மாமன்னர் வீர சிவாஜி

இந்திய வரலாற்றில் அதீத துணிச்சல் மிக்க அரசன் என்றவுடன் நம் நினைவில் நிற்பவர் வீர சிவாஜி ஆவார்.

தக்காணம் மற்றும் மகாராஷ்டிரா மலைப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மராத்தியர் என்று அழைக்கப்பட்டனர். தக்காணத்தை ஆட்சி செய்த சுல்தான்களிடம் மராத்தியர்கள் பணியாற்றி வந்தார்.

முஸ்லீம்களின் செயல்பாடுகளால் ஏற்பட்ட வெறுப்பு மற்றும் பக்தி இயக்கம் இவர்களை ஒற்றுமைப்படுத்தியது. பக்தி இயக்கத் தலைவர்களான துக்காராம், ராம்தாஸ், ஏக்நாத் மற்றும் வாமன் பண்டித் போன்றோர் கடவுள் பக்தியையும் ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வையும் இவர்களிடம் தோற்றுவித்தனர்.

இத்தகைய சூழ்நிலையில் வீர சிவாஜி ஒரு மாபெரும் தலைவராகத் தோன்றி மராட்டிய பேரரசை நிறுவினார். மராட்டிய பேரரசின் தலைசிறந்த மன்னராகவும் விளங்கினார். இவர் சிறந்த நிர்வாகியாகவும், ஆட்சியாளராகவும் திகழ்ந்தார்.

தனது தைரியம், துணிச்சல் மற்றும் திறமையான போர்த்திறன் காரணமாக பல கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றி தனது பேரரசை தக்காணத்தையும் பாகிஸ்தானின் சில பகுதிகளையும் சேர்த்து உருவாக்கினார்.

சிவாஜி மகாராஷ்டிரா மாநிலத்தில் பூனாவிற்கு அருகில் உள்ள சிவனேரி கோட்டையில் கி.பி. 1627ஆம் அண்டு ஷாஜி பான்ஸ்லே மற்றும் ஜீஜாபாய் ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். ஷாஜி பான்ஸ்லே பிஜப்பூர் சுல்தானிடம் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றினார்.

ஷாஜி பான்ஸ்லே துக்காபாய் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்ததால் முதல் மனைவி ஜீஜாபாய் மற்றும் மகன் சிவாஜியை புறக்கணித்தார். இருப்பினும் சிவாஜி தனது தாய் ஜீஜாபாய் குரு தாதாஜி கொண்ட தேவ் பராமரிப்பில் வளர்ந்தார்.

குருவிடமிருந்து வாள் பயிற்சி, குதிரையேற்றம், வில்பயிற்சி போன்ற போர்க்கலைகள் மற்றும் நிர்வாகப் பயிற்சிகளைக் கற்றார். சிவாஜி சிறுவயது முதலே இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும், பக்தியையும் நாட்டுப்பற்றையும் தன்தாயிடம் கற்றார். மேலும் சுயராஜ்ஜிய சிந்தனையை தன்தாய் மற்றும் குரு மூலம் தன் மனதில் ஆழப்பதித்துக் கொண்டார்.

அச்சமின்றி எவரையும் எதிர்க்கும் திறன், தன்னம்பிக்கை, வீரம் மற்றும் ஆட்சியாளருக்கான தகுதிகள் ஆகியவை குழந்தைப்பருவம் முதல் இவரிடம் இருந்துள்ளன. தனது 14வது வயதில் சுதந்திர ராஜ்ஜியத்தைப் பற்றி கனவு காணத் துவங்கினார்.

 

சிவாஜியும், பிஜப்பூர் சுல்தானும்

தனது 16வது வயதில் பிஜப்பூர் சுல்தானின் ஆட்சிக்குட்பட்ட டோர்னாக் கோட்டையை கைப்பற்றினார். பின் கொண்டானா, ரெய்காட் கோட்டைகளையும் கைப்பற்றினார். இதனால் கோபமடைந்த பிஜப்பூர் சுல்தான், சிவாஜியின் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்.

பின் சிறிது காலம் அமைதியாக இருந்த சிவாஜி தன் தந்தை சிறைலியிருந்து விடுதலை ஆன பின்பு புரந்தர், ஜாவலி கோட்டைகளையும் கைப்பற்றியதோடு பிஜப்பூர் சுல்தானின் போர்க்கருவிகளையும், ஆயுதங்களையும் கைப்பற்றி தனது படையை பலப்படுத்திக் கொண்டார்.

