மாசி மகம்

மாசி மகம் ஓர் இந்துக்கள் பண்டிகை. இது ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் மக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் போது மக்கள் ஆறு, குளம், கடல் ஆகிய நீர் நிலைகளில் புனித நீராடுகின்றனர். இதனால் தங்களுடைய பாவங்கள் நீங்குவதாக நம்புகின்றனர்.

மேலும் இந்நாளின் போது மக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு நீர் நிலைகளில் நீர்த்தார் கடன்களைச் (பிதுர் கடன், தர்ப்பணம்) செய்கின்றனர். இவ்வுலக வாழ்வில் ஈடுபட்டு துன்பத்தினை அடையும் ஆன்மாவை இறைவனின் திருவடியை அடைய வேண்டி வழிபாடு நடத்துவது இவ்விழாவின் சிறப்பாகும்.

இந்த நாளானது கடலாடும் நாள், தீர்த்தமாடும் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. புண்ணிய இடங்களில் நீராட முடியாதவர்கள் விரதம் மேற்கொண்டு கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் கும்பகோணம், ராமேஸ்வரம், திருச்செந்தூர் உள்ளிட்ட பல இடங்களில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இவ்விழா கும்பமேளா என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

 

மாசி மகம் பற்றிய கதைகள்

திருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார்.

வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாக அருளினார் என்று ஒரு கதை உண்டு.

சிவ பக்தனான தட்சப் பிரஜாபதி அன்னை உமையவளை தனது மகளாகப் பிறக்க வேண்டினான். அவ்வாறே உமையம்மை காளிந்தி நதியில் தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். சங்கினை தட்சன் தொட்ட உடன் உமையம்மை குழந்தையாக மாறியதும் மாசி மகத்தன்று தான் என்று ஒரு கதை உண்டு.

ஒரு சமயம் இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கவர்ந்து சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். அப்போது திருமால் வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனுடன் போரிட்டு பூமியை மீட்டார். திருமால் வராக அவதாரம் எடுத்ததும் மாசி மகத்தில் தான் என்று ஒரு கதை உண்டு.

ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான் என்றும் ஒரு கதை உண்டு.

 

கொண்டாடும் முறை

இத்திருவிழா நாளன்று அதிகாலையில் பக்தர்கள் உற்சவ மூர்த்தி எனப்படும் சுவாமி சிலைகளை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலைகளுடன் தாமும் நீர் நிலைகளில் மூழ்கி வழிபாடு நடத்துகின்றனர். இந்நிகழ்ச்சியானது தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகிறது.

சிவபெருமான், அம்மன், முருகன், பெருமாள் போன்ற கடவுளரின் சிலைகளே இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றன. இந்நிகழ்ச்சியின்போது மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்வர்.

சில கோயில்களில் கஜ பூஜை எனப்படும் யானையை வழிபடும் நிகழ்ச்சியும், அசுவ மேத பூஜை எனப்படும் குதிரையை வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இத்திருவிழா தமிழ்நாட்டிலும் மேலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

மாசி மகத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதன் மூலம் மக்கள் தங்களின் பாவங்கள் எல்லாம் நீங்குவதாகவும், தங்கள் வாழ்வுக்கு வேண்டிய செல்வம், ஆற்றல் மற்றும் திறன் ஆகியவற்றை இறைவன் வழங்குவதாகவும் நம்பிக்கை கொள்கின்றனர்.

 

மகாமகம்

மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. அதாவது தேவ குருவான குரு பகவான் சிம்ம ராசியில் இருக்கும் பொழுது மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்தில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது கும்பகோணத்தில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கும்பகோணத்தில் மகாமகக் குளத்தில் புனித நீராடல் நடைபெறுகிறது. இந்திய புனித நதிகள் எனப் போற்றப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, காவிரி, சரயூ, மகாநதி போன்ற நதிகளும் இம்மகாமக குளத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்வதாகவும் கருதப்படுகிறது.

மகாமக தினத்தன்று கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் மகாமக குளத்திற்கு பகலில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. பக்தர்கள் உற்சவ மூர்த்திகளுடன் இக்குளத்தில் புனித நீராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிகழ்ச்சி தீர்த்தவாரி என்று அழைக்கப்படுகின்றது.

