மாம்பழம்

முக்கனிகளில் முதல் கனி மாம்பழம். இந்தியாவில் மாம்பழமே பழங்களின் ராஜா என்றழைக்கப்படுகிறது. இது உலகின் பிரபலமான பழங்களில் ஒன்று.  

அதன் தனிப்பட்ட சுவை, மணம் மற்றும் அதன் மருத்துவ குணங்களின் காரணமாக சூப்பர் பழம் என்ற அந்தஸ்தை இப்பழம் பெற்றுள்ளது. உலகில் அதிக அளவு விளைவிக்கப்படுவதும், உண்ணப்படுவதும் என்ற பெருமை இப்பழத்தைச் சாரும்.

மாம்பழம் ஆண்டின் சில குறிப்பிட்ட பருவங்களில் (ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை) மட்டும் கிடைக்கின்றது.

மாமரம் வெப்பமண்டலங்களில் நன்கு செழித்து வளர்ந்து நிறைய பலன்களைத் தர வல்லது. இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு முதலில் இந்தியாவின் இமயமலைச் சரிவுகளில் பயிர் செய்யப்பட்டு பின் உலகெங்கும் பரவியது.

தற்போது இது உலகெங்கும் பரவலாக பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் இம்மரம் வீட்டுத் தோட்டம் முதல் மாந்தோப்பு வரை பயிர் செய்யப்படுகிறது.

மாங்கிபெரா இண்டிகா என்பதன் இதன் அறிவியல் பெயராகும்.இப்பழம் 5முதல்15 செமீ நீளத்திலும், 4முதல்10 செமீ உயரத்திலும் சுமார் 150முதல்2500 கிராம் எடையிலும் உருண்டை அல்லது நீள்உருண்டை வடிவில் காணப்படுகிறது.

பழுத்த பழத்தின் மேற்புரம் மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் காணப்படுகிறது. உள்ளே வழுவழுப்பாக மஞ்சள் நிற சதைப்பகுதியைக் கொண்டுள்ளது. பழத்தின் உள்ளே சிறுநீரக வடிவ கொட்டைப்பகுதி காணப்படுகிறது.

மாம்பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் நார்ப்பகுதியையும் கொண்டுள்ளது. உயர்ரக மாம்பழங்களில் புளிப்பு சுவையும், நார்பகுதியும் குறைந்து காணப்படுகின்றன.

நட்பின் அடையாளமாக மாம்பழக்கூடைகளை ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்கும் வழக்கம் இந்தியாவில் உள்ளது.

மாம்பழங்கள் மற்றும் மாஇலைகள் சமயச்சடங்குகள், திருமணங்கள், பொதுக்கொண்டாட்டங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

மாமரப்பட்டை, தோல், இலைகள் மற்றும் பழங்கள் நூறாண்டுகளாக நாட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு மாம்பழம் தேசியப் பழமாக உள்ளது.

 

மருத்துவ பயன்கள்

மாம்பழத்தில் விட்டமின்கள் ஏ,கே,ஈ,சி,நியாசின்,பைரிடாக்ஸின்,தயாமின்,ரிபோபுளோவின்,ஃபோலேட் ஆகியவையும், தாதுஉப்புக்களான கால்சியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு ஆகியவையும், நார்சத்துகள், தாவரச் சத்துக்களான பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின் ஆகியவையும் காணப்படுகின்றன.

 

புற்று நோய்களைத் தடுத்தல்

க்யூயர்சிடின், ஐசோக்யூயர்சிடின், ஃபிஸ்டின், காலிக் போன்ற ஆன்டி ஆக்ஸிஜென்ட்கள் மாம்பழத்தில் உள்ளன.இவை பெருங்குடல், மார்பகம், இரத்தம் மற்றும் இனப்பெருக்க உறுப்பு ஆகியவற்றில் உண்டாகும் புற்றுநோய்களைத் தடுக்க வல்லது.

கொலஸ்ராலைக் குறைக்க மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்க
இப்பழத்தில் உள்ள விட்டமின் சி, நார்சத்து மற்றும் பெக்டின் ஆகியவை இரத்தத்தில் கொலஸ்ராலின் அளவினைக் கட்டுப்படுத்துகின்றன.