1659ல் சிவாஜியை அடக்க பிஜப்பூர் சுல்தான், அப்சல்கான் என்பவரை சிவாஜியை உயிருடனோ அல்லது சாகடித்தோ கொண்டு வரும்படி அனுப்பினார். அப்சல்கான் சூழ்ச்சி செய்து சிவாஜியைக் கொல்ல நினைத்தார். அப்சல்கானின் சூழ்ச்சியினை தெரிந்து கொண்டு அவரை சந்திக்க சிவாஜி சென்றார்.

சிவாஜியும் அப்சல்கானும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டார். அப்பொழுது அப்சல்கான் சிவாஜியின் கழுத்தை நெரிக்க முற்பட்டார். சிவாஜி சட்டென்று தன்பையில் மறைத்து வைத்திருந்த புலி நகத்தால் அப்சல்கானை கிழித்துக் கொன்றார். இதனால் சிவாஜியின் பெருமையும், புகழும் மேலும் அதிகரித்தது. பின் 1659 ஆம் ஆண்டு டிசம்பர் 28ல் கோல்காபூரில் நடைபெற்ற போரில் மராத்தியப் படை பிஜப்பூர் சுல்தான் படையை தோற்கடித்தது.

 

சிவாஜியும், முகலாயர்களும்

1657ல் வீர சிவாஜி முகலாயப் பேரரசின் ஆட்சிப் பகுதிகளைத் தாக்கினார். முகலாய மன்னராக 1658ல் ஒளரங்கசீப் பொறுப்பேற்றப்பின் தனது தக்காண ஆளுநர் செயிஸ்டகானை சிவாஜியை அடக்கும் பொருட்டு 1660ல் பெரும் படையுடன் அனுப்பினார். செயிஸ்டக்கான் பூனாவில் முகாமிட்டிருந்தார். இதனை அறிந்த சிவாஜி ஒரு நாள் இரவில் பூனாவின் மீது திடீர் தாக்குதல் நடத்தினார். ஆனால் செயிஸ்டகான் உயிர்த் தப்பினார். இந்நிகழ்வின் போது அவரது கட்டைவிரல் துண்டிக்கப்பட்டது.

ஒளரங்கசீப் சிவாஜியை அடக்க இரண்டாவது முறையாக ராஜா ஜெய்சிங் என்பவரை அனுப்பினார். முகலாயப்படை ராஜா ஜெய்சிங்குடன் சேர்ந்து சிவாஜியை சூழ்ந்து கொண்டது. இந்தச் சூழ்நிலையில் வேறுவழியின்றி அமைதி உடன்படிக்கையில் கையொப்பமிட தயாரானார். இவரது முயற்சியால் 1665ல் புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி சிவாஜி ஒளரங்கசீப்பை சந்திக்க ஒப்புக்கொண்டார்.

தனது மகன் சாம்பாஜியுடன் ஒளரங்கசீப்பை சந்திக்க கிபி.1666ல் ஆக்ரா சென்றார். அங்கு அவமானப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பழக்கூடை ஒன்றின் மூலம் சிறையிலிருந்து தப்பினார். ஒளரங்கசீப்பால் சிவாஜியை மீண்டும் கைது செய்ய இயலவில்லை.

ஒளரங்கசீப் சிவாஜியை மலை எலி, தக்காண புற்றுநோய் என்று அழைத்தார். 1664,1670 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை சூரத்தை கொள்ளையடித்தார். 1670ல் முகலாய கடற்படையைத் தாக்கி பல பகுதிகளை கைப்பற்றினார். போர்க்களத்தில் கொரில்லா போர் முறையைப் பயன்படுத்தினார். இது முறைசாரா போர் முறை ஆகும். மலைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டு திடீரென எதிரிகளை தாக்கும் முறை ஆகும்.

கி.பி. 1674ஆம் ஆண்டு ரெய்கார் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676ல் முடிசூட்டு விழாவிற்கு பிறகு ஏற்பட்ட நிதி நெருக்கடியால் தென்னிந்தியா மீது படையெடுத்து வேலூர், செஞ்சி கோட்டைகளையும், ஆற்காட்டையும் கைப்பற்றினார். இவரது பேரரசு மைசூர், கொங்கன், மகாராஷ்டிரா வரை பரவியிருந்தது.

 

சிவாஜியின் நிர்வாகம்

சிவாஜி ஒரு சிறந்த நிர்வாகி. மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டார். நிர்வாகத்தில் தனக்கு உதவி செய்ய 8 பேர்களைக் கொண்ட அமைச்சரவை ஒன்றை அமைத்தார். இது அஷ்டப்பிரதான் என்று அழைக்கப்பட்டது. 1.பீஷ்வா (பிரதம அமைச்சர்), 2. மந்திரி (காலமுறை அமைச்சர்), 3 சச்சிவா (உள்துறை அமைச்சர்), 4. சுமந்த் (வெளியுறவு அமைச்சர்), 5.சேனாதிபதி (இராணுவ அமைச்சர்), 6.அமத்தியா(நிதி அமைச்சர்), 7.பண்டிட்ராவ் (சமயத்தலைவர்), 8. நியாயதீஷ் (நீதித்துறை).