இப்புனித நீராட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் குறைகள் மற்றும் குற்றங்கள் நீங்கப்பெற்று வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறுவதாகக் கருதுகின்றனர்.

அன்று இரவு கும்பகோணத்தில் உள்ள முக்கிய கோவில்களில் தேர்திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்து மகாமக குளத்தில் புனித நீராடுகின்றனர். மேலும் இப்புனித நீராடலுக்கு முன்போ அல்லது பின்போ காவிரியிலும் நீராடுகின்றனர்.

மகாமக குளமானது கும்பகோண நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. இது சரிவக வடிவத்தில் சுமார் 6.2 ஏக்கர் பரப்பில் உள்ளது. 20 புனிதக் கிணறுகள் (தீர்த்தங்கள்) இக்குளத்தினுள் உள்ளன.

அவற்றின் பெயர்களாவன: 1.வாயு தீர்த்தம் 2.கங்கை தீர்த்தம் 3.பிரம்ம தீர்த்தம் 4.யமுனை தீர்த்தம் 5.குபேரத் தீர்த்தம் 6. கோதாவரி தீர்த்தம் 7.ஈசான தீர்த்தம் 8.நர்மதைத் தீர்த்தம் 9.சரஸ்வதி தீர்த்தம் 10. இந்திர தீர்த்தம் 11.அக்கினி தீர்த்தம் 12. காவிரி தீர்த்தம் 13.யம தீர்த்தம் 14. குமரி தீர்த்தம் 15. நிருதி தீர்த்தம் 16. பயோசினி தீர்த்தம் 17. தேவ தீர்த்தம் 18.வருண தீர்த்தம் 19. சரயூ தீர்த்தம் 20. கன்ய தீர்த்தம்

மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் நான்கு வீதிகள் உள்ளன. இக்குளத்தின் ஓரத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மக்கள் புனித நீராட இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குளத்தினைச் சுற்றிலும் 16 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை: 1. பிரம்மதீர்தீஸ்வரர் கோபுரம் 2. முகுந்தீஸ்வரர் கோபுரம் 3.தானேஸ்வரர் கோபுரம் 4.விருசம்பேஸ்வரர் கோபுரம் 5.பாணேஸ்வரர் கோபுரம் 6.கோணீஸ்வரர் கோபுரம் 7. பக்தீஸ்வரர் கோபுரம் 8. பைரவேஸ்வரர் கோபுரம் 9. அகஸ்தீஸ்வரர் கோபுரம் 10.வயனேஸ்வரர் கோபுரம் 11. உமாமகேஸ்வரர் கோபுரம் 12. நைருதீஸ்வரர் கோபுரம் 13.பிரம்மேஸ்வரர் கோபுரம் 14. கங்காதீஸ்வரர் கோபுரம் 15. முக்ததீர்த்தீஸ்வரர் கோபுரம் 16. ஸ்ரீத்ர பலேஸ்வரர் கோபுரம் ஆகும்.

இவ்விழாவன்று மக்கள் முதலில் 16 மண்டபங்களில் உள்ள சிவனை வணங்கி பின் 20 தீர்த்தங்களில் தாமே நீரை இறைத்து நீராடி கும்பேஸ்வரரை வணங்கி மகாமகக் குளத்தில் நீராடி பின் காவிரி நதியில் நீராடி பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.

காசி விஸ்வநாதர், கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், கூத்தீஸ்வரர், ஹக்கதீர்ஸ்வரர், கொளதமீஸ்வரர், அமிர்த கலச நாதர், பாணபுரீஸ்வரர், அபிமுக்தீஸ்வரர், கம்பட்டா விஸ்வநாதர், ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட 12 சிவாலயங்களும் சாரங்கபாணி, சக்கரபாணி, இராமசுவாமி, ராஜகோபால சுவாமி, வராகப்பெருமாள் உள்ளிட்ட 5 வைணவ ஆலயங்களும் இவ்விழாவில் பங்கு பெறுகின்றன.

இவ்விழாவானது சைவ மற்றும் வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக  விளங்குகின்றது. நாமும் மாசி மகத்தில் நீர் நிலைகளில் நீராடி இறையருள் பெறுவோம்.

 

Comments are closed.