆழத்திற்கு வரை சென்ற உணர்வை உணர்ந்து கொள்ள முடிகிறது. காரணம் நான் இப்படியாக புரிந்து கொள்கிறேன். அவர் பேசும் மொழி வெறும் மாயாஜாலத்துடன் நின்றுவிடாமல், மயக்கத்தை ஏற்படுத்தாமல் உள்ளதை உள்ளபடியே எந்த பாசாங்கும் இல்லாமல் இக்கருத்தை பதி விட்டதாக உணர்கிறேன்.
நேரடியாக படத்தினுடத்தின் கதைக்கு செல்லாமல் காட்சிப்படுத்துதல் வழியாக விமர்சனப் பார்வையில் நுழைந்தது பெரிதும் மெச்சத் தகுந்த வையாகும். ஒவ்வொன்றுக்கும் காட்சிப்படுத்தி, அதற்குப் பிறகு இறுதியாக கதையை ஓரிரு வரிகளில் சொல்லி முடித்த பாங்கும் ஒரு தேர்ந்த படைப்பாளியின் கைவண்ணம் இது. ஒரே ஒரு வசனத்தை மட்டும் பெண் குழந்தை பேசுவதாக அர்த்தப்படுத்தும் அந்த இடமும் நேர்த்தியாக படத்தில் கையாளப்பட்டுள்ளது என அழகாக எடுத்துரைத்த பாங்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.
ஒரு நல்ல விமர்சனத்தால் தான் படைப்பையும், படைப்பாளியையும் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு நிச்சயம் இது ஒரு சான்று. குறிப்பாக புதுக்கவிதை வரலாறு; இன்று வெற்றிகரமாக அதனுடைய போக்கு தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு, எழுத்து, கசடதபற, உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதிய விமர்சனம் தான் அதனுடைய கொண்டாட்டத்திற்கு அடிகோளாக விளங்கியது. அதனுடைய நீட்சிதான் சமீப காலத்தில் நல்ல கலைப் படைப்புகளையும் அதை ஒட்டிய விமர்சனத்தையும் இன்று காண முடிகிறது.
இன்றைய சூழலில் பலருக்கு நேரம் இல்லை என்ற ஒரு வருத்தம் இருப்பதை போல, இருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மிக நேர்த்தியான முறையில் பார்த்துப் பார்த்து செலவழித்து வரும் பேராசிரியர் சந்திரசேகர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் மெச்சத் தகும்.
சேகுவராவை பற்றி ஆய்வாளர் ஒருவர் இப்படி எழுதுவார். நூற்றுக்கணக்கான ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான பக்கங்கள் வரை என்னால் எழுதக்கூடும் என்ற கூற்று மெய்ப்பிக்க கொடுக்கும் வகையில் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நாளைக்கும் பல பக்கங்களை இணையத்தில் எழுதி அலங்கரித்து வந்து கொண்டிருக்கிறார்.
கதை, திரைக்கதை, இயக்கம் – நாதன். ஜி
எடிட்டிங் – இராதாகிருஷ்ணன் தனபால்
இசை – அசோக் ஸ்ரீதரன்
ஒரு படம் உருவாவதற்கு இவர்கள்தான் மிக முக்கிய காரணம் அதனால் படைப்பாளிகளை நான் மனதார பாராட்டி மகிழ்கிறேன். இயக்குனர் இசையமைப்பாளர் எடிட்டர் நடிகர்கள் அனைத்து படக்குழுவினர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
விமர்சனத்தைப் படித்த உடனே என்னுடைய கருத்தைப் பதிவிட வேண்டும் என்ற முனைப்பில் எழுதத் தொடங்கிவிட்டேன். நிச்சயமாக படத்தை பார்த்த பிறகு படத்தினுடைய விமர்சனத்தை பதிவிடுகிறேன்.
நன்றி
தன் வினை தன்னை சுடும் என்பர், தன்னை சுடுவதை தாங்கி கொள்ளும் மன பக்குவம், தன்னால் பிறர்க்கு சுடுபடுவதை தாங்கி கொள்ள முடியாது. இந்த கதாநாயகனும் ஓர் மனிதன் தான். இக்குறும்படத்தில் வசனங்கள் குறைவு,அர்த்தங்கள்(நுணுக்கங்கள்) அதிகம்.
செருப்பை கூட அணிய விடாத மது, வாழ்க்கையை வாழ விடாது என்று எப்பொழுது நம் மக்கள் உணர்வர்?
ஒருவன் விபத்தில் இறந்தான், கதாநாயகனோ தற்கொலை செய்து கொண்டான். பாவம் கதாநாயகனுக்கு மனைவி, குழந்தை என குடும்பம் இருக்குறதோ, இல்லையோ?
