மாணிக்கம் விற்ற படலம் இறைவனான சிவபெருமான் வீரபாண்டியன் மகனான செல்வப்பாண்டியனின் முடிசூட்டிற்காக நவரத்தின வியாபாரியாக வந்து மாணிக்கம் உள்ளிட்ட நவரத்தினக் கற்களை விற்றதைப் பற்றிக் கூறுகிறது.
நவரத்தினங்களின் வகைகள், அவற்றின் நிறங்கள், பயன்பாடு, அவற்றை அணிவதால் உண்டாகும் நன்மைகள் இப்படலத்தில் விளக்கிக் கூறப்பட்டுள்ளன.
நவரத்தினங்கள் எவ்வாறு உருவாயின? வலாசுரன், அபிடேசக பாண்டியன் பற்றிய குறிப்புகள் இப்படலத்தில் காணப்படுகின்றன.
மாணிக்கம் விற்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் பதினேழாவது படலம் ஆகும். இனி மாணிக்கம் விற்ற படலம் பற்றிப் பார்ப்போம்.
செல்வப்பாண்டியனுக்கு முடிசூட எண்ணுதல்
உக்கிரபாண்டியனின் மகனான வீரபாண்டியன் சீரும் சிறப்புமாக மதுரையை ஆண்டு வந்தான். அவனுக்கு பட்டத்து ராணியைத் தவிர மனைவியர் பலர் இருந்தனர்.
வீரபாண்டியனுக்கு பட்டத்து ராணியைத் தவிர ஏனைய மனைவியர் மூலம் குழந்தைகள் பலர் பிறந்தனர். பட்டத்து ராணிக்கு மட்டும் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.
எனவே வீரபாண்டியனும் அவனுடைய பட்டத்து ராணியும் குழந்தைப்பேறு வேண்டி அட்டமி விரதம், சதுர்த்தி விரதம், சோமவார விரதம் முதலியவற்றைப் பின்பற்றி வழிபாடு நடத்தினர்.
வழிபாட்டின் பலனாக சற்புத்திரன் ஒருவரைப் பெற்றனர். தன் பட்டத்துராணியின் மகனான செல்வப்பாண்டியனுக்கு முறைப்படி கல்வி, கலைகள் ஆகியவற்றை வீரபாண்டியன் கற்பித்தான்.
ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். அப்போது புலியால் கொல்லப்பட்டான். மன்னன் மறைந்த சேதியை அறிந்த மன்னனின் மற்ற மனைவியர் பிள்ளைகள் கருவூலத்தை அடைந்து நவமணிகள் பதித்த திருமுடியையும், செல்வத்தையும் திருடிச் சென்று விட்டனர்.
மன்னன் மறைந்த சேதியை அறிந்த அமைச்சர்கள் வீரபாண்டியனுக்கு உரிய முறையில் செல்வபாண்டியனை வைத்து ஈமச்சடங்குகளை முடித்தனர். பின்னர் செல்வபாண்டியனுக்கு முடிசூட எண்ணினர்.
கருவூலத்தை திறந்து திருமுடியை தேடினர். நவமணிகள் பதித்த திருமுடியும், பிற செல்வங்களும் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
வேறு மணிமுடி ஒன்று செய்யலாம் என்றாலோ உயர்ந்த பெரிய மணிகள் இல்லை. முடி இல்லையாயின் அரசும் இல்லை. அரசு இல்லையாயின் மக்கள் துன்பம் அடைவர். இப்போது நாம் என்ன செய்வது? என்று திகைத்தனர்.
சோமசுந்தரர் நவரத்தின வணிகராக தோன்றுதல்
பின்னர் அரசகுமாரனை அழைத்துக் கொண்டு இறைவனை வணங்க எண்ணிச் சொக்கலிங்கப் பெருமான் திருமுன்னர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது இறைவனர் அவர்கள் முன்னர் ஒரு நவரத்தின வணிகராக வேடம் பூண்டு தோன்றினார். அவர் அமைச்சர்களிடம் “நீங்கள் கவலை தோய்ந்த முகத்தினராய் வரும் செய்தி யாது?” என்று கேட்டார்.
