மானக்கஞ்சாற நாயனார் சிவனடியாருக்காக மணக்கோலத்தில் இருந்த மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த வேளாளர்.
இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகச் சிறப்பிக்கப்படுகிறார். சிவனடியாரின் மேல் இவர் கொண்டிருந்த அன்பினை விளக்கும் இவருடைய கதை இதோ.
சோழநாட்டில் கஞ்சாறு என்னும் ஊரில் மானக்கஞ்சாற நாயனார் அவதரித்தார். அவருடைய முன்னோர்கள் சோழ மன்னரின் படையில் சேனாதிபதியாக விளங்கியவர்கள்.
கஞ்சாறு தற்போது ஆனதாண்டவபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே அமைந்துள்ளது.
சிறந்த வேளாளரான மானக்கஞ்சாற நாயனார் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினார். செல்வ வளம் மிகுந்த இவர் தன்னிடம் இருக்கும் பொருட்கள் யாவும் சிவனடியாரக்குச் சொந்தம் என்று எண்ணுபவர்.
அடியார்களுக்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்பதால், எப்போதும் சிவனடியாருக்கு தொண்டுகள் செய்வதையே மனதில் எண்ணிக் கொண்டிருப்பார்.
மானக்கஞ்சாற நாயனாருக்கு நெடுநாட்கள் குழந்தைப்பேறு வாய்க்கவில்லை. ஆதலால் சிவனாரிடம் குழந்தைப்பேற்றினை வழங்குமாறு கஞ்சாற நாயனார் தம்பதிகள் வேண்டிக் கொண்டே இருந்தனர்.
சிவனருளால் மானக்கஞ்சாறருக்கு பெண் மகள் ஒருத்தி தோன்றினாள். அவளை மிகவும் சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர் கஞ்சறார் தம்பதியினர். மகளும் சிவப்பக்தையாகவே வளர்ந்தாள்.
அவள் திருமணப் பருவத்தை எய்ததும், ஏயர்க்கோன் கலிகாம நாயனார் என்னும் சிவனடியாரை மணமுடிக்க மானக்கஞ்சாறர் எண்ணினார்.
ஏயர்க்கோன் கலிகாமரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவிக்கவே பெரியோர்கள் திருமணத்திற்கான நல்ல நாளை நிச்சயித்தனர்.
திருமண நாளன்று மானற்கஞ்சாறரின் மகள் நன்கு அலங்கரிக்கப்பட்டு அழகான மணமகளாகத் திகழ்ந்தாள்.
மானற்கஞ்சாறரின் பெண்ணை மணம் முடிக்க ஏயர்க்கோன் கலிகாமன் தன் சுற்றத்தாருடன் கஞ்சாற்றினை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இறைவனார் மானற்கஞ்சாறர் சிவனடியார்களிடம் கொண்டிருந்த மாறாத பக்தியை உலகுக்கு உணர்த்த விரும்பினார்.
இறைவனார் மகாவிரதம் பூண்ட சிவனடியார் வேடம் கொண்டு மானற்கஞ்சாற நாயனார் இல்லத்திற்கு வந்தார். மகாவிரதம் என்பது சைவ பேதங்களில் ஒன்று. மகாவிரதம் பூண்டவர்கள் எலும்பணிந்த சிவனாரை தியானிப்பர். எலும்பிலான பல அணிகளையும் வெண்ணீற்றினையும் அணிந்திருப்பர்.
சிவனடியாரைக் கண்டதும் அவரை அன்புடன் வரவேற்றார் மானற்கஞ்சாறர். வாயிலில் வாழைகள் நட்டு, மாவிலை தோணரம் கட்டியதைப் பார்த்ததும் சிவனடியார் மானற்கஞ்சாறாரிடம் “இவ்விடத்தில் சுபநிகழ்ச்சி ஏதேனும் நடைபெறப் போகிறதா?” என்று கேட்டார்.
தன்னுடைய ஒரே மகளின் திருமணம் இன்னும் சற்றுநேரத்தில் நிகழ இருப்பதாகவும், திருமணச் சமயத்தில் சிவனடியாரின் வரவு மகிழ்ச்சி அளிப்பதாகவும் மானற்கஞ்சாற நாயனார் தெரிவித்தார்.
“தங்களுடைய மகளுக்கு சுபம் உண்டாகட்டும்” என்று சிவனடியார் வாழ்த்தினார்.
மானற்கஞ்சாறர் சிவனடியாரிடம் ஆசி பெற மகளை அழைத்து வந்தார். அப்பெண்ணும் சிவனடியாரின் பாதங்களை கீழே விழுந்து வணங்கினாள்.
அவளுடைய நீண்ட அடர்த்தியான கருநிறக் கூந்தலைக் கண்டதும் சிவனடியார் “இவளுடைய கூந்தல் நம்முடைய பஞ்சவடிக்குப் பயன்படும்” என்றார்.
பஞ்சவடி என்பது தலைமுடியால் அகலமாகப் பின்னப்பட்டு மார்பில் அணியும் ஒரு வகைப் பூணூல். இத்தகைய பூணூலை பெரும் தவசிகளே அணிவர்.
சிவனடியாருக்கு தம்மிடம் உள்ள பொருட்களை மறைக்காது வழங்கும் இயல்புடைய மானற்கஞ்சாறர், அடியார் கூறியதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார்.
தன்னுடைய ஒரே மகள் திருமணக் கோலத்தில் இருக்கிறாள் என்பதை மறந்து, வாளால் அவளின் நீண்ட கூந்தலை அடிவரை அறுத்து எடுத்தார் கஞ்சாறர். மானக்கஞ்சாறரின் செயலைக் கண்டதும் அங்கிருந்தோர்கள் எல்லோரும் செய்வதறியாது திகைத்தனர்.
அவர் அறுத்த கூந்தலை கையில் ஏந்தி சிவனடியாரிடம் நீ ட் டினார். சிவனடியார் அவ்விடத்தில் மறைந்து உமையம்மையுடன் அம்மையப்பராகக் காட்சியளித்தார் சிவபெருமான்.
அம்மையப்பரைக் கண்டதும் கஞ்சாறரும் அவருடைய மகளும் நிலத்தில் வீழ்ந்து வணங்கினர். “தொண்டுகள் பல புரிந்து எம்மை வந்து அடைவீராக” என்று வாழ்த்தினார் இறைவனார். இறையருளால் கஞ்சாறர் மகளின் கூந்தல் மீண்டும் வளர்ந்தது.
இந்நிகழ்வு நடந்து முடிந்ததும் ஏயர்க்கோன் கலிகாமன் சுற்றத்தினருடன் திருமணம் புரிய கஞ்சாறரின் இல்லத்திற்கு வந்தார். அங்கிருந்தோர் நடந்தவைகளை கலிகாமரிடம் விளக்கினர்.
சிவனாரின் அருளினைப் பெற்ற நன்மகளே தன்னுடைய மனைவியாக வரப்போகிறாள் என்பதை அறிந்த கலிகாமர், மிகவும் மகிழ்வுடன் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
மானற்கஞ்சாறர் சிவனடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து இறுதியில் சிவத்துள் கலந்தார்.
மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை மார்கழி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
திருமணக் கோலத்தில் இருந்த தன்னுடைய ஒரே மகளின் கூந்தலை அரிந்து கொடுத்த மானக்கஞ்சாற நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘மலைமலிந்த தோள் வள்ளல் மானற்கஞ்சாறன்’ என்று புகழ்கிறார்.