மலையனூர் என்ற ஊரில் ஒரு மாமியாரும் மருமகளும் இருந்தார்கள். மருமகள் மிகவும் சோம்பேறி. அதோடு அவளின் செயல்பாடு மிகவும் மந்தமாகவே இருந்தது. அவளுக்கு உலக அறிவு மிகவும் குறைவாகவே இருந்தது.
பிறர் சொல்லும் விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்துச் சரியாக செய்யும் பழக்கம் அவளுக்கு அறவே இல்லை. இந்த நிலையில் அவளுடைய காது கேட்கும் சக்தியும் சற்று மந்தம்.
ஒருநாள் மாமியார் மருமகளை அழைத்து “இன்று கீரைக்கறி செய்ய வேண்டும். அதனால் கொல்லைப்புறத்துக்குச் சென்று கீரையைப் பறித்துவா. கீரையைப் பறிக்கும்போது தலையைத் தட்டி விட்டுப் பறி” என்று கூறினாள்.
கீரையைப் பறிக்கும்போது அடித்தண்டைப் பறிக்காமல், கீரையின் தலைப்பகுதியை மட்டும் கிள்ளி வரவேண்டும். இதைத்தான் மாமியார் ‘கீரையைப் பறிக்கும் போது தலையைத் தட்டிவிட்டுப் பறி’ என்று கூறினாள்.
ஆனால் கீரைப் பாத்திக்குச் சென்ற மருமகளோ தன்னுடைய தலைமுடியைக் கீரையின் மீது நன்றாகத் தட்டிவிட்டு, பிறகு தலைமுடியை முடிந்து கொண்டு கீரையைப் பறித்து வீட்டுக்குள் சென்றாள்.
மருமகளின் கீரைச் சமையலை ருசித்துச் சாப்பிட்ட மாமியார் அதில் தலைமுடி ஏராளமாக இருப்பதைப் பார்த்து “கீரையில் நிறைய முடி இருக்கிறதே ஏன்?” என்று கேட்டாள்.
“அத்தை நீங்கள் சொன்ன மாதிரி கீரையின் மீது என் தலைமுடியை நன்றாகத் தட்டி உதிர்த்துவிட்டுத்தான் கீரையைப் பறித்தேன். அதனால்தான் இப்படி இருக்கிறது போலிருக்கிறது” என்று அப்பாவியாக பதிலளித்தாள்.
“அடி அசடே! இப்படியும் ஒரு பெண் இருப்பாளா?” என்று மாமியார் மருமகளை கடிந்து கொண்டாள்.
மற்றொரு நாள் மருமகளை அழைத்து “சீக்கிரமாக சோறு பொங்கு” என்று கூறினாள்.
மாமியார் சொன்னதைக் கேட்ட மருமகள் சமையல் அறையை நோக்கி நடந்தாள். உடனே அவளை மாமியார் அழைத்து “எவ்வளவு அரிசி போட வேண்டும் என்று கேட்காமல் போகிறாயே? ஒரு நாழியும், உழக்கும் உலையில் போட்டுப் பொங்கு. கவனம்” என்று சொல்லி அனுப்பினாள்.
சிறிது நேரம் கழித்து ‘மருமகள் சோறு எப்படி பொங்குகிறாள்?’ என்பதை அறிந்து கொள்ள அடுப்படிக்குச் சென்றாள் மாமியார்.
அடுப்பில் இருந்த உலைப்பாத்திரத்தில் நாழியும் உழக்கும் கொதித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். மருமகளின் முட்டாள்தனத்தை எண்ணித் தலையில் அடித்துக் கொண்டாள்.
வேறு ஒருநாள் சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு வேண்டிய பக்குவங்களை எல்லாம் மாமியார் தன் மருமகளுக்குச் சொல்லிக் கொடுத்தாள். பொங்கலுக்குத் தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துக் கொடுத்துச் சமையலறைக்குள் அவளை அனுப்பி வைத்தாள்.
நீண்ட நேரம் கழித்து தீய்ந்த வாசனை வருவதைக் கண்டு மாமியார் பதறிக் கொண்டு உள்ளே ஓடினாள்.
அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தீய்ந்து கருகிக் கொண்டிருந்தது.
“சர்க்கரைப் பொங்கல் பக்குவமானவுடனே நீ ஏன் அடுப்பைவிட்டுப் பாத்திரத்தை இறக்கவில்லை?” என்று மாமியார் மருமகளைக் கடிந்து கொண்டாள்.
அதற்கு மருமகள் “அத்தை என்னை குறை சொல்லாதீர்கள். எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொடுத்த நீங்கள் பக்குவமானவுடனே அடுப்பைவிட்டு இறக்க வேண்டும் என்று ஏன் சொல்லவில்லை?” என்று மாமியாரை பரிதாபமாகக் கேட்டாள்.
“உன்னைப் போன்ற மருமகளை வைத்துத் தொடர்ந்து நான் குடும்பம் நடத்தினால் கிறுக்கு பிடித்து அலைய வேண்டியதுதான்!” என்று மாமியார் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
இதைப் பார்த்த மருமகள் பூரிக்கட்டையை மாமியாரிடம் கொடுத்து “அத்தை உங்கள் தலைவலிக்கு இதால் அடித்துக் கொள்ளுங்கள்” என்று கொடுத்தாள்.
மாமியாருக்கு மயக்கமே வந்து விட்டது.