இப்பழத்தில் மிகுதியாக உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு இதயத்துடிப்பையும் சரிசெய்கிறது.

 

சரும பராமரிப்பு

மாம்பழத்தினை உண்பதினாலும், தோலில் பூசிக் கொள்வதினாலும் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் சருமத்தில் காணப்படும் துளைகளின் அடைப்பினை நீக்கி சரும சுவாசத்திற்கு வழிவகுக்கிறது.

மேலும் முகத்தில் இப்பழத்தினைப் பூசும்போது முகத்தில் உள்ள பருக்களை மறையச் செய்கிறது.

 

கண் பார்வைக்கு

தினசரி விட்டமின் ஏ தேவையில் 25 சதவீதத்தை ஒரு கப் நறுக்கிய மாம்பழத்துண்டுகள் பூர்த்தி செய்கின்றன. இந்த விட்டமின் ஏ கண்ணின் ஆரோக்கியத்திற்கு தேவை. எனவே இப்பழத்தை உட்கொள்வதால் கண்பார்வை தெளிவடைதல், மாலைக்கண் நோய் மற்றும் கண் உலர்ந்து போதல் ஆகியவை குணமடைகின்றன.

 

உடலின் கார இருப்பை பராமரிக்க

இப்பழத்தில் காணப்படும் டார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் போன்றவை உடலின் கார இருப்பை பராமரிக்க உதவுகின்றன.

 

சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு

5-6 மாவிலைகளை நீரில் கொதிக்க வைத்து இரவு முழுவதும் அந்த நீரினில் இலைகளை ஊற வைத்து பின் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படும்.

 

உணவு செரிமானத்திற்கு

இப்பழத்தில் புரதத்தினை உடைக்கக் கூடிய என்சைம்கள் காணப்படுகின்றன. இவை உணவு முழுமையாக செரிப்பதற்கு உதவுகின்றன. இப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்தும் செரிமானத்தினை எளிதாக்குகின்றது.

 

உடல் சூட்டினைக் குறைக்க

மாம்பழத்துண்டுகளுடன் சிறிதளவு நீர் மற்றும் தேனினைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சாறாக்கி அருந்தினால் கோடைகாலத்தில் வெயிலினால் ஏற்படும் உடல் சூடு குறையும்.

 

நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்க

இப்பழத்தில் அபரிமிதமான அளவில் உள்ள விட்டமின் ஏ, சி மற்றும் 25 வகையான கரோடினாய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

குரங்குகள் பச்சை மாங்கொட்டையினை உண்ணுகின்றன. இவை அவற்றிற்கு ஆற்றலையும், மரம் விட்டு தாவுவதற்கு வலிமையையும் வழங்குகின்றன.

 

மாம்பழம் உண்ணும் முறை

மாம்பழத்தினை நன்கு நீரில் கழுவி தோலுடன் நறுக்கியோ அல்லது கடித்தோ சாப்பிட வேண்டும். இப்பழத்தோலில்தான் அதிகளவு விட்டமின் சி உள்ளது.

 

மாம்பழத்தை தேர்வு செய்யும் முறை

மாம்பழத்தை வாங்கும்போது பழத்தை அழுத்தினால் மிருதுவாகவும், மாம்பழ வாசனையுடனும் இருக்க வேண்டும்.

நன்கு பழுத்த பழத்தினை குளிர்பதனப்பெட்டியில் வைப்பதால் இரு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ஆனால் பழுக்காதவற்றை குளிர்பதனபெட்டியில் வைக்கக் கூடாது.

மாம்பழத்தினை அதிகமாக பயன்படுத்தும்போது அவை உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கும். வாந்தியை உண்டாக்கக் கூடும். எனவே அவற்றை அளவாகப் பயன்படுத்த வேண்டும்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மாம்பழத்தினை நாமும் அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்களுக்காக அதனை அளவோடு உண்போம்.

-வ.முனீஸ்வரன்

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.