ஒவ்வொரு அமைச்சரும் ஒரு துறைக்கு பொறுப்பாவார். பேரரசு பல மாநிலங்களாக அல்லது பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவை மேலும் பர்னாக்களாகவும், கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டன. சிவாஜியின் பேரரசு சுயராஜ்ஜியம் என்று அழைக்கப்பட்டது.

 

வருவாய்த்துறை நிர்வாகம்

இவர் ஜமீன்தாரி முறையை ஒழித்தார். விவசாயிகளிடம் நேரிடையான தொடர்பை ஏற்படுத்தினார். நிலங்கள் கவனமாக அளக்கப்பட்டு நிலத்தீர்வை மேற்கொள்ளப்பட்டது. விளைச்சலில் 2/5 பங்கு (ஐந்தில் இரண்டு பகுதி) அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை தானியமாகவோ, பணமாகவோ வழங்கலாம். பஞ்சம் மற்றும் அவசரக் காலங்களில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டது.

நிலவரித்திட்டம் அக்பர் காலத்தில் ராஜா தோடர்மால் பின்பற்றிய முறையை ஒட்டி அமைந்திருந்தது. இது தவிர சுங்கத் தீர்வை, தொழில்வரி வசூலிக்கப்பட்டன. சவுத், சர்தேஷ் முகி என்ற இரண்டு முக்கிய வரிகள் வசூலிக்கப்பட்டன.

 

நீதித்துறை நிர்வாகம்

நீதித்துறையில் இந்து மத சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. கிராமங்களில் வழக்குகளை கிராமப் பஞ்சாயத்து சபை தீர்த்துவைத்தது. பட்டேல் என்ற அதிகாரி குற்றவியல் வழக்குகளை விசாரித்தார். அனைத்து குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குகளின் மேல் முறையீட்டினை நியாயதீஷ் என்ற அதிகாரி விசாரணை செய்தார். இவர் அமைச்சரவையில் ஓர் உறுப்பினர் ஆவார்.

 

இராணுவ நிர்வாகம்

இவர் ஒரு சிறந்த வீரராகவும், இராணுவத் தளபதியாகவும் விளங்கினார். இவர் கட்டுப்பாடான நிரந்தர ராணுவத்தைப் பராமரித்தார். இவரது இராணுவத்தில் காலாட்படை, குதிரைப்படை, பீரங்கிப்படை, யானைப்படை, ஒட்டகப்படை மற்றும கப்பற்படை இடம் பெற்றிருந்தன. குதிரைப்படை முக்கிய படைப்பிரிவாக கருதப்பட்டது.

இரணுவ நிர்வாகத்தில் கோட்டைகள் முக்கிய அங்கம் வகித்தன. மராத்தியர்கள் கோட்டைகளை தாயாகக் கருதினர். வீரர்களுக்கு சம்பளமாக பணம் வழங்கப்பட்டது. வீரர்கள் இறந்த பிறகு அவர்களது குடும்பத்தினரும் பராமரிக்கப்பட்டனர். இராணுவ முகாமில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை.

ராணுவம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லும் போது விளைச்சலுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது. வீரர்கள் பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரைக் கொடுமைப்படுத்தக்கூடாது என கட்டளையிடப்பட்டது.

வலிமையான கப்பற்படை சிவாஜியிடம் இருந்தது. இதனால் அவர் இந்திய கப்பற்படையின் தந்தை எனப் போற்றப்படுகிறார். சிவாஜி தன் அரசில் பணிபுரிய எல்லோருக்கும் சம உரிமை அளித்தார். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரும் இந்நாட்டின் பிள்ளைகள் என்று கருதி எல்லா துறைகளிலும் எல்லோருக்கும் வாய்ப்பளித்தார்.

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய வீர சிவாஜி ஏப்ரல் 31, 1680ல் தன்னுடைய 53வது வயதில் உடல்நலமின்றி காலமானார்.

சிவாஜி முறையான படிப்பறிவு அற்றவராக இருப்பினும் நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை எளிதில் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு கண்டார். வலிமையான மராத்திய பேரரசை உருவாக்கியது இவரது மாபெரும் சாதனையாகும்.

தனது தந்திரமான நடவடிக்கைகள் மூலம் மராட்டிய பேரரசை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றார். மேலும் தலைவனானவன் எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையிலும் தைரியத்தைக் கைவிடாது பிரச்சனைகளை கையாள வேண்டும் என்பதை வீர சிவாஜி மூலம் உணரலாம்.