மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும்.
உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
திருப்பாவை பாடல் 5
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனதினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
விளக்கம்
மாயவித்தைகள் செய்பவனும், நிலைத்த புகழ்பெற்ற வடமதுரையில் பிறந்தவனும், மிகத்தூய்மையான பெரும் நீரினைக் கொண்ட யமுனை நதிக்கரையில் கோபியர்களுடன் விளையாடியவன் கண்ணன்.
அவன் ஆயர்குலத்தில் வந்து தோன்றிய இரத்தின தீபம் போன்றவன். தாயாகிய யசோதையின் பெற்ற வயிற்றைப் பெருமைப்படுத்திய தாமோதரன் என்ற பெயரினைக் கொண்டவன் கண்ணன்.
நாம் தூய்மையான மனத்தோடு அவன்முன் சென்று மணமுள்ள மலர்களை அவனின் திருவடிகளில் இட்டு வணங்குவோம்.
வாயினால் அவனுடைய புகழினைப் பாடி மனதினால் அவனை சிந்தித்து வழிபடுவோம்.
அவ்வாறு செய்தால் இதுவரை நாம் செய்த பிழைகள் யாவும் போகும். இனிமேல் நம்மிடம் வரவிருக்கும் தீயவினைகளும் நம்மை நெருங்காது.
அவைகள் யாவும் தீயில் இட்டப் பஞ்சுபோல் பொசுங்கி தூசியாக மறைந்து விடும்.
இறைவன் மிக எளியவன். அவன் நம்மிடமிருந்து நிறைய எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்ப்பது நமது தூய மனதை மட்டும்தான்.
நம் மனதைத் தூய்மைப்படுத்த அவனே ஒரு வழியையும் தருகிறான். அதுதான் அவனுடைய திருப்பெயர்.
இறைவனின் திருப்பெயர் நம் மனதில் நுழையும்போது நம்முடைய தீய எண்ணங்கள் தானாகவே நம் மனதிலிருந்து வெளியேறி விடுகின்றன.
எனவே கண்ணனின் திருப்பெயரினை இடைவிடாது சொல்லிக் கொண்டே இருங்கள்.
நம்மால் நம்மைப் பெற்ற தாய் மற்றவர்களால் புகழப்பட வேண்டும். அதுவே நம்முடைய தாய்க்கு நாம் செய்யும் கடமையாகும்.
குழந்தைகள் பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பதை ஆண்டாள் இப்பாசுரத்தில் கூறுகிறார்.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!