அமைச்சர்கள் நடந்த விவரங்களை அவரிடம் விளக்கிக் கூறினர். அதனைக் கேட்ட இறைவனார் “நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்னிடம் நவரத்தினங்கள் பல உள்ளன. அவற்றைக் காட்டுகிறேன். பாருங்கள் அவை பலகோடி பொன் விலையுள்ளன.” என்று கூறி கீழ்த்திசையினை நோக்கி அமர்ந்து ஒரு பெரிய கம்பளத்தை விரித்தார்.
அக்கம்பளத்தின் எட்டுத்திசைகளிலும் முறையே முத்து முதலிய எட்டு மணிகளை எடுத்து வைத்து “இம்மணிகள்; வலன் என்னும் அசுரஅரசனின் உடற்கூறுகள்” என்று கூறினார்.
உடனே அமைச்சர்கள் ‘வலன் என்பவன் யார்? அவனுடைய உடலிலிருந்து எவ்வாறு நவமணிகள் தோன்றின?” என்று கேட்டனர்.
நவமணிகள் தோன்றிய விதம்
இறைவனான வணிகர் அமைச்சர்களிடம் “வலன் என்பவன் ஓர் அசுர அரசன். அவன் சிவபெருமானை நோக்கி தவம் இயற்றினான்.
அவனின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் “என்னை நோக்கி தவம் இயற்றியதன் காரணம் என்ன? உனக்கு யாது வேண்டும்?” என்று வினவினார்.
அதற்கு வலன் “நான் போரில் யாராலும் பிளவுண்டு இறக்காத வரத்தை அருள வேண்டும். ஊழ்வினையின் காரணமாக எனக்கு இறப்பு நேர்ந்தால் என் உடலானது துறவிகளும் விரும்பும் ஒன்பது மணிகளாக வேண்டும்” என்று வேண்டினான்.
இறைவனாரும் வலனுக்கு அவ்வாறான வரத்தினை அருளினார். வரத்தினை பெற்ற மகிழ்ச்சியால் தேவேந்திரனோடு வலன் போரிட்டு இந்திரலோகத்தைக் கைப்பற்றினான்.
வலனின் வரத்தினை அறிந்த தேவேந்திரன் வலனை போரினால் வெல்ல இயலாது. ஆகையால் சூழ்ச்சியால் வெல்ல வேண்டும் என்று எண்ணி மனதிற்குள் ஒரு திட்டத்தினை வகுத்தான்.
அதன்படி தேவேந்திரன் வலனை அணுகி “வெற்றியுடையவனே உன்னுடைய தோளின் வலிமையும், வெற்றிப் பெருக்கும் எல்லா திசைகளிலும் பரவி விட்டது. அந்த புகழ்ச்சியின் காரணமாக நான் ஒரு வரத்தினை உனக்கு அளிக்க விரும்புகிறேன். நீ வேண்டும் வரம் யாது?” என்று கேட்டான்.
அதற்கு வலன் “சிவபெருமான் அருளிய நல்ல வரங்கள் எனக்கு இருக்கவும், அதற்கு மேலாக நான் உன்னிடம் பெறக்கூடியது ஏதேனும் உள்ளதா? என்னிடம் உனக்கு வேண்டியது யாது?” என்று எதிர் கேள்வி கேட்டான்.
வலனின் வார்த்தைக் கேட்டதும் தேவேந்திரன் மகிழ்ந்து “மேருமலையை வில்லாக வளைத்துக் கொடிய அவுணர்களின் திரிபுரத்தை எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமானுடைய வெள்ளி மலையை அடைந்து, அங்கு ஒரு வேள்வியினை நான் செய்வேன். நீ அப்போது தேவர்களுக்கு அவியூட்ட வேள்விப் பசுவாகி வருவாயாக” என்று கூறினான்.
அதனைக் கேட்ட வலன் “ததீசி முனிவன் தன்னுடைய முதுகுத் தண்டினை வஜ்ஜிரப்படைக்குக் கொடுத்து உடலால் புகழ் பெற்றான். நானோ பிறரை வெல்லும் வெற்றியாலும், பிறரால் அழியாத உடல் முழுவதும் நவமணிகள் ஆகுமாறும் ஆகிய இரண்டால் (கொடை, வெற்றி) புகழ் பெறப் போகிறேன். ஆதலால் நீ வேண்டியபடி வேள்விப் பசுவாகி உங்களுக்கு அவியுணவு ஊட்ட வருவேன்” என்று வாக்களித்தான்.