மகாமகம் சென்று பாவங்களை கழிக்க பார்த்தான். தன் மகா மனதில் இருந்து பாவங்களை கழிக்க முடியவில்லை. இறந்தவரின் குடும்பத்தை பார்த்து குழந்தைகளை கவனித்து கொண்டு தன் பாவ கணக்கை குறைத்திருக்கலாம்.
தற்கொலை சிறந்த முடிவு அல்ல. நன்றி 🙏
உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் இக்கதை, உண்மையில் வித்யாசமானது. இயக்குனருக்குப் பாராட்டுகள். விமர்சகர் அதைச் செம்மையாக உள்வாங்கி இருக்கிறார்.
Supper short film… touch the heart …
அப்பா வரட்டும், எனும் குழந்தையின் நடிப்பும், தண்ணீர் கொடுக்கும் அந்தப் பையனின் நடிப்பும் சூப்பர். கதா நாயகர்களே அவர்கள் தான். விமர்சனம் கூர்ந்து எழுதப்பட்டுள்ளது படத்திற்குச் சிறப்பாகும்.
இயக்குனர் திரை உலகில் கட்டாயம் மின்னுவார்.
: ஆம் இந்த குறும்படம் மவுனங்களால் தன் மனதை பேசுகிறது.
உலகத்திலே சிறந்த மொழி மவுன மொழி என நா.முத்துகுமாரின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
குறும்படம் விமர்சனத்தில்…,வாசனங்களால் மட்டுமே நீங்கள் குறும்படத்தை புரிந்து கொள்வீர்கள் எனில் விமர்சனத்தையும் படிக்காமல், குறும்படத்தையும் பார்க்காமல் ஓடிவிடுங்கள் எனும் இடத்தில்.
மவுனங்களால் எந்தவொன்றையும் தரிசிக்கும் உங்கள் மனம் புலப்படுகிறது.
எந்தவொரு படைப்புகளிலும் ஒரு சிறு பகுதியை புரிந்து கொள்ள முடியாது என்கிற போதுதான் அதன் மகத்துவம் காலம் கடந்து வாழ்கிறது.
அதன்படி ….சில கருத்துக்களை உரைக்கிறேன்.
சாலையோரத்தில் நின்று எதையோ சிந்தித்து கால்கள் நடக்க …, யாருமற்ற அனாதையாக கிடந்த ஹெல்மெட் எதேச்சையாக பார்த்து விட அதை எடுத்து மரத்தடியில் வைத்து பூ போடும் காட்சிகள் மனதை மவுனமாக கண்ணீர் சிந்த வைக்கிறது.
சோறு சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைக்கு தாய் இருக பிடித்து உணவைத் திணிக்கும் காட்சிகளோடு … படிக்கட்டுகளுக்கு அடியில் போய் மறைந்து கொள்ளும் குழந்தையை மீண்டும் தூக்கி சோறு ஊட்டும் போது சாலையில் குடிகாரன் தள்ளாடும் காட்சிகளும்….அதே வேளையில்
குழந்தை இரு அப்பா வரட்டும் என்கிற காட்சிகள் மனதை ஏதோ செய்கிறது.
தண்ணீரில் பாம்பு தெளிவதை போன்ற காட்சியை பார்த்து விரக்தி மனநிலையில் விலகி செல்லும் காட்சிகள்,லாரிக்கு அடியில் படுத்து செய்தி கேட்பது முக்கியமானது … இப்படி பல அடுக்குகளோடு இயக்குனர் ஒவ்வொரு காட்சிகளையும் , ஒன்றோடொன்று இணைந்து மவுனங்களாலேயே பேச வைத்திருக்கிறார்.
அந்த வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு சாலையில் நடந்து செல்லும் போது வாகனம் மோதும் சத்தம் மட்டும் கேட்கிறது அதோடு குறும்படம் நிறைவுறுகிறது.
இன்னும் சில காட்சிகளை வெளிப்படையாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.
இருந்தாலும் பார்வையாளனுக்கு என்று ஒரு இடம் இருக்கத்தானே செய்கிறது
குறும்படத்தில் இவ்வளவு குறியீடுகள் இருக்கிறது என்பதை தங்களின் விமர்சனத்தைப் படித்த பிறகே புரிந்து கொள்ள முடிகிறது. தங்களின் விமர்சனத்தை படிப்பதற்கு முன் படிப்பதற்கு பின் எனும் வகையில் படித்தபின் காணும்போது சிறப்பாக இருக்கிறது.