மாபாதகம் தீர்த்த படலம்

மாபாதகம் தீர்த்த படலம் இறைவனான சோமசுந்தரர் தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகமான பிரமகத்தி தோசத்தை நீக்கி அவனுக்கு நற்கதி அளித்ததைக் குறிப்பிடுகிறது.

மாபாதகம் தீர்த்த படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் இருபத்தி ஆறாவது படலமாக அமைந்துள்ளது.

இளைஞன் செய்த தவறுகளால் ஏற்பட்ட துன்பங்கள், இளைஞனின் மீதான இறைவனின் கருணை மற்றும் கருணைக்காக சிவபெருமான் உமையம்மைக்கு அளித்த விளக்கம் ஆகியவை இப்படலத்தில் விளக்கப்பட்டுள்ளன.

இளைஞன் செய்த தவறுகள்

குலோத்துங்க பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த காலத்தில், அவந்தி நகரில் வேதியர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒழுக்கசீலராகவும், முறையான வாழ்வினை உடையவராகவும் இருந்தார். அவருக்கு ரதியைப் போன்ற அழகான மனைவி இருந்தாள்.

அவர்களுக்கு மகன் ஒருவன் பிறந்தான். அவன் துர்குணம் மற்றும் கெட்ட நடத்தைகள் உடையவனாக இருந்தான். தன்னுடைய பெற்றோர்களிடம் இருந்த செல்வத்தைக் கவர்ந்து சென்று விலை மகளிரிடம் கொடுத்து சிற்றின்பம் அனுபவித்து வந்தான்.

ஒரு கட்டத்தில் மகனுடைய கெட்ட நடத்தையால் அவர்களிடம் இருந்த செல்வ வளம் குன்றவே அவர்கள் குடிசைக்கு வந்தனர். விலை மகளிருக்கு கொடுக்க செல்வம் இன்றி அவன் சிற்றின்பத்திற்காக தனது தாயை நிர்பந்தித்தான். இதனை அறிந்த அவனுடைய தந்தை தன்னுடைய ஊழ்வினை மகன் வடிவில் வருத்துவதாக மிகவும் வருந்தினார்.

தாயை நிர்பந்தித்ததால் தந்தை அவனை கண்டித்தார். இதனை விரும்பாத அவன் தந்தை என்றும் பாராமல் தந்தையைக் கொன்றான். பின் தனது தாயையும், கை கொள்ளும் அளவுப் பொருளையும் எடுத்துக் கொண்ட கற்கள் நிறைந்த காட்டின் வழியே சென்றான்.

அப்போது அங்கிருந்த கொள்ளையர்கள் மகனிடமிருந்த பொருளையும், தாயையும் கவர்ந்து சென்றனர். வேதியனாகிய தந்தையைக் கொன்றதால் மகனுக்கு மாபாதகம் என்கின்ற பிரம்மகத்தி பாவம் பிடித்தது.

அதனால் அவன் உடல் மெலிந்து நோய்வாய்ப்பட்டதோடு மனதளவிலும் பெரிதும் பாதிப்படைந்து அங்கும், இங்குமாக சுற்றித் திரிந்தான்.

இறுதியில் சொக்கநாதர் குடிகொண்டிருக்கும் மதுரையம்பதியை அடைந்தான். அங்கு அவன் திருகோவிலின் அருகே செய்வது அறியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.

இறைதம்பதியர் வேடுவன், வேட்டுவச்சியாக வருதல்

இறைவனான சொக்கநாதர் வேடுவனானகவும், மீனாட்சியம்மை வேட்டவச்சியாகவும் வடிவம் கொண்டு சூதாடிக் கொண்டிருந்தனர். அப்போது இறைவனார் அம்மையிடம் இளைஞனான மாபாதகனையும், அவன் செய்த தவறுகள் குறித்தும் கூறினார்.

பின்னர் இறைவனார் அம்மையிடம் “கள்ளுண்ணலும், சிற்றின்பம் துய்த்தலும் அறிவைக் கெடுக்கும். இவற்றில் கள்ளானது உண்டால் மட்டுமே அறிவைக் கெடுக்கும்.

சிற்றின்பத்தை எண்ணுதலும், பார்த்தலும், கேட்டலும் ஆகியவை தலையில் கொடிய விசம் போல் பரவி அறிவினைக் கெடுத்து விடும். முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி விடும். இறுதியில் அழிவினையும் கொடுக்கும்” என்று கூறினார்.

பின்னர் நோய்வாய்பட்ட இளைஞனிடம் சென்ற இறைவனான வேடுவன் “இளைஞனே, உனக்கு ஏன் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டது?” என்று கேட்டார்.

வேடுவன் கேட்டதும் அவ்விளைஞன் தன்னுடைய தவறுகளை எல்லாம் எடுத்துக் கூறி அவற்றிற்காக அழுதான். இளைஞனிடம் கருணை கொண்ட இறைவனான வேடுவன் “சரி, நீ படும் துன்பத்திற்கு தீர்வு கூறுகிறேன். கேள்.

நீ கையால் பிச்சை எடுத்து தினமும் ஒருபொழுது மட்டும் உண்ண வேண்டும். சிவனடியார்களுக்கு தொண்டு செய். சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து பசுக்களுக்கு அருகம்புல் கொடு. பொற்றாமரைக் குளத்தில் திருகோவில் தினமும் அங்கப்பிரதட்சிணம் செய். இவ்வாறு செய்து வந்தால் உன்னுடைய பழி நீங்கும்.” என்று அருளினார்.

இதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமையம்மையாகிய வேட்டுவச்சி இறைவனாரிடம் “ஐயனே, உலகில் நல்லோர்கள் எத்தனையோ பேர்கள் உள்ளனர். அவர்களுக்கு தாங்கள் அருள்புரியாது, மாபாதகத்தை செய்த இப்பாவிக்கு அருள்புரிவது ஏனோ?” என்று கேட்டார்.

அதற்கு இறைவனார் “நல்லவர்கள் இப்பூமியில் நன்றாக வாழ வேண்டும் எனில் கெட்டவர்கள் திருந்த வேண்டும். மாபாதகம் புரிந்த இவ்விளைஞன் இன்றைக்கு அதற்குரிய தண்டனையும் அனுபவித்து அதனைத் தீர்க்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். அவனையும் காப்பாற்றி நல்வழிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அவனுக்கு அருள்புரிந்தேன்” என்று விளக்கம் கூறினார்.

அதற்கு உமையம்மை “தங்களுடைய திருவிளையாடலைப் புரிந்து கொள்பவர் யார்?. ஆட்டுபவரும், ஆட்டுவிப்பவரும் தாங்களே” என்று கூறினார். பின்னர் இருவரும் மறைந்தருளினர்.

இளைஞனும் இறைவனான வேடுவர் சொன்னபடி நடந்து வந்தான். சிலநாட்களில் அவனுடைய பாவங்கள் நீங்கியதால் நோய் நீங்கப் பெற்றான்.

பின் அந்த இளைஞன் ஒழுக்கமானவனாக மாறி சிவசிந்தனையுடன் வாழ்ந்து இறுதியில் இறைவனின் திருவடியை அடைந்தான்.

மாபாதகம் தீர்த்த படலம் கூறும் கருத்து

முறையற்ற சிற்றின்பம் கொலைக்கு காரணமாகி இறுதியில் அழிவினைத் தரும் என்பதே இப்படலம் கூறும் கருத்தாகும்.

வ.முனீஸ்வரன்

 

முந்தைய படலம் பழி அஞ்சின படலம்

அடுத்த படலம் அங்கம் வெட்டின படலம்

 

 

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.