பின்னர் வலன் தன் மகனுக்கு பட்டத்தைச் சூடிவிட்டு தேவர்களுக்கு அவியுணவு ஊட்ட வேள்விப் பசுவாகி அமைதியாக தேவேந்திரன் வேள்வி செய்யும் இடத்திற்கு வந்து நின்றான்.
தேவர்கள் அமைதியின் உருவாகி வந்த பசுவாகிய வலனை மூச்சடக்கிக் கொன்றனர். இறந்து போக வலன் சத்தியலோகம் சென்றான்.
இந்திரன் வலனின் உடலினைத் தீயிலிட்டு தேவர்களுக்கு உண்பித்து வேள்வியைச் செய்து முடித்தான். வேள்விப் பசுவாகி வந்த வலனின் இரத்தம் மாணிக்கம் ஆனது.
பற்கள் முத்து, மயிர் வயிடுரியம், எலும்பு வயிரம், பித்தம் மரகதம், நிணம் கோமேதகம், தசை பவளம், கண்கள் நீலம், கோழை புருடராகம் என நவமணிகள் தோன்றின.”என்று கூறினார்.
பின் நவமணிகள் தோன்றிய இடங்களையும், சாதிகளையும், குணங்களையும், குற்றங்களையும், இம்மணிகளை உடலில் அணிபவர் அடையும் பயன்களையும் கூறி முடித்தார்.
இறைவனின் வாழ்த்து
பின்னர் அவர் வடக்கு திசையினை நோக்கி இருந்து மணிகளைக் கையில் எடுத்து “இவ்வரசிளங் குமரனுக்கு நிறைந்த செல்வமும், நீண்ட வாழ்நாளும் அமைவதாக. இந்த மணிகளைக் கொண்டு மணிமகுடம் செய்து சூட்டி இக்குமாரனுக்கு அபிடேகப்பாண்டியன் என்று பெயரிட்டு அழைப்பீராக” என்று வாழ்த்தி நவமணிகளை வழங்கினார்.
அரசிளங்குமாரனும் சொக்கலிங்கப் பெருமானை வணங்கி அம்மணிகளைக் கையில் பெற்றுக் கொண்டான். இறைவனாரும் நவமணிகளை அளித்தவுடன் அவ்விடத்தைவிட்டு மறைந்தார்.
இங்கு வணிகராக வந்து சொக்கநாதரே என்று அமைச்சர்கள் உணர்ந்தனர். அரசகுமாரன் சொக்கநாதரை வழிபட்டு அரண்மனையை அடைந்தான்.
இறைவனார் அளித்த நவமணிகளை கொண்டு மணிமகுடம் செய்து நல்ல நாளில் அரசிளங்குமரனுக்கு முடிசூட்டி அபிடேகப்பாண்டியன் எனப் பெயரிட்டனர்.
முன்னர் பொருட்களைக் கவர்ந்து சென்ற வீரபாண்டியனின் மற்றைய பிள்ளைகள் பிடிபட்டனர். அபிடேகப்பாண்டியன் அவர்களை மன்னித்து அவர்கள் வாழ்வதற்கு தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான். பின் அபிடேகப்பாண்டியன் நல்வழியில் நீதிதவறாது மதுரையை ஆட்சி செய்து வந்தான்.
இப்படலம் கூறும் கருத்து
இறைவனிடம் வரம் பெற்றவராயினும் வலனின் அகங்காரம் அவனுக்கு அழிவைத் தேடித் தந்தது. ஆதலால் எவ்வளவு பெரியவராயினும் அகந்தை அழிவு வழி வகுக்கும் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.
முந்தைய படலம் வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம்
பிந்தைய படலம் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம்
ஐயா, தங்கள் பதிவில் உள்ள அனைத்து படலங்களையும் படித்து வருகிறேன்.
தொடர்ந்து அனைத்து படலங்களின் பெருமைகளையும் வெளியிடவும்.
நன்றி.