மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்

மாயாறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும் ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.

நீலகிரி மலை மாவட்டத்தில் உதகை அருகே பைக்காரா என்ற நீர்ப்பிடிப்பு பகுதியில், பெய்கின்ற நீரெல்லாம் திரண்டு ஓட ஆரம்பிக்கிறது.

கோடை காலமான‌ மே  இறுதியில், தென்மேற்கு பருவமழை தொடங்க, கன்னியாகுமரியில் ஆரம்பிக்கும் மேகக்கூட்டங்கள் மேற்கு மலைத்தொடர் முழுவதும் பரவ, விண்ணில் கோர்க்கும் நீர்த்துளிகள் மண்ணில் மாலையிட  ஆரம்பிக்கிறது.

 

 

டி.ஆர்.பஜார், நடுவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்துவரும் நீரையும் வாரி அணைத்துக்கொண்டு, பள்ளத்தாக்கில் விழுந்தும், சில்வர் கிளெவ்ட் தேயிலை- காப்பித் தோட்டங்களுக்கிடையே வழிந்தோடியும் தொரப்பள்ளி என்ற இடத்தை கடக்கிறது.

 

அதைப் போலவே கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை, பாடந்துரை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெய்கின்ற மழை நீரால் உற்பத்தியாகும் ஆறு, சேமுண்டி.

சேமுண்டி, புத்தூர் வயல் என்ற கிராமம் வழியாக கடந்து தொரப்பள்ளி வந்து நெல்லிக்கரை ஆறாக பெயர் பெற்று, முதுமலை புலிகள் காப்பக வனத்திற்குள் நுழைகிறது.

பின் சீத்திரி என்ற இடத்தில் ஒம்பட்டாவிலிருந்து வரும் ஆறுடன் இணைந்து பிதரள்ளா என்ற இடத்தில் மாயாறு ஆற்றில் கலக்கிறது.

பைக்காராவிலிருந்து வரும் மாயாறு, தொரப்பள்ளியை கடந்து பாம்பக்ஸ் என்ற வனப்பகுதியில் வந்தவுடன், பாம்பை போல வளைந்து நெளிந்து செல்லும் அழகே தனிதான்.

 

இந்நதியில், கெண்டை, ஆறல், ஜிலேபி, கல்குறி கெளுத்தி மீன்களும், செம்மீன்களும் நிறைய காணப்படுகின்றன. இந்நதியில் மட்டுமே நீர்நாய்கள் நிறைய காணப்படுகின்றன. தற்போது முதலைகளும் இருப்பதாக அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அவ்விடங்களில் கொய்யா மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு பழக்காலத்திலும் ஏராளமாக காய்த்து குலுங்கும்.

கிளிகளுக்கும், இருவாச்சி உள்ளிட்ட‌  பல பறவைகள், குரங்குகள், மான்கள், யானைகள் என எல்லா ஜீவராசிகளுக்கும் இம்மரங்கள் உணவைத் தருகின்றன.

ஆற்றின் இருமருங்கிலும் நூற்றாண்டுகளை தொட்ட, பல காட்டு மாமரங்கள் வானுயர்ந்து காணப்படுகின்றன.

மாமரங்கள் பூத்துக் குலுங்க தொடங்கிவிட்டால் நீரெங்கும் பூக்கோலமிட்டது போலும், மாமரப்பாலும் படர்ந்து நகர்ந்த வண்ணம் ஓடிக் கொண்டிருக்கும்.

 

மழைக்காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, கர்நாடக எல்லையிலுள்ள கக்கநள்ளா ஆற்றோடு, உறவாடி எல்லை ஓரமாக மாயார் என்ற இடத்தை கடக்கிறது.

பூதநத்தம் என்ற பகுதியில் சிங்காராவிலிருந்து வரும் மரவகண்டி ஆறும், சோலூர்- பொக்காபுரம் மலைப் பகுதியிலிருந்து வரும் மாவனல்லா ஆறும், நீலகிரி மலைகளில் கல்லட்டி மலைச்சரிவும், ஒரு பிரதான நீர்ப்பிடிப்பு பகுதியாகும்.

உதகை தலக்குந்தாவிலிருந்து கல்லட்டிப் பகுதியில் பொழிகின்ற மழை நீர் அருவியாய் கீழே விழுந்து 36 கொண்டை ஊசி வளைவுகளைத் தாண்டி, சமவெளிப் பகுதியை அடைந்ததும், ஆறாக ஓடி, சீகூர் ஆறாய் பெருக்கெடுத்து பால்தட்டி நீர்வீழ்ச்சிக்கு கீழ்ப்புறம் கலக்கிறது.

பின் மங்கலப்பட்டி என்ற இடத்தை கடந்து, அல்லிராணி கோட்டை என்ற இடத்திற்கு சற்றுத் தொலைவில் வளைந்து திரும்பி, தெங்குமறஹடா என்ற வனகிராமம் அருகே பரிசல்துறை பகுதி வழியாக, பரந்து விரிந்த பவானிசாகர் அணையில் பவானி ஆறுடன் கலக்கிறது.

பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆறாக சத்தியமங்கலம், கோபி என ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிக‌ளில் குடிநீர்த் தேவையையும், மனிதஇனம் தழைத்தோங்கச் செய்யும் விவசாயத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

அங்கிருந்து காவிரியுடன் கை கோர்த்து கரூர், திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டத்தின் விவசாய நிலத்தை குளிர்வித்துதும் கடலில் சென்று கலக்கிறது, மாயாறு எனும் மாய நதி…

மாயாறு

வற்றாத ஜீவ நதியாகிய இது, வெள்ளம் எப்போது பெருக்கெடுத்து ஓடும், எப்போது அமைதியாய் சலசலத்து ஓடும் என்று யாருக்கும் தெரியாத மாய நதியாகும். அதன் காரணமாகவே மாயாறு என பெயர் பெற்றதாக தகவல் அறிந்தேன்.

நான் பிறந்து வளர்ந்து விபரம் அறிந்த நாள் முதல், என் தாய்த் துறையில் பணியில் சேர்ந்து இடம் மாறும் வரை, இம்மாயாறு நதியிலே நீந்தி வளர்ந்தவன் என்பதில் பெருமிதம் கொண்டு, இந்த கட்டுரையை எனக்கு தெரிந்த வரையில் பதிவு செய்துள்ளேன்.

என்றும் இயற்கை பணியில்,

ப. ராஜன்
வனவர்
ஆனைமலை புலிகள் காப்பகம்
பொள்ளாச்சி வனச்சரகம்

 

 

5 Replies to “மாயாறு – ஒரு மாய நதியின் பயணம்”

  1. வனமே வீடாகவும், வானமே கூரையாகவும் அனைத்து படைப்புகளையும் தன் உயிராகக் கருதி, தன்னையும் தன்னை சார்ந்தவைகளையும் உணர்வோடு ஒப்பிட்டு எழுதிய எழுத்து நடை அழகு.

    கருத்து பாவனைகளை வாழ்ந்து கொண்டிருக்கும் வன உயிரினங்களோடு ஒப்பிட்ட ஆதங்க எழுத்துக் கோர்வைகளை படித்து ஆழ்ந்தேன்.

    எங்க அய்யா உங்களின் மெய்யியலான கருத்துணர்வை கண்டு மெய் சிலிர்க்கிறேன்.

    வாழ்ந்துதான் பார்க்க வேண்டும்

    மனித நேயத்தோடு

    வாழத்தான் பிறந்தோம்

    அனைத்து உயிரும் நம் உயிராகக் கருதி!

    வாழ வைப்போம் வாங்க

    நம் வனம் நம் வீடாக…

தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.