மாதுளை – மருத்துவ பயன்கள்

மாதுளை பல நோய்களைக் கட்டுப் படுத்தி உடலை வளமாக்க பயன்படுகின்றது. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை.

பூ, பழத்தோல், பட்டை ஆகியவை துவர்ப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பழம் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை. பூ, பழத் தோல் ஆகியவை இரத்தப் போக்கைக் கட்டுப் படுத்தும். துவர்ப்புச் சுவையைக் கூட்டும். பழம் குளிர்ச்சி உண்டாக்கும். பூ பசியைத் தூண்டும். மரப்பட்டை வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். விதை ஆண்மையைப் பெருக்கும். குடல் புழுக்களைக் கொல்லும்.

மாதுளை குறுஞ்செடி அல்லது மரமாகக் காணப்படும். 6 மீ வரை உயரமாக வளரும். சிறு கிளைகள் முள்முனைகள் கொண்டவை. இலைகள், அகலத்தில் குறுகியவை. நீளமானவை. குறுக்கு மறுக்குமானவை. கிளிப்பச்சை நிறமானவை. பூக்கள் பளிச்சிடும் வண்ணமான இரத்த சிவப்பு நிறமானவை. இதழ்கள் ஒழுங்கற்ற பல மடிப்புகளாகக் காணப்படும். மகரந்த தாள்கள், தொகுப்பாக மஞ்சள் நிறமாகக் காணப்படும்.

மாதுளை பழங்கள் உருண்டையானவை. ஆரஞ்சு நிறமானவை. விதைகள் சாறுள்ள தோலால் மூடப்பட்டிருக்கும். இதனுடைய பழத்தின் முக்கியத்துவம் கருதி வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. மேலும் பெருமளவில் பயிர் செய்யப்படுகின்றன. மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை.

மயக்கம், தலைசுற்றல், தொண்டை வறட்சி, புளிச்ச‌யேப்பம், வாந்தி தீர
மாதுளம் பழச்சாறு 100 மிலி அளவு காலையிலும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். பிரயாணத்தின் போது சிலருக்கு வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படலாம். அப்போதும் இதனை சாப்பிட்டு பயன் பெறலாம்.

மாதுளம் பழச் சாறு குடிப்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் வாந்தி உடனே நிற்க பயன் விளைவிக்கும். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு இரத்த சோகையும் ஏற்படக் கூடும். இதற்கும் மாதுளம் பழச் சாறு உகந்தது. நோய்வாய்ப்பட்ட பின்னர் ஏற்படும் உடல் சோர்வைப் போக்க மாதுளம் பழச் சாறுடன் சிறிதளவு கல்கண்டு சேர்த்து சாப்பிட்டு குணம் பெறமுடியும்.

மாதுளை பிஞ்சை நன்றாக அரைத்து பசைபோலச் செய்து கொண்டு நெல்லிக்காய் அளவு ஒரு டம்ளர் மோருடன் கலந்து குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளைகள் இவ்வாறு செய்தால் வயிற்றுப் போக்கு, பேதி தீரும்.

மாதுளை பூச்சாறு 15 மிலி சிறிதளவு கற்கண்டு சேர்த்து காலையில் மட்டும் குடித்து வர வேண்டும். 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வர இரத்த மூலம் கட்டுப்படும்.

ஒரு டம்ளர் அளவு பழச்சாற்றை தேவையான அளவு கற்கண்டு சேர்த்து காலையில் குடிக்க உடல் குளிர்ச்சி பெறும்.

மாதுளம் பூக்களைச் சேகரித்து உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். இதனை ½ தேக்கரண்டி அளவு  ¼ டம்ளர் தண்ணீரில் இட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண், தொண்டை இரணம், வலி தீரும்.

பல்லுக்கு உதாரணமாக மாதுளை விதைகளைக் கூறுவார்கள். நன்கு முற்றிய மாதுளம் பழத்தை உடைத்தாலே உள்ளே முத்துப் பற்கள் போன்று அழகாக அடுக்கி வைக்கப்பட்டிக்கும் விதைகள் அனைவரையும் அதிசயிக்க வைக்கும். பற்களையும், ஈறுகளையும், பாதுகாக்க மாதுளம் பழம் சாப்பிடுவது மிகவும் அவசியமாகும்.