நாடுபோற போக்கபாத்தா
நல்லதுன்னு தெரியல – ஒரு
நியாயதர்மம் புரியல – பெரும்
கேடுவந்து கேவலங்கள்
காடுபோல தழைக்குது – அதில்
கருணைமாட்டி முழிக்குது!
போதைமோகம் ஊதும்நாதம்
போர்கொடியை தூக்குது – பெரும்
பொல்லாங்கை தேக்குது – இங்கு
தீதை நன்று என்றுதின்று
திமிர்உயர்ந்து நிக்குது – எட்டு
திக்குமதில் சிக்குது!
ஆண்டுபல மாண்டுபோச்சு
அடிமைதீயும் அடங்கல – வந்த
அநீதியும் ஒடுங்கல – மத
தாண்டவத்தில் தூண்டுகின்ற
தவறுகளும் கிடங்குல – போய்
தஞ்சமென முடங்கல!
களவுகொலை கற்பழிப்பு
கச்சிதமா நடக்குது – திரை
காட்சியாகி வெடிக்குது – இங்கு
உலவும்முகம் பொய்மனதை
உடுத்திக்கொண்டு திரியுது – நாடு
உருப்படவா போகுது?
புத்தன்நாடு சித்தன்நாடு
புத்திகெட்டு போவதா – சிலர்
வித்தைகாட்ட நோவதா – பெரும்
சத்தம்போட்டு ரத்தம்கேட்டு
பித்துஎன ஆவதா – வன்ம
கத்திகளால் சாவதா?
தோளணைத்து தொல்லைதீர்க்கத்
தோதெவரும் இல்லையே – எல்லாம்
தொற்றுநோயின் பிள்ளையே – இங்கு
கோலெடுத்து ஆள்வோர்க்கு
கொள்கையின்றி போனதே – அவர்
கொழுப்படக்கத் தோணுதே!
தொலைபேசி தோலுரிந்து
அலைபேசி ஆனதே – அதில்
ஆபாசம் பூணுதே – இன்று
வலைதளமே கதிஎன்று
வாய்பிளந்து கிடக்குது – நல்ல
வாழ்வும்அதில் முடங்குது!
கிழக்கில்எழும் சூரியனும்
கீழ்மைஇருள் ஓட்டல – வறுமை
கிடக்குதின்னும் வீட்டில – நாம
வழக்காடி பயனில்லை
வம்பிழுக்கும் வடக்குல – அதன்
வாய்க்கொழுப்ப அடக்கல!
வன்முறையே வாழ்முறையாய்
வந்துநின்னு சிரிக்குது – வாயில்
வடிந்தமிலம் தெறிக்குது – நல்ல
புண்ணியத்தை செய்தபூமி
போக்கும்மெல்ல மாறுது – அது
பொசுங்கும்படி நேருது!
இனிமைதங்கி உள்ளதுன்னு
இழிந்தசெயல் செய்யுறே – தமிழ்
மானத்தையே அழிக்கிறே! – நல்ல
மனிதனென்னும் படடயத்தை
மந்தியாகி கிழிக்கிறே – இனியேனும்
மானம்காப்பாய் மனிதனாகி…
கவிஞர் கவியரசன்
கடம்பத்தூர்
கைபேசி: 9894918250